Sunday, August 19, 2018

முதல் எரியம்பு



ஜெ,


//"வெற்றிவேல்! வீரவேல்! என்ற போர்க்குரல் எழுந்தது. பாண்டவப் படை  பேரலையென பெருகிச்சென்று செருகளத்தை அடைந்தது" // எத்தகைய ஒரு உச்சகணத்தில் இன்று கதை நின்றிருக்கிறது!!!

கணேஷுக்கு திடீரென முதுகுவலி அதிகமாகியதால் (Disc slip) நேற்று இங்கிருந்து புறப்பட்டு ஆயுர்வேத சிகிச்சைக்கென திருவனந்தபுரம் சென்றிருக்கிறார். எனவே கடந்த இரண்டு தினங்களுடைய அத்தியாயங்களை இன்று தொலைபேசியில் வாசித்தேன். சஞ்சயன் கண் காண்பதை வாய் சொல்லென மாற்ற திருதராஷ்டிரர் விழியுணர் காட்சிகளாய் காணும் பகுதியை, நான் வாசிக்க, வான் வழி கடல் கடந்து  கணேஷ் அதை உடனுக்குடன் மனதில் வரைந்து கொண்டு உடன் பயணித்தது இரண்டு அதிதுரித குதிரைகளில் அருகருகே பயணிப்பதான உணர்வையளித்தது. 

தொலை மேகங்களிடையே முழங்கும் இடி, அழுந்திய ஒலியென கேட்பது போல போர் முரசு கடந்த சிலநாட்களாகவே வெண்முரசில் ஒலித்துக்கொண்டிருந்தது. அரவான் தற்கொடை குறித்த விவாதங்களும், அர்ஜுனனின் சீற்றத்துள் அடங்கிய கண்ணீரும், அரவான் ஆசி பெற வரும் போது பீமன் அவனை இரண்டாம் முறை இறுக அணைத்துத் தழுவவதும்  மனதை கனக்கச் செய்திருந்தது. 

எனில் இரண்டு தினங்களாக போர் அணிவகுப்பின் விரிவான காட்சி சித்தரிப்புகளில் மனம் திளைத்து அத்தவிப்பு உள்ளே  இல்லாதபோல் நடித்துக் கொண்டு இருந்தது. 

சஞ்சயனின் பார்வையாக ஒரு  பருந்து நோக்கில் அல்லது ஒரு முகட்டிலிருந்து பார்ப்பது போன்ற தெளிவுடன் செருகளம் முழுவதையும் காட்சிப்படுத்தி, தேவையான பொழுதுகளில், சொற்களெனும் ஆடிகளை நகர்த்தி அணுகியும் அகன்றும் வரைந்த களம் கண்ணுள் விரிந்து கொண்டிருந்தது.


எனில் 'இன்று' என சங்கன் உடல் விதிர்த்த போதே அது இன்று என ஆழம் உணர்ந்தது. 

எங்கோ ஒரு குலாடபுரியில் கண்காணாது வாழ்ந்து மறக்கப்பட்டுவிடக்கூடிய சாத்தியங்களுள் பிறந்து, அதைத் தன் கனவுகளால் உடைத்துக் கிளம்பிய சங்கன் தன் விழைவுகளுக்குரிய, திறனுக்குரிய களத்தைக் கண்டவுடன், தன் பின் அணிவகுக்கும் படையைக் கண்டவுடன் தன்னை முழுமையாக உணர்கிறான்.

//‘என் படை!’ என்ற எண்ணம் முதன்முதலாக எழுந்தது. ‘நான்!’ என அவ்வெண்ணம் வளர்ந்தது.//

தனக்குரியதை அடைந்தவனின் நிறைவுக் கணம் அது என்று கணேஷ் சொன்னார்.

படை என எழுந்த பின்னரும் 'எங்கோ' என, 'அவர்' என படர்க்கையில் இருக்கும் போர், 'உனது' என முன்னிலையில் வந்து நிற்கிறது. சங்கன் அது தன்மையென மாறப் போகும் கணத்தை எண்ணிப்பார்க்கிறான்.
//முன்னணிப்படைவீரர் இறந்து விழும்போது, பின்னால் செல்பவர்கள் அந்தப் பிணக்குவையில் முட்டி விழுந்து குருதிபூசி எழுந்து நிற்கும்போது, அருகே நின்றிருப்பவர் அலறிவிழத் தொடங்கும்போது, என்றும் கண்டு கண்பழகிய படைக்கலங்களின் கூர்களனைத்தும் புதுப்பொருள் கொள்ளத் தொடங்கும்போது இக்கொண்டாட்டம் நீரலைபட்டு சுடர்கள் அணைவதுபோல் மறையும்.//

போர், வாசிப்பவர் அகத்தின் முகத்தில் அறையும் முதற்காட்சி.

//அரவான் தனித்து நின்றிருந்தான். காட்டிலிருந்து ஓர் இலை மட்டும் உதிர்ந்து விலகிக்கிடப்பதுபோல//

இவ்வரி மிகவும் எடைமிக்கது. அடுத்து நிகழும் தற்கொடையை பெருவிசை கொள்ளச் செய்வது இதுவே எனப் படுகிறது.

காட்டிலிருந்து விலகிய இலைகள் என - நாகர்குடி ஒருபுறம் இவன் மறுபறம், யாதவர் ஒருபுறம் கண்ணன் மறுபுறம், குலமூதாதை பால்ஹிகர் முதல் பீஷ்மரும், நூற்றுவரும் ஆயிரத்தவருமாய் குருகுலத்தவர் ஒருபுறம், பாண்டவர் சிறுகுழு மறுபுறம், தொல்குடி ஷத்ரியர்கள் அனைவரும் ஒருபுறம், பாஞ்சாலம் தனித்து மறுபுறம். இது பெருவனத்தை எரித்து விட்டு தெறித்து விழுந்த புதுவிதைகள் தளிர்த்தெழுவதற்கான சித்திரம். 

பாண்டவப் படைக்கு மட்டுமல்ல, இடக்கையில் தலை ஏந்தி வலப்புறம் விழுந்த அரவானின் உடல் வாசித்தவுடன் உள்ளே ஏற்பட்ட பதற்றம் இன்னும் அணையவில்லை. முரசு நரம்புகளில் அதிர்கிறது. மனதில் விரிந்துவிட்ட செருகளத்துள் பாய்ந்து சென்ற படைகளுக்கும் ஒரு நொடி முன்னதாக அவன் வெட்டுண்ட தலையையும் சரிந்த உடலையும் வாரி எடுத்து மனம் கனக்க எழுதியதே இக்கடிதம்.

சுபா