Wednesday, February 21, 2018

சூதனின் மனைவி:



உண்மையில் கர்ணனின் இளைய அரசியான சுப்ரியையின் மாற்றம் அவளது அணுக்கச் சேடி சரபையைப் போல என்னையும் பதற்றம் கொள்ளத்தான் செய்கிறது. இத்தனைக்கும் வெய்யோனில் என்னை மிகவும் வெறுப்பேற்றிய பாத்திரம் தான் இவள். அந்த வெறுப்பு எதனால் என்றால் அவள் பக்கமும் ஏதோ ஒரு புரியாத ஒரு நியாயம் இருப்பதாகத் தோன்றியதால் மட்டுமே என்பதை இந்த அத்தியாயங்கள் உணர்த்துகின்றன. குறிப்பாக நேற்றைய அத்தியாயத்தில் (குருதிச்சாரல் 65) வரும் அவளது கனவு. அரசியாக, பேரரசர்கள் வாழ்த்த வெளிக்கிளம்பி ஒரு தனித்த விறலியாக ஊர் சுற்றும் ஒரு பெண்ணாக அவள் தன்னை உணரும் அந்த கனவு அவளுக்குள் எப்போதுமே இருந்து கொண்டிருக்கிறது. ஒரு வகையில் அவள் அந்த கனவுக்குள் தான் இருந்து கொண்டிருக்கிறாள். மற்றொரு வகையில் அது அவள் தவம்.  அவளுக்குள் உலகைச் சுற்றிப் பார்க்க விழையும் ஒருத்தி இருக்கிறாள். அவளை இந்த ஷத்ரிய முறைகளை சூழ்ந்து அழுத்துகின்றன. ஒருவகையில் அவள் சிந்து நாட்டரசன் ஜயத்ரதனை வரித்தது கூட அவனது அரசு இருந்த தொலைவு அவளை ஈர்த்ததால் தானோ என்னவோ?

ஆயினும் இக்கனவில் கர்ணன் அவளுக்குள் எவ்விதம் வருகிறான் என்பது மிக நுட்பமாக குறிப்புணர்த்தப்பட்டுள்ளது. அவள் எப்போதுமே கர்ணனை சூதன் என்று தான் நிந்திக்கிறாள். இது அவளது நனவுள்ளம் உணர்வது. ஆனால் அவளது கனவுள்ளம் இதற்கு நேர் எதிரானது. அதில் அவள் கர்ணன் சூதன் என்பதை விரும்புகிறாள். தனது வாழ்வின் பெருங்கனவை, அதை அடையும் வழியை அவன் சூதன் என்பதில் இருந்து பெற்றுக் கொள்கிறாள். ஊர் ஊராகச் சுற்றியலையும் சூதர்கள் குலத்தில் இருப்பவள் மட்டும் தானே இப்பாரத வர்ஷம் முழுவதும் தடையின்றி சுற்ற இயலும். அதிலிருந்தே அவள் தான் ஒரு விறலியாக ஊர் சுற்றும் கனவுக்குள் வருகிறாள். தான் ஒரு விறலி என்ற எண்ணமே அவளுக்குள் இறுதியாக உள்ளது. அதற்கு வழியமைத்தவன் என்ற வகையிலேயே அவள் கர்ணனை விரும்புகிறாள். எனவே தான் அவளது சிறுமைகள் எதுவுமற்ற கர்ணனின் மறு வடிவுகளை மட்டுமே மைந்தர்களாகப் பெறுகிறாள். அவளுக்கு விருஷகேதுவுக்கும், விருஷசேனனுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. தன் ஷத்ரிய குருதி தான் முடிசூடவேண்டும் என்ற முனைப்பும் இல்லை. அவள் தான் மனதளவில் விறலியாக மாறிவிட்டாளே. தவம் எனப் படுவது கனிந்தே ஆக வேண்டும். இதோ அஸ்தினபுரி அவளை ஒரு பேரரசியாக வரவேற்கிறது. ஆனால் அவள் அதற்கெல்லாம் அப்பால் சென்று விட்டாள். அவளுக்குள் இருந்த விறலி வெளிவருகிறாள்.

இத்தனை வருடங்களில் இரு அரசியரும் கர்ணனை ஒவ்வொரு வகையில் தன்னவனாக வரித்து வைத்திருக்கின்றனர். கூடவே அவர்களும் மாறியிருக்கின்றனர். பெரும் விந்தை என்பது சூத மகளாக வந்து தற்சிறுமை குழப்பத்தால் (Inferiority Complex)பீடிக்கப்பட்டு இருந்த விருஷாலி அரசியாக நிமிர்ந்து விட்டிருக்கிறாள். ஷத்ரிய மேன்மை பேசி, அரசியாக வந்த சுப்ரியை ஒரு விறலியாக மலர்ந்து விட்டிருக்கிறாள். மாறாக கர்ணனும் சூதன் என்ற தற்சிறுமை கொள்பவனாக இருந்ததில் இருந்து ஒரு அரசனாக உருமாறி இருக்கிறான். வெண்முரசில் நான் எப்போதுமே வியப்பது கதாபாத்திரங்களின் வளர்சிதை மாற்றங்களைத் தான். மாறாமல் இருப்பவர்கள் இறந்தவர்கள் மட்டுமே இல்லையா?

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்