ஜெ
உலக இலக்கியத்தில் வெவ்வேறு நூல்களில் போரும் காமமும் ஒன்றாகச் சொல்லப்பட்டுள்ளன. இரண்டு உடல்கள் கலப்பது. கண்மூடித்தனமான வெறி. மனிதனின் ஆதி இச்சை வெளிப்படுவது என பொது அம்சங்கள் பல. வெண்முரசில் மல்யுத்தத்திலும் போர்க்களக்காட்சியிலும் பல இடங்களில் அந்த உவமை வந்துள்ளது. மீண்டும் செந்நாவேங்கையில் இப்படி வருகிறது.
ஒருவர் இருவரென பிரிந்து நின்றாடும் ஆடல் போரிலன்றி மானுடரால் இயலாது. போரென்பது உடல்உதறி உள்ளங்கள் எழுந்த ஒரு வெளியில் ஒன்றாகி நின்றிருக்கும் தருணம்.மேலும் மேலும் என்று அவர்கள் சுற்றிவந்தனர். பெருங்காதலுடன் காமம் கொண்டாடுபவர்களின் முத்தங்கள்போல அம்புகளால் மொய்த்துக்கொண்டார்கள்.
போரை ஏன் மனிதன் மீண்டும் மீண்டும் விரும்புகிறான் என்பதற்கான கேள்வி இது. ஏன் அமெரிக்காவால் ஜெர்மனியை மறக்கவே முடியவில்லை? ஏன் மீண்டும் மீண்டும் நாமெல்லாம் போர்க்கள சினிமாக்களைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம்? ஏன் போர் இல்லாமல் இதிகாசங்களே இல்லை?
மா.அன்பழகன்