Thursday, August 30, 2018

வெண்முரசும் இந்தியாவும்- பிரபு மயிலாடுதுறை



உலகில் ஒவ்வொரு நிலப்பரப்புக்குமே பிரத்யேகமான சிறப்பம்சங்கள் இருக்கின்றன. மானுடப் பண்பாடு பல்வேறு வண்ணங்களுடன் திகழ்வதற்கான காரணமும் அதுவே. இந்தியா உலகிற்கு அளித்த கொடை எதுவென யோசித்துப் பார்த்தால் நம்மால் பல விஷயங்களைச் சொல்ல முடியும். அதில் முதன்மையானதாக எப்போதும் இருப்பது இந்தப் பெருநிலம் கதைகளால் உருவான – சொல்லால் இணைக்கப்பட்ட- தேசம் என்பது. இந்திய நிலத்தில் மக்கள் குமுகங்கள் உருவாகத் துவங்கிய காலத்திலிருந்தே இயற்கையின் பேரழகுகளான மாமலைகளைப் பற்றியும் பெருநதிகளைப் பற்றியுமான சித்திரங்கள் பாணர்களாலும் புலவர்களாலும் நாடெங்கும் சென்று சேர்ந்திருக்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை பெரும்பாலான இந்திய மனங்களுக்கு இமய தரிசனம் ஒரு பெருங்கனவாய் இருந்திருக்கிறது. குமரிக்கடல் இந்திய மனங்களின் நினைவில் எப்போதும் இடம்பெற்றிருக்கிறது. குமரிக்கடலுக்கும் இமயமலைக்கும் இடையிலான ஒரு நிலப்பரப்பு உலகின் பண்பாட்டு உச்சங்களில் முதன்மையானதாக உருவாகியிருக்கிறது.


ஆதிகவியின் ‘’சீதையின் கதை’’யும் கிருஷ்ண த்வைபாயனனின் ‘’ஜெயம்’’மும் இந்தியாவின் எல்லா நிலப்பரப்பிலும் கதையாக, கவிதையாக, கூத்தாக, ஓவியமாக, சிற்பமாக என அனைத்து கலை மற்றும் நுண்கலை வடிவங்களிலும் வெளிப்பட்டிருக்கிறது. இந்திய நிலமெங்கும் அக்கதைகளின் மாந்தர்கள் தெய்வமென வணங்கப்பட்டிருக்கின்றனர். அவற்றில் விவாதிக்கப்பட்ட நீதியும் அறமும் இங்கிருந்த எல்லா அரசுகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் தார்மீக அளவுகோல்களாக இருந்திருக்கின்றன. பெரும்பாலான இந்திய மொழிகள் அக்கதைகளைத் தத்தம் மொழியில் மொழியத் துவங்கியதிலிருந்தே வரையறுக்கப்பட்ட அமைப்புடன் வெளிப்பட்டிருக்கின்றன. ’’வெண்முரசு’’ அம்மரபின் பல்லாயிரம் ஆண்டு கண்ணியின் இக்கால வெளிப்பாடு. ஐயத்திற்கு இடமின்றி மகாபாரத மறுஆக்கங்களில் மகத்தானது.


ஒரு மகத்தான கற்பனையை ஒரு படைப்பாளி தன் படைப்பில் வெளிப்படுத்தும் போது வாசகன் அது ஒரு கற்பனை என்பதை மறந்து தன் மனத்தில் யதார்த்தமாகவே கொள்ளத் துவங்குகிறான். ஒரு வகையில் பார்த்தால் அதுவும் படைப்பாளியின் படைப்பூக்கத்தின் வெற்றியே. வாசகர்கள் மனதில் ஒரு கற்பனை யதார்த்தமாக மாறும் தோறும் அது ஓர் இணை யதார்த்தமாகவே ஆகிறது. ஜெயமோகன் மகாபாரதத்தை மகாபாரத நிலத்தை நிலக்காட்சிகளை அரசியலை வணிகத்தை வழிபாட்டை இலக்கியத்தை இலக்கிய நூல்களை காலநிலைகளை மறுஆக்கம் செய்துள்ளார். ஒரு படைப்பு உத்தியாகவே பல இடங்களில் கிருஷ்ண த்வைபாயனன் படைப்பை விரிவுபடுத்துகிறார்; மீறிச் செல்கிறார்; கூறுமுறையை கலைத்துப் போடுகிறார். அவை அனைத்துமே வியாசனின் படைப்பின் மீதான மேலதிக வாசிப்பை உருவாக்குகின்றன. இப்போது இந்திய நிலத்தில் மகாபாரதம் ஒரு பேராக்கமாக திகழ்கிறது. வெண்முரசில் ஜெயமோகன் மகாபாரதம் நிகழ்ந்த காலகட்டத்தில் இந்திய நிலத்தில் பரவியிருந்த மொழிப்பிரதிகளாக புராணங்களைக் குறிப்பிடுகிறார். வெண்முரசில் எல்லா புராணங்களும் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளன; மகாபாரதத்தைப் போலவே.


வெண்முரசு புனைவு ரீதியில் மகாபாரதத்தின் பல விஷயங்களை அப்படியே ஏற்கிறது; சிலவற்றை மாற்றிக் காட்டி வேறு சில புரிதல்களை உண்டாக்குகிறது. அதில் இருந்திருக்க வாய்ப்புள்ள விடுபட்ட பகுதிகளை உருவாக்கி இணைக்கிறது. வேதம் செழித்துப் பரவிய காலகட்டத்தையும் சமூக அமைப்புருவாக்கத்தில் அவற்றின் பங்கையும் ஆறு தரிசனங்கள் உருவானதையும் சமண சமயத்தின் தோற்றத்தையும் வேதமுடிபு ஒரு பெரும்சக்தியாக எழுவதையும் வெண்முரசு தன் படைப்பின் பின்புலமாகக் கொள்கிறது.  


இந்திய துணைக் கண்டத்தின் இன்றைய புவி அரசியலைத் தீர்மானிக்கும் பல கூறுகள் மகாபாரத காலகட்டத்திலேயே கருக்கொண்டதை ஃபால்கிகக் கூட்டமைப்பு உருவான சூழலை வைத்து விளக்குகிறார். படை கொண்டெழுந்த பல அரசுகளுக்கு அர்ஜுனன் ஓர் ஆதர்சமாகவும் ஊக்கமாகவும் இருந்ததை மணிப்பூரகத்தின் படை உருவாக்கம் குறித்த பகுதிகளில் காட்டுகிறார் ஜெயமோகன். மகாபாரதம் நிகழ்ந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் இன்றும் பீமனும் அர்ஜுனனுமே போர் வீரர்களுக்கும் போர் மனநிலைக்கும் பேரூக்கம் அளிக்கும் படிமங்களாக உள்ளனர். அதன் மறுஎல்லையில் ஏகலைவனும் கூட. இந்தியாவின் மையநிலத்துக்கும் வடகிழக்குப் பிராந்தியங்களுக்கும் இடையே இருந்த உணர்வுபூர்வமான பிணைப்பைக் காட்டும் கதை அரவான் கதை. அரவான் களப்பலி ஆவதை வெண்முரசு விரிவாகச் சித்தரிக்கிறது.


பல அசுர அரசுகள் உருவானது, யாதவர்கள் கார்த்தவீரியன் தலைமையில் எழ முயன்றது, பரசுராமர் ஷத்ரியர்களை முற்றழித்தது, ஷத்ரியர்களின் எழுச்சி, பின்னர் யாதவர்களின் எழுச்சி என இந்திய நிலப்பரப்பில் மகாபாரத காலகட்டத்துக்கு முன்பான அறுநூறு ஆண்டுகளின் சித்திரம் பல்வேறு சந்தர்ப்பங்களில் வெண்முரசில் வருகிறது. அப்பின்னணி முழுமையாகப் புரிந்து கொள்ளப்படும் போதே இந்தியா குறித்த ஒரு முழுமைப் பார்வை உருவாகும். மகாபாரத காலகட்டத்திற்குப் பின் சமண மதம் இந்திய வரலாற்றில் ஏற்படுத்தப்போகும் தாக்கத்தின் முன்சுவடுகளை வெண்முரசு அடையாளப்படுத்துகிறது.


காந்தாரர்களிலிருந்து மணிப்பூரகர்கள் வரை காளாமுகர்களிலிருந்து பாசுபத சைவத்தவர் வரை அன்று இந்தியாவில் நிலவிய எல்லா சமய சிறு சமயங்களின் சித்தரிப்பும் வெண்முரசில் இருக்கிறதும் மங்கலத்தாலம் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு மங்கலப் பொருட்களைக் கொண்டிருப்பதையும் அதில் சில மாறாமல் எல்லா தாலங்களிலும் இருப்பதையும் பின்பற்றியே நாம் அன்றிருந்த பொருள் உற்பத்தி குறித்து அறிய முடியும். ஒரு மார்க்கத்தின் மேல் ஈர்ப்பு கொண்டு அதனை நோக்கிச் செல்லும் பல்வேறு துறவுக் குழுக்கள் இந்திய மண்ணில் அலைந்து திரிவதையும் அவர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச தேவைகள் அரசாங்கங்களாலும் பொதுமக்களாலும் செய்து தரப்படுவதையும் வெண்முரசெங்கும் நாம் காண முடிகிறது. இந்தியா என்ற ஒன்றின் பொதுத்தன்மையென இதனைச் சொல்ல முடியும்.


இந்திய அரசுகளின் உருவாக்கத்துக்கும் பிராமணர்களுக்கும் இருந்த நெருக்கமானத் தொடர்பையும் ஒரு பொதுக்கருத்தையும் குமுகங்கள் இணைந்து செயலாற்றுவதில் ஒரு பொதுப்புரிதலையும் உருவாக்குவதில் பிராமணர்களுக்கு இருக்கும் திறனையும் வெண்முரசு அரசுருவாக்கங்களின் முக்கிய அடிப்படையாய்க் காட்டுகிறது. வெண்முரசில் வரும் வணிகர்கள் குறித்த சித்தரிப்புகள் அபாரமானவை. பல்வேறு வகையான வணிகப் பொருட்கள் இந்திய நிலமெங்கும் சென்று கொண்டேயிருக்கின்றன. துறைமுகங்கள், ஆறுகள், மலைகள், சமவெளிகள் எங்கும் வணிகர்கள் சென்று கொண்டேயிருக்கிறார்கள். துறவிகள், பாணர்களைத் தொடர்ந்து ஒரு புதிய நிலத்திற்கு செல்பவர்கள் வணிகர்களே. அஸ்தினபுரி அவ்வணிகப்பாதையின் மைய முடிச்சாக இருக்கிறது. அது அவ்வாறு இருப்பதனாலேயே ஒரு பெரும் போருக்கான வாய்ப்பையும் பெறுகிறது.

நூற்றுக்கணக்கான கதா மாந்தர்கள், அவர்களின் விழைவுகள், துயர்கள், ஆன்மீகமான தேடல்கள், மாமனிதர்கள், ஒரு பெரும் நிலப்பரப்பின் அரசியல், இவை அனைத்தையும் மிகச் சிறிதாய் எங்கிருந்தோ காணும் கடவுள்கள் என அப்பெரும்பரப்பை உலகின் மிகப் பெரிய மகத்தான காவியத்தை மறுஆக்கம் செய்யும் போது அது இந்தியாவின் கடந்தகாலமாகவும் நிகழ்காலமாகவும் எதிர்காலமாகவும் இருக்கிறது.