Monday, August 27, 2018

செந்நாவேங்கை முடிவு




அன்புள்ள ஜெ

வெண்முரசு செந்நா வேங்கையின் முடிவு வழக்கம்போல அபாரமான ஒத்திசைவுடன் இருந்த்து. பூரிசிரவஸும் சாத்யகியும் சந்தித்துப்பிரியும் பழைய நிகழ்ச்சி நினைவுக்கு வந்த்து. வெண்முகில்நகரம் முடிவு. நாவல் முடியும்போது ஒவ்வொரு முறையும் அது எங்கே தொடங்கியது என்று யொசித்துப்பார்ப்பது என் இயல்பு. அது எங்கோ மறந்து கிடக்கும். அதை ஞாபகப்படுத்திக்கொண்டு வரும்போதுதான் எல்லா விஷயங்களும் எப்படி கச்சிதமாக இணைந்திருக்கின்றன என்பது தெரியவரும். செந்நாவேங்கையின் மையக்கரு இளைஞர் சாவு என்பதுதான். ஆகவே ஆரம்பம் முதலே மைந்தர்களின் கதையாகவே வருகிறது. பூரிசிரவஸின் மைந்தர். சாத்யகியின் மைந்தர். குலாட மைந்தர். அவர்களின் படிப்படியான வளர்ச்சி, சாவு. மைந்தர்கள்- தந்தைகள் என்பதாகவே மொத்த நாவலும் வளர்ந்து இரு தந்தையரும் தங்கள் மைந்தர்களைப்பற்றிப் பேசாமலேயே பேசிக்கொண்டிருக்கும் இடத்தில் நாவல் முடிவடைகிறது. அந்தக்கதையோட்டம் வழக்கம்போல துணைக்கதைகளால் சிதறடிக்கப்படவில்லை. ஒற்றை ஒழுக்காகவே சென்றுகொண்டிருக்கிறது. அதன் உச்சகட்டத்தில் நிறைவுபெறுகிறது

ஜெயராமன்