Thursday, February 22, 2018

விருஷாலியின் பிரபஞ்சமும் சுப்ரியையின் சிறையும் (குருதிச்சாரல் 56-66.) 
சிறை என்பது அதன் கட்டிட கட்டுமானத்தை வைத்து வரையறுக்கமுடியுமா?   பாதுகாப்பான ஒரு கட்டிடம் ஒரு சிறையாகவும் இருக்கலாம் அல்லது ஒரு கோட்டையாகவும் இருக்கலாம். சிறை என்பதை  நாம் நம் விருப்பத்துக்கேற்ப நடந்துகொள்வதற்கான எல்லைகளை குறுக்கும்  கட்டுப்பாடுகளைக்கொண்ட இடம் என ஒருவாறு சொல்லலாம்.    ஆயிரம் பேர் தங்கும் அளவுக்கு ஒரு பெரிய கோட்டையாக இருந்தாலும்அதில் ஒரு காட்டு யானை இருக்க நேருமானால் அதற்கு அது ஒரு சிறைதான்அதே இடத்தில் இருக்கும் ஒரு சிறு எறும்புக்கு அது ஒரு பெருவெளி. அது ஒரு எல்லையிலிருந்து மறு எல்லையை கடந்து செல்ல அதன் ஆயுள் காலம் முழுதும் தேவைப்படலாம். ஆதலால் அது தனக்கான எல்லை இருப்பதாக எப்போதும் உணரப்போவதில்லைஆக அந்தக் கோட்டையே அதன் பிரபஞ்சம்அதைப்போன்று வெளியுலகம் அறியாமல் சிறு தீவிலேயே பிறந்து வளர்ந்து வரும் மனித குழுவுக்கு அதுவே அவர்கள் பிரபஞ்சம்ஆனால் பெரும் நிலப்பரப்பில் இருந்து அந்தத் தீவுக்கு நாடுகடத்தப்பட்ட  ஒருவனுக்கு அத்தீவே  சிறை என ஆகிறது.   ஒருவன்  சிறையில் இருக்கிறான்,   வெளியுலகில் ஏதோ ஒரு காரணத்திற்காக அவனைக் கொல்ல அவன்  பகைவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என அவன் அறிந்திருக்கிறான் என வைத்துக்கொள்வோம். அப்போது அவனுக்கு அது சிறையில்லை. அவனை பாதுகாத்து வைத்திருக்கும் அரண் என உணர்வான்.    ஆக ஒரு இடத்தை  சிறை என வரையறை செய்வதில் அங்கிருப்பவனின் சித்தமே பங்காற்றுகிறது.  
  
விருஷாலி எளிய குடும்பத்து பெண். அவள் தந்தை வீடு மிகச் சிறிய குடிலாக இருந்திருக்கும். அங்கிருந்து கர்ணனின் மனைவியாகி அங்க நாட்டில் அரண்மணையில் குடியேறும்போது அவள்  தனித்து ஒரு பெரு மண்டபத்தில் தெரியாமல் நுழைந்துவிட்ட விட்டில் பூச்சியைப்போல் திகைத்துப்போயிருப்பாள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.    அது அவளுக்கு உரித்தான இருப்பிடம் என்றாலும் அந்த அரண்மணைக்கு தகுதியான்வள்தானா என்ற உணர்வு அவளை அலைக்கழித்துக்கொண்டிருக்கும்மேலும் கர்ணனைப்போன்ற  பெரு வீரனின் கொடை வள்ளலின்  முன் தன்னை மிகச் சிறியவளாக உணர்ந்திருப்பாள். அவள் தோழி அவளின் அன்றிஅய நிலையை இவ்வாறு உரைக்கிறாள்.

காதலன் என்றோ கணவன் என்றோ நீங்கள் அவரை கண்டதே இல்லை. அரசர் எனக் கண்டு அடிமையென பணிந்து எழுந்தீர்கள்என்றாள் சம்பை.

       
ஒரு அரசனின் மகளான சுப்ரியை கர்ணனின் இன்னொரு மனைவியாக அங்க நாடு வருகிறாள்இது விருஷாலியில் தாழ்வுணர்ச்சியத் தூண்டி மிகைப்படுத்தி இருக்கும் என்பதை நம்மால் எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது. அதன்காரண்மாக அவள் தன்னைத்தானே வருத்திக்கொண்டும் அதன் காரணமாக கர்ணன் வருந்தும்படி  நேர்ந்ததையும் வெண்முரசுகாட்டியிருக்கிறது. ஆனால் கால ஓட்டத்தில் அந்த அரண்மனைக்கேற்ப தன் ஆளுமையை வளர்த்துக்கொள்கிறாள்அவள் பிள்ளையில் கர்ணனை அணுக்கமானவளாக உணர்கிறாள்

அவள் விழிகளை நோக்கிஎன் மைந்தன் அவர் உருவில் எழுந்தபோதுதான் நான் உணர்ந்தேன், அவர் எனக்குரியவர் எனஎன்றாள்.

அவள் தன்னை அந்த அரண்மனை முழுதும் நிறைத்துக்கொள்கிறாள். பெண்கள் இப்படி தம்மை வீடு முழுதும் நிறைத்துக்கொள்வது வியப்பளிக்கும் ஒன்று. இது பெண்மையின் இயல்பு என நினக்கிறேன். ஒரு வீட்டில்  அனைத்து இடங்களிலும் அவ்வீட்டுப்பெண்ணின் இருப்பு தெரியும்.   அந்த வீட்டில் ஏற்படும் சிறு மாற்றத்தைக்கூட  முதலில் உணர்பவளாக பெண் இருப்பாள். வீட்டின் ஏதோ ஒரு பாகத்தில் சிறு ஊசிவிழும் ஓசைகூட அவள் கவனத்தில் இருந்து தப்பாதுவீட்டில் நுழைந்துவிட்ட சிறு பூச்சிகள் கூட அவள்கண்ணில்தான்  முதலில்தென்படும்அதே நேரத்தில்  ஆண் மட்டும் இருக்கும் வீட்டைப் பாருங்கள். அதில் பெரும்பாலான இடம் ஆள் இருக்கும் தடமே இல்லாமல் பாழடைந்தது போல் இருக்கும்.   மதுரை கோயிலில் மீனாட்சி அம்மையும் ஈசனும் தனித்தனிப் பகுதியில் இருப்பார்கள். மீனாட்சியம்மன் இருக்கும் பகுதி கூரைகளில் வண்ணக் கோலங்களுடன், சுவர்களில் சித்திரங்களுடன், எப்போதும் பக்தர்கள் நெருக்கத்தோடு, தீபங்கள் பொலிந்து  மங்கலம் நிறைந்து காணப்படும்ஆனால் சிவன் இருக்கும் இடம் அப்படி இருக்காது.  
       
விருஷாலி இப்படி தன்னை அரண்மணையில் நிறைத்துக்கொள்வதை காளியின் வாயிலாக வெண்முரசு இவ்வாறு கூறுகிறது:
     
அவள் நரைத்த கண்கள் ஒளிகொள்ள புன்னகைத்துஎங்களூரில் பெட்டிப்பூசணி செய்வதுண்டு, அரசி. பூசணியை மரப்பெட்டிக்குள் விட்டு அது வளர்ந்து நிறைந்தபின் பெட்டியைக் கழற்றி அதை எடுப்பார்கள். கூடைகளில் அடுக்கி படகில் கொண்டுசெல்ல உகந்தது. நகரங்களில் விரும்பி அதை வாங்குவார்கள்என்றாள். முள்குத்தியதுபோல சினம் எழ அதை உடனே கடந்து சிரித்துமெய், அதுதான் மேலும் பொருத்தம்என்றாள். பின்னர் எண்ணிநோக்கியபோது அந்த ஒப்புமையின் ஆழம் விரிந்துகொண்டே வந்தது. அரசியென வந்து சேர்ந்தபோது திகைப்பளித்த அரண்மனைக்குள் அவள் மெல்ல நீர்போல நிரம்பி அனைத்து இடங்களையும் முழுமையாக நிறைத்துவிட்டிருந்தாள்.
  
இப்போது அவளுக்கான பிரபஞ்சமாக அரண்மனை இருக்கிறது. அதைத்தாண்டி அவளுக்கு பெரிதாக விருப்பு வெறுப்புகள் இல்லாமல் போகிறதுஅதன் காரணமாக விருஷாலியின் மனமும் நிறைந்திருப்பதாக உள்ளது. அவள் உள்ளத்தில் வஞ்சமோ கசப்போ இல்லாமல் தெளிவாக இருக்கிறாள்
     
 ஆனால் சுப்ரியை அப்படி அல்ல. அவள் மனமுவந்து கர்ணனை மணம் புரிந்தவள் அல்ல. மாறாக கவர்ந்து வரப்பட்டு கர்ணனுக்கு அரசியென ஆனவள். அதை நீண்ட நாட்கள் ஏற்றுக்கொள்ளாமல் அவள் இருக்கிறாள். வள் சற்றும் மன நிறவற்று இருக்கிறாள்

உதட்டைச்சுழித்துஇங்கு எனக்கும் அரியணை ஒன்று உள்ளது. மணிமுடியும் சூட்டப்படுகிறது. ஆனால் கூத்தில் அரசியென மேடையேறும் விறலிக்கும் எனக்கும் வேறுபாடில்லையென்று உள்ளூர நன்கறிவேன்என்றாள்

அதனால் அவள் இருக்கும்  அரண்மணை ஒரு சிறையென ஆகிவிட்டது அவள் உள்ளம் அந்த சிறையை  விட்டு வெளிச்செல்வதையே எப்போதும் கனவு காண்பதாக மாறிப்போகிறதுஅவள் அந்த அந்நாடு தாண்டி இருக்கும் ஒவ்வொரு ஊர்களுக்கும் தப்பித்துப்போகுபவளாக தன்னை கற்பித்துக்கொள்கிறாள். அந்தக் கற்பனைக்கு உரம் சேர்க்க மற்ற நாடுகள், அதன் நகர்கள் ஆகியவற்றைப்பற்றிய தகவல்களை சேர்த்துவைத்துக்கொள்கிறாள்.  

சுப்ரியையின் கனவுகள் அனைத்தும் சம்பாபுரியிலிருந்து கிளம்பி அறியா நிலங்களுக்குச் செல்வது குறித்தவையாகவே இருந்தன. அந்நகரை அவள் அமர்ந்திருக்கும் ஒரு மரச்சில்லை என, அதை உதைத்து விசைகூட்டி சிறகு விரித்து வானிலெழப் போவதாக, எண்ணினாள். பயணச் செய்திகளையும் அயல்நிலங்களின் காட்சி விரிவுகளையும் சொல்லும் நூல்களை நூற்றுக்கணக்கில் தன் சுவடிஅறைக்குள் சேர்த்து வைத்திருந்தாள். பயணக் கதைகளைப் பாடும் சூதரையும் விறலியரையுமே அவள் விரும்பினாள். நூல்களை ஏடுசொல்லிகள் வாசிக்க விழிமூடி மயங்கியவள் என மஞ்சத்தில் கிடப்பாள். மூச்சில் மார்புகள் எழுந்தமையும். முகம் உணர்வுகள் எழுந்தமைய உவகையும் அச்சமும் வியப்பும் தனிமையும் கொண்டு மாறிக்கொண்டிருக்கும்.

  
இறுதியாக இப்போது அஸ்தினாபுரத்திற்காக அரண்மணை விட்டு செல்ல்லும் நிலை வருகிறதுஅவள் மனம் அதை சிறைலிருந்து தப்பித்துச்செல்வதாக உணர்கிறது.   கூடுவிட்டு தப்பித்த பறவை மீண்டும் கூடு செல்ல விழைவதில்லைகூட்டிலிருந்து தப்பித்தல் ஒரு பறவையின் மனதில் இப்படித்தான் இனிக்கும்போலும்: தன் கூட்டைகூடு இருந்த வீட்டை, வீடு இருந்த தெருவைத் தாண்டி  அது பறந்துபோகையில் இப்படித்தான் நினைக்கும் அல்லவா?

படகுத்துறைச் சரிவில் கிளைவிரித்துப் படர்ந்துநின்ற ஆலமரத்திடம் இனி நான் வரப்போவதில்லை என்று சொல்லவேண்டுமென்று தோன்றியது. இனி கற்பலகைகள் பதித்த இச்சாலை எனக்கில்லை. மீனெண்ணெய் விளக்குகளைச் சூடி நிற்கும் கற்தூண்களிலும், வளைந்து சரிந்து இறங்கிச் செல்லும் இதன் இருபுறமும் நிரைவகுத்திருக்கும் சுங்கமாளிகைகளிலும், அப்பால் மரக்கலங்கள் ஆடி நிற்கும் துறைமுகப்பிலும், அங்குள்ள காவல்மாடங்களிலும் நான் இனி விழிபதிக்கப் போவதில்லை. ஒவ்வொரு காட்சியிலும் முழுச் சித்தத்தையும் விழியென்றாக்கி பதித்தாள். துளித்துளியென நோக்கிச் சென்றாள்.

அவள் மனம்  சம்பாபுரியில் இருப்பதை முடிவற்ற சிறைவாழ்வெனக்  கொண்டிருந்தது. அவள் எப்போது வேண்டுமானாலும் இந்நகர் விட்டு வெளியூர் சென்று வந்திருக்க முடியும். ஆனால் அது ஒரு சிறையிலிருந்து இன்னொரு சிறைக்குச் செல்வதாக கருதி  வெளிக்கிளம்ப சலிப்புற்று இருந்தாள்ஆனால் அவள் இப்போது வலுக்கட்டாயமாக கிளம்புகையில் அவள் உள்ளம் தான் உண்மையில் விடுதலைபெற்றதாக ஏற்றுக்கொள்கிறதுஇப்போது அங்கிருந்து கிளம்புவதை தனக்குத்தானே சொல்லிக்கொள்கிறாள்.   

 
ஆம், கிளம்பிவிட்டேன்என்று ஒரு சொல் எவரோ சொல்லி செவியேற்றதுபோல் நெஞ்சிலெழுந்தது. அதன் பின்னரே அவ்வுணர்வை உள்ளம் அடைந்தது. துறைமேடை அலையிலாடி அணுகுவதுபோலத் தெரிந்தது. “ஆம், இதோ கிளம்பிவிட்டேன்என மீண்டும் சொன்னாள். “ஆம், கிளம்பிவிட்டேன்என்று ஒரு சொல் எவரோ சொல்லி செவியேற்றதுபோல் நெஞ்சிலெழுந்தது. அதன் பின்னரே அவ்வுணர்வை உள்ளம் அடைந்தது. துறைமேடை அலையிலாடி அணுகுவதுபோலத் தெரிந்தது. “ஆம், இதோ கிளம்பிவிட்டேன்என மீண்டும் சொன்னாள்.
     
 அவள்வெளிவந்து பயணிக்கையில்  காணும் நிலப்பரப்புநதிப்பரப்பு, வானம், காற்று அவளை விடுதலை அடைந்தவளாக எண்ன வைக்கிறது. அவள் செல்லும் படகின் உட்பகுதி  அரண்மணையின் நீட்சி. ஆகவே அதுவும் சிறை என அவள் உள்ளம் அறிகிறதுஅந்தப் பயணத்தை அவள் படகின் அறைக்குள் செல்லாமல்  தளத்திலேயே கழிப்பதற்கு அதுவே காரணமாக அமைகிறது. இந்த விடுதலையுணர்வின் முன் அரசி என்ற முறையில்  தான் கொண்டிருந்த செருக்கு, ஆடை அணிகலன்களின் மீதான நாட்டம்,   ஆகியவற்றை மறக்க வைக்கிறது.   
     

 உலக வரலாற்றில் கோடி கோடி மனிதர்கள் பிறந்து வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒன்றுபோல் ஒன்றென இல்லாமல் வெவ்வேறு முறையில் சிந்திக்கின்றன. வெவ்வேறு ஆளுமைகளைக் கொள்கின்றன. ஒருவன் தனக்கான உளவியல் ஆளுமையை அடைவதற்கு இன்னதென காரணத்தை நாம் உறுதியாக கூற முடிவதில்லை. வெண்முரசு இதைப்போன்ற உளவியல் ஆளுமைகளையும் அதன் காரணமாக ஏற்படும் வாழ்க்கைச்சிக்கல்களையும் நமக்கு எடுத்துக்காட்டியவண்ணம் இருக்கிறதுஇவற்றுள்  ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நம் உள்ளத்தின் பிரதிபலிப்பை நாம் காணமுடியும். அதன் மூலம் நம் உள்ளத்தைச்  சீர் படுத்திக்கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறதுஒரு மகாகாவியத்தின் முக்கியமான பயனாக நான் இதைக் கருதுகிறேன்.

    

தண்டபாணி துரைவேல்