Thursday, February 8, 2018

துரியோதனன் கிருஷ்ணன் சம்வாதம் -2 (குருதிச்சாரல் -49)

 


கிருஷ்ணரின் பதில்  தர்க்கம்.
   உண்மையில் இவ்விவாதத்தை ஆரம்பிக்கவேண்டியவர்  கிருஷ்ணர்.  ஆனால் துரியோதனன் முதலிலேயே தன் விவாதத்தை வைத்துவிட்டிருப்பதனால் அவன் தர்க்கங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு அவர் ஆளாக்கப்படுகிறார். அவன் தர்க்கங்களுக்கு அளிக்கப்போகும் பதில்  வேதத்திற்கும் 

வேதாந்தத்திற்குமான ஒரு விவாதமாக திசைதிரும்பிவிடும். கிருஷ்ணன் தன்  புதிய வேதத்தை நிறுவவே இந்த பேரழிவை உருவாக்கும் போர்  நிகழ்த்தப்படுகிறது என்ற பழி அவன்மேல் வந்து சேரும்.    மேலும் கணிகர் அவையின் கவனத்தை கிருஷ்ணனின் பக்கம் போகாமல் கர்ணனின் தலைமையைப்பற்றி ஒரு விவாதத்தை துவக்கிவிடுகிறார்.  யாரும் கவனம் செலுத்தாத அந்த அவையை தன் பக்கம் ஈர்க்க ஒரு பெரும் வெடியை கொளுத்திப்போடுகிறான் கிருஷ்ணன். 


அந்தணர்களின் தலைவரை நோக்கி “உத்தமரே, நீங்கள் உடனடியாக அவையிலிருந்து வெளியேறவேண்டும்” என்றார். அவர் திடுக்கிட்டு “என்ன சொல்கிறீர்கள்?” என்றார். “நீங்கள் வேதமறிந்த அந்தணர் என்றால் இனி இந்த அவையில் நின்றிருக்கலாகாது. வெளியேறுக… இக்கணமே வெளியேறுக!” என்றார் இளைய யாதவர்.


  அந்தணர்களை இவ்வாறு அவன் கூறுவது மொத்த அவையினரையும் அவன் மேல் சினம் கொள்ளச்செய்கிறது. இயல்பாக அவன் அவையின் கவனத்தை கவர்ந்துவிடுகிறான். அவன் ஏன் அதைச் சொன்னான் என கேட்பதற்கான ஆவலை அவசியத்தை அது ஏற்படுத்திவிடுகிறது. இனி அவன் இதழ்கள் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லும் அனைவர் காதிலும் தெளிவாக விழும். மற்றும் அவன் சொல்லை மறுப்பதற்கான மனநிலையோடு இருக்கும் ஷத்திர்யர்களோடு அவன்  நேரடியாக பேசாது விடுகிறான். அவன் அந்தணர்களுடன் பேசுவது ஷத்திர்யர்களைக் கொதிப்படையச் செய்தாலும்  இனி அவனை அவர்கள்  அலட்சியம் செய்ய முடியாது. ஏனென்றால் வேதத்தை எதிராக பேசப்போகிறான் என்று நினைத்துக்கொண்டிருக்கும் அவையில் இந்த அவை வேத மறுப்பு செய்திருக்கிறது ஆகவே அந்தணர்கள் இதை விட்டு வெளியேறவேண்டும் என்று சொல்கிறான். அதற்கான காரணங்களாக அவன் கூறுவது:
வேதத்தைச் சொல்லும் அந்தணர்களுக்கு வேதச்சொல் காக்கப்படுகிறாதே என்று கண்காணிக்கும் பொறுப்பு இருக்கிறது. 


ஒரு அவையில் பிரம்மமென நிற்பது சொல்லே. ஆகவே சொல்லை நிலை நிறுத்தாத அவை வேதத்திற்கு எதிரானது. 


வேதத்திற்கு எதிரான அவையில் அந்தணர்கள் இருப்பது அவர்கள் தருமத்திற்கு  விரோதமானது. 


   கிருஷ்ணரின் இந்த தர்க்கம் வேறு ஒன்றையும் செய்கிறது வெறும்  வேதம் ஓதுதலும் சடங்குகளைச் செய்வது போன்றவையல்ல  வேதச்சொல் காக்கப்படுகிறதா எனப் பார்ப்பதுதான் ட்னம் முக்கிய கடமையென  அந்தணர்களுக்கு நினைவுறுத்துவதாகவும்  அமைகிறது. உண்மையில் அப்படி ஒரு கடமை இருப்பதை அப்போதுதான் அந்தணர்கள்  உணர்வதாக தெரிகிறது.  


  இப்போது இந்த அவையில் நிகழ்ந்த வேத மறுப்பென கிருஷ்ணன் சொல்வது எது என்றும் அது உண்மையில் வேத மறுப்புதானா என்பதைப்பற்றி அறிய வேண்டிய கட்டாயத்திற்கும்  அவையினர் உள்ளாகிவிட்டனர்.  கிருஷ்ணன் புதிதாக எதையும் கூறவில்லை.  தருமன் பதிமூன்றாண்டுகள் கழித்து வந்தால் இந்திரபிரஸ்தம் மீண்டும் அவனுக்கு அளிக்கப்படும் என்ற சொல் காக்கப்படவில்லை என்பதுதான்.  இதை அவன் முதலிலேயே சொல்லி இருந்தால் இந்த அளவுக்கு கவனம் பெற்றிருக்காது.  இந்த தர்க்கத்தை ஒரு உணர்ச்சிமிகு நாடகமென வைக்கிறான்.  வேதம் காக்க என்று திரண்டிருக்கும் அரசர்கள் இதை  சற்றும் புறந்தள்ள  முடியாது. இப்போது துரியோதனன் என்னால்  தருமனுக்கு அரசை  கொடுக்க முடியாது என்று 
ஒற்றை வார்த்தையில் மறுத்து சொல்லிவிட முடியாது. அப்படி சொன்னால் அந்தணர்கள் அவன் அவை விட்டு நீங்கவேண்டியிருக்கும். அரசர்கள் வேதம் காக்கக் எனக் கூடியவர்கள்.  


இனி துரியோதனனுடன் இருந்தால் வேத எதிர்ப்பாளர்கள் என ஆகிவிடுவார்கள். அப்படியானால் அவர்கள் ஷத்திரியர்கள் எனச் சொல்லி தனிப்பெருமைகொள்ள  முடியாது. ஆகவே துரியோதனன் தருமருக்கு அளித்த சொல்லை காப்பாற்றுவதாக உறுதியளிக்கவேண்டும். அதைத் தவிர வேறுவழியில்லை என்று தோன்றும் நிலைக்கு கிருஷ்ணரின் தர்க்கம் ஆளாக்கிவிட்டது.  அங்கு கூடியிருக்கும் அரசரகளின் மனதை மாற்றுகிறது இந்தத் தர்க்கம்.  அரசர்கள் சிலரை  துரியோதனனனை எதிர்த்து குரலெழுப்ப வைக்கிறது.  


அந்தணர்களுக்கு சரியான பதிலை அளிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.  இத்தகைய விளைவை  சகுனியே எதிர் பார்க்கவில்லை என்று தோன்றுகிறது.  ஆகவே அவர் இதற்கான பதிலை தேர்வதற்காக நேரம் எடுத்துக்கொள்ள நினைத்து அவகாசம் கேட்டுக்கொள்கிறார்.  துரியோதனனை  இதுவரை எதிர்த்து சொல்லாத துரோணர் இப்போது அவன் தன் சொல்லைக்காக்க வேண்டும் என்று கூறுகிறார்.  தர்க்கம் முழுதும் இப்போது துரியோதனன் கையை விட்டு நழுவியதாகத் தோன்றுகிறது.  இப்போது துரியோதனன் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.   

தண்டபாணிதுரைவேல்