ஜெ,
குருதிச்சாரல் 59 ல் வரும் காட்சி மயக்கம் குறித்த வரிகளைப் படித்த உடன் இரண்டு நாட்கள் வெண்முரசை படிக்கவே இல்லை. அந்த மூன்று பத்திகளை மட்டும் மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டிருந்தேன்.
டெல்யூஸின் தத்துவத்தை சுருக்கமாக இப்படி சொல்லலாம். நம் சித்தத்தால்தான் இவ்வுலகை அறிகிறோம். சித்தம் மூன்று கூறுகளால் ஆக்கப்பட்டிருக்கிறது. காலம், இடம் மற்றும் தன்னிலை. காலம் ‘இப்பொழுது' என்ற எல்லையாலும், இடம் ‘இங்கு' என்ற எல்லையாலும், தன்னிலை 'விருப்புகள் மற்றும் தேர்வுகள்' என்ற எல்லையாளும் கட்டுண்டிருக்கின்றன. கலை மட்டுமே உணர்வாக்கத்தின் வழியாக இந்த எல்லைகளைக் கடந்து செல்ல செய்யும் என்கிறார். அதை அமானுட என்ற அர்த்தத்தில் ‘inhuman’ என்கிறார். அப்படி நம் அறிதல்களை விரித்துக் கொள்ளும் போது, பிரபஞ்ச அளவிலும், காலத்தின் ஆதி முதல் இனி வரக் கூடிய அந்தம் வரையிலும் நம் தன்னிலையை விரித்துக்கொள்ளலாம். அப்படி கலை நம் தன்னிலையைக் கடந்த பேரிருப்பாக ஆக்குவதை 'மெய் நிகர்’ தன்மை என்கிறார், வெண்முரசு அதை மறுமெய்மை எனும் போது இன்னும் மேலே கொண்டு செல்கிறது. தத்துவத்திலிருந்து ஆன்மீகத்திற்கு கவித்துவம் வழியாக. விருஷசேனன் கர்ணன் ஆவதைப் போல.
இந்த வரிகளை வெண்முரசில் வாசிக்கும் போது, கிடைக்கும் அனுபவம், பேராலயங்களில் ஒரு சிறிய சிற்பத்தை சட்டென்று அடையாளம் காண்பதைப் போன்று, ஆஹ், இது அது அல்லவா என்பது போல. அடுத்த கணம் இந்தப் பேராலயத்தில் டெல்யூஸும் ஒரு சிறிய சிற்பம் மட்டும்தான் இல்லையா என்ற பெரு மூச்சும்.
சென்ற வாரத்தில் ஒரு நாள் சீனுவிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஒருவன் வெண்முரசை மட்டுமே வாசித்தால் போதும் அனைத்தையும் அறிந்து விடலாம் என்றார். உண்மைதான், அதை விட உலகிலுள்ள அனைத்தையும் வாசிக்கும் போதே வெண்முரசின் ஆழமும், உயரமும் தெரியும் என்றேன். இல்லையெனில் கவித்துவத்தை வியந்துவிட்டு கடந்து விடுவோம் எனத் தோன்றுகிறது. வெண்முரசிலேயே எத்தனை வரிகள் அப்படி கடந்து போயிருக்கின்றன.
முதல் முறை இமயத்தைக் காண்கையில் இங்கேயே இருந்துவிடலாம் எனத் தோன்றும். ஆனால், நம் சித்தம் சில நாட்களிலேயே கலங்கி விடும். சித்தம் அசைவாலும், செயலாலும் ஆனது. இரண்டுமற்ற, நிலைத்த மலைகளின் நடுவே பூட்டானின் உள் பகுதிகளில் பயணித்த போது அதை உணர்ந்திருக்கிறேன். நாட்கணக்கில் பிற மனிதர்களையே பார்க்க முடியாமல், நாம் அறிந்த வேறு எதுவும் காணக் கிடைக்காமல், காலத்தையும், வெளியையும் அறிய முடியாமல், அல்லது காலத்தையும் வெளியையும் மட்டுமே அறிந்து கொண்டு இருப்பது சித்தம் அழிவதுதான். அங்கிருந்து உடனே ஒடி விடுவதுதான் சரி. பின்பு அது நாம் வாழும் ஒவ்வொரு கணத்திலுமாக, நாம் காணும் ஒவ்வொன்றிலுமாக வளர்ந்து கொண்டே இருக்கும். அது நம் இமயம். நமக்குள் நம்மளவே இருப்பது, அவ்வப்போது அதன் அளவுக்கு நாம் விரிந்து கொள்ளலாம். எதையும் நாம் சிறிதாக்கித்தான் அறிந்து கொள்ள முடியும். அதை பெரிதாக்கி உணர்ந்து கொள்ள அதிலிருந்தும், அருகிலிருந்தும், அன்றிலிருந்தும், அன்றாடத்திலிருந்தும் விலகிச் செல்ல வேண்டும். மாற்று மெய்ம்மையின் வழி.
காட்சி மயக்கங்கள் குறித்த இந்த வரிகளே, தத்துவமாக அறிமுகம் ஆகி, பிறகு வெண்முரசு அதைக் கவித்துவமாக்கும் போதே அறிதல் நிகழ்கிறது. ஒரு கருத்து அல்லது உணர்வு அறிந்தோ அறியாமலோ நமக்குள் ஏற்கனவே விழுந்து இருக்க வேண்டும், விதையைப் போல. காவியத்தின் கவித்துவம் பெய்கையில் அது முளை கொள்கிறது, வாசிப்பு முழுமையாக ஆகிறது எனத் தோன்றுகிறது. அதற்குப் பிறகு அது தத்துவமோ, கவித்துவமோ அல்ல, அறிதல்.
ஏ வி மணிகண்டன்