Friday, February 9, 2018

இருவழிகள்



நீலம் வந்த போது அதன் கதாபாத்திர வடிவமைப்புக்கும், நிகழ்வுகளின் கூறு மொழிகளுக்கும் வெண்முரசுவின் பொதுவான பாத்திர வடிவமைப்புகள், தர்க்க முறைகளுக்கும் இடையேயான வேறுபாட்டை சுட்டிக்காட்டி வினவப்பட்ட போது, ஜெ நீலம் வெண்முரசு வரிசையில் உள்ள நாவல் அல்ல, ஆனால் அது வெண்முரசை ஒரு முக்கியமான தளத்தில் திறக்கும் ஒரு சாவி என்றார். அது முக்கியமாக வெண்முரசு என்னும் ஞான நூலில் அது மறைஞானத் தன்மை (esoteric in nature) கொண்ட ஒரு யோகநூலாக அமரும்  எனவும் கூறினார். அன்று அதன் முழுப்பொருளும் விளங்கவில்லை. இப்போது குருதிச்சாரலில் கலிக்கு தன்னை முற்றிலும் ஒப்புக்கொடுத்து முழுமை அடைந்து நிற்கும் துரியனைக் காணும் போது அதன் அர்த்தம் புரிகிறது. நீலத்தில் இரு இழைகளாக விவரணைகள் இருக்கும். ஒன்று ராதையை முன் வைத்துச் செல்லும் கனசியாம யோக முறையிலான பிரேமையை அடிப்படையாகக் கொண்ட ராதா மாதவ ஃபாவம். மற்றொன்று தன்னை, தன் எல்லைகளைக் கடந்து செல்ல, இருள் நிறைந்த பாதையைத் தேர்ந்தெடுத்த கம்சனின் பாதை. ராதை, கம்சன் இருவருமே ஒரு கணமும் இடைவிடாது பீலிவண்ணனை எண்ணியவர்கள் தாம். இருவரில் ஒளி மிக்க பிரேமையின் பாதையைத் தேர்ந்தெடுத்த ராதையே தன்னைக் கடந்து முழுமை அடைகிறாள். கம்சனோ குழவியரைக் கொன்றும் கூட தன்னில் எஞ்சும் ஒரு சிறு நீலக்குருவியைக் கண்டு வாளை தாழ்த்துகிறான். மருகன் கையாலே மரணம் அடைந்து விடுதலை கொள்கிறான். அவன் முழுமையை அறியவில்லை. அவன் சென்ற பாதையின் இருள் அவனை அச்சுறுத்துகிறது.

மாறாக துரியனோ முற்றும் துறந்து, தன்னை, தன் ஆன்மாவோடு கலிக்கு ஒப்புக்கொடுத்து முழுமையை, முடிவின்மையை எய்துகிறான். இருள், தனிமை, வெறுமை மட்டுமே நிறைந்த பாழ். எனவே உடலாலும் முழுமையின் பேரழகு பொலிய முழுத்திருக்கிறான். அந்த முழுமையிலேயே திளைத்திருக்கிறான். இந்த முடிவின்மையில் இருந்து, ஒரு சிறு குறையால் மீண்ட ஒருவர் வெண்முரசில் உள்ளார். அவரது அந்த சிறு முழுமையின்மையே அவரை சமநிலை நோக்கி திருப்பி இருக்கிறது. அவர் மீளும் வரை அவர் இருந்ததும் இதே பாழில் அல்லவா!! முழுமையை மானுடரால் தாங்க இயலாது. உடலெங்கும் பூரணம் பொலியும் அவரை, புன்னகை துலங்கும் அவர் முகத்தை, அந்த குழந்தை விழிகளை, என்றென்றும் அணுக்கமான பீலியைக் கூட மானுடரால் தொடர்ந்து பார்க்க இயலாது. ஏனென்றால் பூரணம் போல, முடிவின்மை போல, முழுமை போல அச்சுறுத்துவது வேறில்லை. எனவே தான் நதியில் இழுப்பில் கொழுக்கொம்பு தேடி தத்தளிப்பது போல் அலைவுற்ற உள்ளம் கொண்ட தாரை, குறையுள்ள அவரது பாதங்களையே பற்றுகிறாள். ஏனென்றால் அதுவே அணுக்கமானது, குறையே ஆறுதலும் தருவது. அது நிறைகையில் முழுமையையும் நல்குவது.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்