குல தெய்வ கோவில் விழாவில் மிகப்பெரிய யாகம் நடத்துகையில் கண்டிருக்கிறேன் . யாக குண்டத்தை சுற்றி ,பிராமணர்கள் அமர்ந்து மந்திரங்களை ஜபித்தபடி தொடர்ந்து ஆகுதி செய்து கொண்டிருப்பார்கள் .பல நூறு நிமிடங்கள் ஒரு நடனம் போல ஒத்திசைவுடன் ,ஒழுங்கு மாறாமல் சென்று கொண்டிருக்கும் .
கொஞ்சம் அவர்களுக்கு பின்னால் பார்த்தால் ,ஒவொரு பிராமணருக்கும் பின்னால் அருகில் ஒருவர்,அந்த ஒருவருக்கு பின்னால் இருவர் என , தடம் தவறிய எறும்புகளின் பரபரப்புடன் இயங்கி ,ஆகுத்திக்கான அனைத்து விஷயங்களையும் ,எண்திசைகளில் இருந்தும் பெற்று அளித்துக்கொண்டு இருப்பார்கள் .
போர் சித்தரிப்பில் ,போரின் நாயகர்கள் நிலையும் ,அவர்களை அந்த இடத்தில் இருத்தும் சுற்றி உள்ளவர்கள் நிலையும் அது போலவே இருக்கிறது . போர் துவங்குவதற்கு முன் சித்தரிக்கப்பட்ட மருத்துவ மனை நிலைகள் தன் இயல்பாக ஒருவரை ஒருவர் வெட்டி வீழ்த்தும் போது உள்ளே எழுகிறது . இனி இரவுகள் எப்படி இருக்கும் ? ஒரு பக்கம் எரிந்து கொண்டிருக்கும் பிணங்கள் ,மறுபக்கம் வலியில் முறுகும் மருத்துவமனை கூடாரங்கள் . நாளை எனும் நாளை குருதி வஞ்சத்துடன் எதிர் நோக்கும் மிஞ்சி உள்ளோர் .எங்கோ தொலைவில் கண்ணீருடன் காத்திருக்கும் பெண்கள் .
ஜெ .என்னை நினைக்க எனக்கே பீதியாக இருக்கிறது .ஒவ்வொரு கணமும் பீஷ்மருக்குள் நின்று ,நானே ததும்பி தவித்தேன் ,சொட்டு சொட்ட்டாக குருதித் துளிகளை சுவைத்தேன் .இக் கணம் நான் உள்ளே அனுபவித்துக் கொண்டிருக்கும் அமைதியை விளக்கவே இயலாது .
கடலூர் சீனு