Thursday, March 2, 2017

அறமும் பொருளும்



 
அரசே. இன்பத்தையும் பொருளையும் இரு கைகளென உணர்பவன் தன் தலையென கொள்ளத்தக்கது அறம். அவை இரண்டையும் நீர் அறிந்து நிறைகையில் உம்மில் நான் அமைவேன்

  
பொருள் இல்லாதவனுக்கோ இன்பத்தை அறியாதவனுக்கோ அறமில்லையாபொருளையும் இன்பத்தையும் துறந்தவன் அறவழியில் இருப்பது வீண் எனக் கருதப்படுமா என்ற ஒரு கேள்வி எழுப்பப்படுகிறதுஆண்டு முழுதும் சாலை விதிகளை மீறாதிருந்தவர்களுக்கு பரிசு தருகிறார்கள் என்றிருந்தால், நோய் காரணமாக ஆண்டு முழுதும்  வீட்டிற்குள்ளே இருந்த ஒருவன் அவன் சாலை விதிகளை மீறியதில்லை என்பதற்காக அவனுக்கு அப்பரிசை அளிப்பது அபத்தம் அல்லவாபொருள்மேல் இன்பத்தின் மேல் பற்று வைத்து அனுபவித்து அதில் நிறைவடையாமல் அதை தவிர்த்து வாழும் ஒருவன் நான் அறத்தின்படி வாழ்ந்தேன் என்று  கூறிக்கொள்ள முடியுமா?

  
ஒருவன் அரசன் என்றிருந்தால்நாட்டு மக்களின் பொருட்டு பொருள்சேர்க்க கடமைப்பட்டவன். நாட்டில் செல்வம் மிகுந்திருக்கிறது அதனால் மேலும்  பொருள் தேவையில்லை என்று அவன் கருதினால்கூட  மக்களை நல்வழி காட்டுவதற்காக அவன் பொருள் சேர்ப்பதில் ஈடுபடவேண்டும். அதற்காக அவன் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலமாக நாட்டில் பல்வேறு  தொழில்கள் வளரும்மக்கள் சோம்பல் கொள்ளாதிருப்பர். அவர்களின் திறன் பெருகும். அது நாட்டின் வலிமை என ஆகும். அப்படியே தனி மனிதனும் தன் பொருட்டு தன்னைச் சார்ந்தவர் பொருட்டு பொருள் சேர்ப்பது அவன் கடமையென ஆகிறது. பொருளை இழப்பது மட்டும் நஷ்டம் என ஆவதில்லை, பொருள் சேர்க்காமல் விடுவதும் நஷ்டமென்றே ஆகும். தேவைக்கதிகமான செல்வம் என்பதே இல்லை. உணவுக்காக செல்வம்,    உடை , ஆடை போன்ற அத்தியாவசியத் தேவைக்களுக்கென செல்வம், பின்னர் கல்வி, கலைகள் போன்றவற்றை அடைவதற்கான செல்வம், இன்பங்களை அடைந்து இன்புறுவதற்கான செல்வம், தன்னை மற்றவருக்கு இணையாக உயர்த்திக்கொள்வதற்கென செல்வம்மற்றவருக்கு, சமூகத்திற்கு உதவுவதற்கு என செல்வம் என செல்வத்துகென்று தேவைகள் வளர்ந்துகொண்டே செல்கின்றன. தன்னால்  செல்வத்தை சம்பாதிக்க முடியும் என்ற திறன் இருப்பதனாலேயே அவருக்கு செல்வம் சேர்க்கவேண்டிய கடமை இருப்பதாக கொள்ளலாம்.    அதிகமான செல்வம் ஒன்றும் அழுகிப்போய்விடுவதில்லை. ஆனால் அச்செல்வத்தில் பழுது என எதுவும் இல்லாதிருக்கவேண்டும். பிறரின் வருத்தம்சமூக நெறிமீறல், தன் உழைப்பில்லாமல் அடையப்பெறுதல் போன்ற பழுதுகள் அச்செல்வத்தை அரிக்கும் கறையான்களாக ஆகிவிடும். மேலும் செல்வம்பயன்படுத்தாமை காரணமாக காலத்தின் துருவேறிவிடும். செல்வத்தை தனக்காகதன் உறவினர், உற்றார் பொருட்டு, தன் நாடு சமூகம் சூழல் பொருட்டு செலவிடுவது அச்செல்வத்தை பெருமைப்படுத்துவதாகும். அப்படி செலவு செய்யாமல் பொத்தி வைக்கப்பட்ட செல்வம்  வெற்றுச்  சுமையென ஆகும், இழிவென சொல்லப்படும், வீண் என அழியும். ஆகவே பொருள் சேர்ப்பதும், அதை தகுந்த முறையில் பயன்படுத்துவதும் மனிதர்களை உயர்த்தும் சிறந்த வழியாகும்.

   
ஒவ்வொரு உயிரும் தான் இன்பமாக இருக்க வேண்டும் என்றே நினைக்கின்றன. இயற்கை உயிர்களுக்கு அவை ஆற்றவேண்டிய இரு அடிப்படை கடமைகளின் பலன்களாக உணவின்பத்தையும், காம இன்பத்தையும் கொடுத்தருளியிருக்கிறது. மேலும் மனிதன், அவன்  வளர்த்துக்கொண்டிருக்கும் அறிவின் பயனாக பல்வேறு கலை இன்பங்களை அடைந்திருக்கிறான். உடல்கொண்டு உயிர் பெற்ற எவரும் இன்பங்களை துய்க்கவேண்டும். அதுவே அவர்களின் வாழ்வின் பயன். பிறந்து இருந்து இறந்து போகும் வாழ்வின் நோக்கமென பலவற்றை சொன்னாலும் இறுதியாய் தெரிவது இன்பங்களை அனுபவித்து இருப்பதுதான்இறப்புக்கு பின்னான இருத்தலுக்கென இன்றைய இன்பங்களை   தவிர்த்து வாழ்தல் என்பது வெறும் நம்பிக்கையின்பாற்பட்டதுஉணவின்பம், காம இன்பம், கலைகளின் வழி அறிவால் துய்க்கப்படும் பலவித  இன்பங்கள்என அனைத்தையும் தவிர்த்து ஒருவன் அடைய வேண்டியதென உண்மையில் ஏதாவது இருக்கிறதாஇப்படி இருப்பதாகச் சொல்லப்படுவது எல்லாம் நம் யூகங்களேஆகவே நாம் அடைவதற்கென இறைவனால் இங்கு அளிக்கப்பட்டிருக்கும்  இயல்பான இன்பங்களைத்  தவிர்ப்பது தேவையற்றது என ஏன் சொல்லக்கூடாதுஅதே நேரத்தில் ஒரு இன்பம் என்பது இன்னொரு பெரிய இன்பத்திற்கு தடையாக அல்லது ஒரு துன்பத்திற்கு காரணமாக அமைந்துவிடக் கூடாது. சில இன்பங்களை தற்காலிகமாக அல்லது முழுமையாக தவிர்த்து வேறொரு பெரிய இன்பத்தை அடைந்துகொள்ளுதல் தவறென்றாகாது. இன்னொரு உயிர் காணும் இன்பத்திற்குசூழலுக்கு, சமூக நெறிக்கு, பிறர் நலனுக்கு  கேடு அளிக்கும் எது ஒன்றும்  உண்மையான இன்பம் இல்லை, அது இறுதியாக தீமை பயக்கக்கூடியது   என அறியும் அறிவு நமக்கு  இருக்கவேண்டியது அவசியம். நம் அனுபவமின்மை அல்லது நம் மனம் சிந்திக்க இயலாவண்ணம்  வசப்படுத்தப்பட்டகாரணத்தால் நமக்கு கேடு விளைவிக்கும் ஒன்றை இன்பம் எனக் கருதி ஈடுபடும் செய்கையில் இறங்காமல் நம்மை தற்காத்துக்கொள்ள விழிப்புடன் இருக்கவேண்டியர்களாக இருக்கிறோம்.

    
பொருள் சேர்த்தல் மற்றும் இன்பம் துய்த்தல் போன்றவற்றில்  ஒருவருக்கொருவர் இடையூறு இல்லாமல் பார்த்துக்கொள்ளவே சமூக அறம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அது அல்லாமல் பிறர்களின்   துன்பங்களை போக்குவதில் சமூக நலனுக்கான வாழ்வில் இன்பம் காண்பதையும் அறமெனக் கொள்ளலாம்ஆக நெறி தவறாது செல்வம் சேர்த்தலும், தீயதற்ற இன்பங்களை துய்ப்பதற்குமான  வழிகாட்டுதல் நெறிகளே அறமென  அறிகிறோம்பிற உயிர்களின்மேல்  கருணையும் அன்பும் கொண்டு அவற்றுக்கு உதவுவதை அரிய செல்வம் எனக் கருதுவதும் அதை   உயரிய  இன்பமென அறிவதும்  பேரறமாகும்பொருளையும்இன்பத்தையும் கரங்களெனக் கொள்ளாத உடலில் வெறும் அறம் மட்டும் தலையெனக் கொண்டிருப்பவர் தமக்கும் பயனின்றி மற்றவருக்கும் பயனின்றி வாழ்கிறார் என்பதை வெண்முரசு சொல்கிறது
  
முதலில்  புரூவரஸ், நான்  அறத்தைக் கைக்கொண்டிருக்கிறேன் அதனால் எனக்கு பொருளோ இன்பமோ ஒரு பொருட்டில்லை எனச் சொல்கிறான். அவன் ஏற்கெனவே அளவற்ற செல்வம் பெற்றிருக்கிறான், இன்பங்கள் அவன் வேண்டாமலேயே அவனுக்கு கிடத்திருக்கின்றன. அதனால் அவை இல்லாதிருக்கும் அனுபவம் அவனுக்கில்லைஎப்போதும்  அறுசுவை உணவு கிடைக்கும்  ஒருவனுக்கு உணவின் அருமை தெரிவதில்லை. எனக்கு உணவு ஒரு பொருட்டல்ல என வெளியில் சொல்கிறான். அவன் சில நாட்கள் உணவின்றி துன்பப்படும் நிலை வந்த பின்தான் அவ்வுணவின் அருமையை உணர்கிறான்பொருளிலிருந்தும் செல்வத்திலிருந்தும் ஒருவன் விடுபட அவன் பொருள் சேர்ப்பதின் உணர்வுகளை, இன்பம் துய்ப்பதின் அனுபவங்களை அறிந்து பின்னர் விடுபடுவதுதான் உண்மையானது. புரூவரஸ் முன்னர் அறத்தின் வழியில்தான் வாழ்ந்தான். ஆனால் இன்பம் செல்வம் ஆகியவை இல்லாதிருந்து கிடைத்து பின்னர் இல்லாது போவதின்  அனுபவம் அவனுக்கு இல்லாததால் அவன் எளிதில் அறம் தவறி தீநெறி செல்வது  நிகழ முடிகிறதுஅந்த அனுபவங்களை அடைந்த பிறகுதான் அவருக்கு உறுதியான  வழுவாத அறத்தை மேற்கொள்ளமுடிகிறது.

  “
இன்பத்துயரும் பொருள்துயரும் பெற்று அறமறிந்து அமைந்தார் உம் மூதாதை புரூரவஸ். அவர் புகழ் வாழ்க!”

தண்டபாணி துரைவேல்