Wednesday, March 1, 2017

மாமலர் 13 – ஊர்வசியும் மகாநாராயண வேதமும்



வெண்முரசு நாவல்களுக்கிடையே துலங்கி வரும் ஒருமையும், இழை மையங்களும் எண்ண எண்ண வியக்க வைப்பவை. வெண்முரசில் வெய்யோன் துவங்கி வரும் ஒரு முக்கியமான தளம் தத்துவ முதன்மை கொள்ள வேதங்களுக்கிடையே நடந்த மோதல்கள். பல்வேறு வேதங்கள், அவை ஒவ்வொன்றும் எவ்வாறு ஒன்றிலிருந்து பிறிதொன்றாக மேலெழுந்து வந்தன என்பதை வெவ்வேறு புராண கதையாடல்கள் வழியாகவும், அர்ச்சுனனின் பயணங்களின் வாயிலாகவும் விரிவாக தந்துள்ளது வெண்முரசு.

அந்த கதைகளில் ஒரு முக்கியமான ஒரு திருப்பம், திசைத் தேவர்களை வென்று தலைமையேற்ற இந்திரன் முதன்மை கொண்ட மகா வஜ்ர வேதத்தை மகா நாராயண வேதம் வென்றமை. அதற்கு இந்திரனின் மைந்தனான அர்ச்சுனன் நாராயண வேதத்தின் பிரதிநிதியான கிருஷ்ணனுக்குத் தோழனாக, உடன் இருப்பவனாக மாறுவது முதன்மையான காரணம். அது இந்திரனே முன்வந்து தனது தலைமையை விட்டுக் கொடுப்பது தான். அவ்வாறு தந்தைக்குப் பிடிக்காத ஒன்றை ஒரு மைந்தன் செய்வது புராண வழக்கங்களின் படி தந்தையின் தீச்சொல்லுக்காளாகும் தருணமே. அர்ச்சுனனே அதை ஏற்றுக் கொள்ளச் சம்மதித்தே தனது முடிவை அறிவிக்கிறான். ஆயினும் அவன் பெண்ணாக இருந்து அதை அறிவிப்பதால் இந்திரன் மகிழ்வுடனே சம்மதிக்கிறான்.  

அர்ச்சுனன் பெண்ணாக மாற தீச்சொல்லிட்டவள் ஊர்வசி. கிராதத்தில் ஊர்வசிக்கும் அவனுக்கும் நடக்கும் உரையாடலின் மையப் பகுதி –
ஆம்” என்று அர்ஜுனன் சொன்னான். “தெய்வங்களென இவற்றைச் சமைப்பது என் தன்னிலைதான். பிரம்மமோ தன்னை பிற ஒன்றென்றே காட்டும் தன்மைகொண்டது. ஆசிரியன் மட்டுமே பிறிதொன்றென முழுமைகொண்டு நின்று நம்மை அவனிடம் இழுப்பவன். நானறிந்தது ஒன்றே, அனைத்தையும் உதறி ஆசிரியனை அணுகாதவனுக்கு சொல்திறப்பதில்லை.” அவள் மெல்ல தளர்ந்தாள்

வழக்கமாக அறிந்த கதைப்படி அர்ச்சுனன் ஊர்வசியை மறுதலிப்பதன் காரணம் அவள் அவன் மூதாதையான புரூரவசின் மனைவி, எனவே அவன் மூதன்னை. வெண்முரசின் கிராதம் எந்த இடத்திலும் அதைச் சொல்லவில்லை. மாறாக அவன் கிருஷ்ணன் முன் ஓர் மாணவனாகத் தன்னை முன்வைக்கவே இந்திர லோகத்தின் அழகனைத்தும், இன்பங்களனைத்தும், விழைவுகள் அனைத்தும் கனிந்து சொட்டி முழுமையடைந்து உருவான ஊர்வசியை மறுக்கிறான். ஏன் ஊர்வசி? ஒரு ரம்பையோ, திலோத்தமையோ இருக்கக்கூடாதா? அவள் தலைக்கோலி என்பது மட்டும் தான் காரணமா?

இக்கேள்விகளின் பதிலை மாமலர் நல்குகிறது. ஊரு என்னும் தொடையில் இருந்து பிறந்தவள் ஊர்வசி. யாருடைய தொடை? நர நாராயணர்களில், நாராயணரின் தொடை. பொதுவாக நர, நாராயணர்கள் அர்ச்சுனன், கிருஷ்ணனின் புராண அம்சம் என்பது தொன்மம். அத்தொன்மத்துக்கிணங்க நர நாராயணர்களில் நரனே விழைவுகளின் உச்சமான அழகின் அழைப்பில் விழி திறந்து அதிலேயே ஆழ்கிறார். ஆம், இந்திர மைந்தன் அர்ச்சுனனே விழைவுகளில் மூழ்க முடியும். தன் பாதி பிரிந்த நாராயணர் இந்த விழைவுகளின் அழைப்பில் இருந்து வெளியேற, விழைவுகளில் மூழ்காமல் இருக்க, விழைவுகளை விழைவாகவே அறிகிறார். மிக எளிதாக அழகின் உச்சத் தருணங்களை எல்லாம் ஒன்றிணைத்துத் தன் தொடையில் அறைந்து தன் மகளாக எழுப்புகிறார், ஊர்வசியாக எழுப்புகிறார். மகளாக அறிந்து காமத்தைக் கடந்த நாராயணர் நரரையும் கை பற்றி இழுத்துக் கொண்டதாக மாமலர் குறிப்பிடுகிறது. ஆம், நாராயணரை நோக்கி நரரை அவர் மகள் ஊர்வசியே திருப்பி விடுகிறாள்!!

வெண்முரசின் முக்கியமான பங்களிப்பு என்பது தனித்தனியாக நின்றிருக்கும் கதைகளை ஊடும் பாவுமாக நெய்து எழுப்பும் ஒரு பெருங்கதையாடல் தான்.