Wednesday, August 22, 2018

போர்முரசு


பன்னிரெண்டாம் வகுப்பு படித்த போது வேதியியலில் எப்படியும் தேரமாட்டேன் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை இருந்ததனால் கமலாயக் கரையில் இருக்கும் வினாயகா டியூஷன் சென்டரில் சேர்ந்தேன். டியூஷன் ஆசிரியர் செந்தில்குமார் வேதியியல் நன்றாக சொல்லிக் கொடுப்பார். சிக்கல் என்னவெனில் காலையில் ஆறு மணிக்கு டியூஷன் தொடங்கும். என் வீட்டிலிருந்து டியூஷன் சென்டர் பதினாறு கிலோமீட்டர். முதல் சில வாரங்கள் அப்பா தன்னுடைய டி.வி.எஸ் எக்ஸெல் ஹெவி டியூட்டியில் அழைத்து வந்து விட்டார். அது எனக்கு சரியாகப்படவில்லை. சைக்கிளில் சென்று கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன். ஆரம்பத்தில் நேரமாகிவிடக்கூடாது என்று ரொம்பவும் பயந்து ஐந்து மணிக்கெல்லாம் புறப்பட்டு விடுவேன். ஐந்து மணிக்கு நீருற்றிய வடிவத சாதமும் ஒரு டம்ளர் பாலும் ஆகாரங்கள். நாட்கள் செல்லச் செல்ல ஐந்து மணி ஐந்து முப்பதானது. டியூஷனின் இறுதி நாட்களில் பதினாறு கிலோமீட்டரைக் கடக்க எனக்கு பதினைந்திலிருந்து இருபது நிமிடங்களே தேவைப்பட்டன. நாகப்பட்டினம் செல்லும் ஒரு அரசுப் பேருந்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு சைக்கிள் ஓட்டுவேன். காலையில் கோலமிட வாசலுக்கு வரும் பெண்கள் அணிந்திருக்கும் உடை மலர் என அனைத்தும் தனித்தனியே நினைவிருக்கும். எந்த மூலையிலிருந்து எந்த நாய் எழுந்து வந்து குரைக்கும் என்பதெல்லாம் தெரியத் தொடங்கியது.
டியூஷனில் சென்று நிற்கும் போது களைப்போ மூச்சிரைப்போ துளியும் இருக்காது. மாறாக மனதில் நிறைவும் தன்னம்பிக்கையும் பெருகி இருக்கும். ஐந்து மணி காலை உணவுக்குப் பின் மதியம் ஒன்றரைக்கு அம்மன் உணவகத்தில் ஐந்து ரூபாயாக்கு குஸ்கா. அதுவும் காசு கொடுத்தவுடன் எல்லாம் கிடைக்காது. ஏற்கனவே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறவரின் பின்னே வரிசையில் நிற்க வேண்டும். சில சமயம் நான்காவது ஐந்தாவது ஆளாகவெல்லாம் நின்றிருக்கிறேன். அதன்பிறகு மீண்டும் பதினாறு கிலோமீட்டர் சைக்கிள் மிதித்து இரவு ஏழு மணிக்கு வீட்டுக்கு வந்தபிறகு தான் சாப்பாடு. அதையும் பொறுமையில்லாமல் அள்ளிக் கொட்டிக் கொண்டு பள்ளியில் கொடுக்கப்பட்டிருக்கும் சில்லறை வேலைகளை முடித்துவிட்டு நண்பர்களுடன் லேண்ட்லைன் போனில் சாட் செய்யத் தொடங்கிவிடுவேன் (ஆம் லேண்ட் லைன் தான். அப்போது ரிலையன்ஸில் ஒரு வில்ஃபோன் குறைந்த விலைக்கு கொடுத்தனர். அதில் குறுஞ்செய்தி அனுப்புவதற்கு கட்டணமில்லை. அந்த போன் வசதி உடைய நண்பர்கள் சிலருடனும் அலைபேசி வைத்திருந்த சிலருடனும் உரையாடுவேன்) அந்த தொலைபேசியில் display light(திரையொளி?) இல்லாததால் வீட்டில் விளக்கணைக்கப்பட்டு எல்லோரும் தூங்கிய பிறகும் கூட கண்ணை இடுக்கிக் கொண்டு சாட் செய்து கொண்டிருப்பேன். பதினோரு மணிக்கு மேலாகிவிடும் உறங்க. மீண்டும் நான்கு நான்கரைக்கு எழுந்து அதே பயணம். இதுவரையிலான வாழ்நாளில் மிகச்சிறப்பான நாட்கள் என அவற்றைத்தான் சொல்வேன். மிக அதிகமாகப் பேசி மிக அதிகமாக சிரித்த நாட்கள் அவை. அத்தகைய தீவிரம் அதன்பின்பு அமையவில்லை. ஒருவகையில் அத்தகைய கூர்மையான மனநிலை அப்போது அமையவில்லை எனில் வாசித்திருக்கவும் மாட்டேன். ஜெயகாந்தனின் ரிஷிமூலம் படித்து மனவிரக்தியடைந்து சாப்பாடு இரங்காமல் கிடந்ததும் பொன்னியின் செல்வன் அனைத்து பாகங்களையும் படித்ததும் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள் ஒன்றுவிடாமல் பார்த்ததும் அப்போது தான். உள்ளம் கூர்மையடையும் பல விஷயங்களில் முழுமையாகவே நிறைந்திருக்க முடிகிறது.
போரும் அத்தகையதொரு நிகழ்வு தான். வன்முறை சீரழிவு என்று நம்முடைய அறிவு எவ்வளவு ஒதுக்கினாலும் போர் குறித்து உளக்கூர்மை கொண்டவர்களால் எண்ணாமல் இருக்க முடியாது. உங்கள் நண்பர் குழாமில் மிகக்கூர்மையான மனிதரைக்குறித்து எண்ணிப்பாருங்கள். அவர் சமூக அக்கறை உடையவராயின் நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் குறித்துப் பேசுவார். விளையாட்டார்வம் உடையவராயின் ஒரு அணி மற்றொரு அணியை எவ்வாறு வென்றதென பரவசத்துடன் விவரிப்பார். அழிவை விரும்பும் சாமான்ய மனநிலை குறித்து நான் சொல்லவில்லை. உண்மையில் உள்ளத்தில் தினமும் போட்டியையும் வெற்றியையும் நிகழ்த்திப் பார்த்துக் கொண்டிருப்பவர்களைப் பற்றி சொல்கிறேன்.
வெண்முரசில் இது போர்த்தருணம். பெருநாவல்களை வாசிக்கும் தன்னம்பிக்கையை எனக்கு அளித்த படைப்பு போரும் வாழ்வும். உச்சியில் பொருத்தப்பட்ட ஒரு இரக்கவுணர்வற்ற கேமரா போல அந்த நாவல் போர் நகர்வுகளையும் இடப்பெயர்வுகளையும் விவரித்துச் சென்றது போர் குறித்த மிகுந்த நம்பகத்தன்மை வாய்ந்த சித்தரிப்பாக எனக்குப்பட்டது. ஆனால் போரும் வாழ்வும் உட்பட பெரும்பாலான போர் விவரிப்பு நாவல்களில் நான் உணர்ந்த குறை ஒன்றுண்டு. பிரம்மாண்டமாக போரை சித்தரிக்கும் படைப்புகள் தனிமனித உணர்வுகளை நீர்த்துபோக விட்டுவிடுகின்றன. தனிமனிதக் கண்கள் வழியாக நிகழும் போர்களில் பெரும் படைநகர்வின் கணம் ஏறுவதில்லை.
வெண்முரசின் பதினெட்டாவது நாவலான செந்நா வேங்கையில் அரவானின் சுயபலியுடன் போர் தொடங்குகிறது. (செந்நா வேங்கை அத்தியாயம் 76 ஆகஸ்டு 15https://www.jeyamohan.in/111744#.W3Y_SXPhU0M). மூன்று நாட்களாக தொடர்ந்து வாசித்த போது உணர்ந்ததைச் சொல்லியே ஆகவேண்டும் என்பதால் தான் இப்பதிவு. போர்ச்சித்திரம் இந்த நாவலில் அபாரமாக உருப்பெறத் தொடங்கி இருக்கிறது. உத்தரன்,ஸ்வேதன்,சங்கன், ஜயத்ரதன் என்று தனித்தனியாக போர் நிகழ்வதாக எண்ணச்செய்யும் அதேநேரத்தில் இரு படைகளும் நெருங்கச் சென்று சந்தித்துக் கொள்ளும் தருணங்களையும் இப்பகுதி மிகச்சிறப்பாக சொல்கிறது.இதுவரை வெண்முரசு வாசித்திராத ஆனால் போர்ச்சித்தரிப்புகளை வாசிப்பதில் ஆர்வமிருக்கும் நண்பர்கள் இப்பகுதியை நேரடியாகவே வாசிக்கலாம்.
வெண்முரசு குறித்து தமிழ் இலக்கியச்சூழலில் விவாதங்கள் பெரிதாக இல்லை. பெரிய விவாதங்கள் ஏன் நிகழவில்லை என்று கேட்டால் ஏதாவது சில்லறை அரசியல் காரணங்களையும் "மூல மகாபாரதம் போல இல்லை" என்று சில்லறை ஆச்சாரக்காரணங்களையுமே சொல்கின்றனர். ஆனால் வெண்முரசு தொடர்ச்சியாக பலரால் படிக்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது. தீவிர இலக்கிய விமர்சனங்கள் நம் தமிழ் இலக்கியப் படைப்புகளை இன்னும் சக்கையாகப் பிழியும் போது தமிழ் வாசகன் வாசிக்க எஞ்சப் போவது மிகக் கொஞ்சம் தான். அந்தக் கொஞ்சத்தில் வெண்முரசு பெரும் இடத்தை அடைத்துக் கொள்ளும் என்பதில் ஒரு "இளம் வாசகனாக" எனக்கு எந்த சந்தேகங்களும் இல்லை. நண்பர்களை இந்தப் போர் சித்தரிப்பு வழியாக வெண்முரசுக்குள் அழைக்கிறேன்.

சுரேஷ் பிரதீப்