இனிய ஜெயம்
வெண்முரசு நாவல் வரிசைக்குள் இலங்கும் பகுப்புகளில் ,இந்த அலைகளில் திரள்வது பகுதி அளித்த மன நெருக்கடி தாள இயலாத ஒன்று . என்னளவில் திரௌபதியை நோக்கி '' புலர் பொழுதில் துர்க்கை அன்னையை நிர்மால்யமாக தரிசிப்பதும் முறைமைகளில் ஒன்றுதானே '' என்று தொடை தட்டி சிரித்தபடி ,அவளது உடை களைய ஆணையிட்ட போதே துரியன் இறந்து விட்டான் . அதன் பின் செத்த பிணம் ,எத்தனை சிங்காரத்துடன் வலம் வந்தால் எனக்கென்ன ?
ஆனால் திரௌபதி அந்த சபையில் அன்னையாக நின்றே துச்சாததனை எச்சரித்தாள் .அதே அன்னையின் ஆழமான கருணை முகத்துடன் இன்று நின்று ,எல்லா வஞ்சங்களையும் அவள் கைவிட்டு விட்டதாக உரைக்கும் தருணம் மனம் மீண்டும் துரியன் பால் சாய்ந்தது . உண்மையில் அவன் ஆழ்மன சிக்கத்தான் என்ன ? அவனும் திரௌபதி உபாசகனே [கர்ணனை போலவே ] உள்ளுக்குள் . முற்ற முழுதாக அவன் தன்னில் இருந்து எந்த பெண்ணை வெளியேற்றினானோ அவளின் புற வடிவே திரௌபதி . [துரியன் தனது மகளை பிரியத்துடன் அழைக்கும் பெயர்களில் ஒன்று கிருஷ்ணை .திரௌபதியின் பெயர்களில் ஒன்று அது ] ன்திரௌபதிக்கு அவன் தேவயானியின் மணிமுடியை பரிசளிக்க விரும்பிய காரணம் , அவள் என்பது அவனே . அவள் முன் விழுந்து சபையில் அவமானம் அடைந்தான் .இனி திரௌபதி அவனுக்கு யார் ? ஸ்தூனகர்ணன் முன்னாள் அவனில் இருந்து எந்த பெண்ணனை வெற்றி கொண்டானோ ,அவள்தான் இவள் .இனி இவள் வெல்லப்பட வேண்டியவள் . வெற்றிகளில் பெரு வெற்றி என்பது ஒருவரை அவமதித்து குன்றைச் செய்வதே என்பது ஒரு காலக்கட்ட மனிதர் எனக்கு கற்று தந்த பாடம் .அதையே துரியனும் செய்கிறான் . ஒவ்வொரு கணமும் [அவன் ஆழ்மனத்தால் அன்னை என உபாசிக்கும் ] அணுவிடை அளவில் திரௌபதி முன் தனது வல்லமையை இழக்கும் கர்ணன் , வேறு என்ன செய்வான் ? அவனும் துரியனுடன் இணைந்து கொள்கிறான் . துரியன் சென்று உழலப்போகும் இருள் உலகில் அவனுடன் சென்று தானும் உழல்வது என இன்றைய பானுமதிக்கு முன்பு அக்கணமே கர்ணனும் தனது செய்கையால் தெரிவித்து விடுகிறான் .
துரியன் கர்ணன் இருவர் மீதான எனது மனச்சாய்வு , துரியன் தன்னை கலியின் மைந்தன் என அறிவித்ததும் ,ஊர் மொத்தமும் பிறிதொரு சொல்லின்றி அந்த இருளை சென்னி சூடியதும் ,முற்றிலும் அகன்று விட்டது . இவர்களும் இவர்களை சேந்தவர்களும் முற்றிலும் அழிய வேண்டியவர்கள் . அந்த கணம் இன்னும் எங்கோ தூரத்தில் இருக்கிறதே என்பதே எனது ஒரே ஆயாசம் .
கடலூர் சீனு