Saturday, February 10, 2018

கண்ணனின் மயிற்பீலி



அன்பு ஜெயமோகன்
        


              
 கண்ணனின் மயிற்பீலி யால் தடவப்படாத பெண்களே இல்லை யென்ற நிலைப்பாடு தங்களின் கதாமாந்தர்களின் ஊடே செல்லுவதே தங்களின் படைப்பை நோக்கி எங்களைப் போன்ற வாசகர்களை,அதிலும் வாசகிகளை "வடக்கு நோக்குபொறிகளை" போல ஈர்க்கின்றது என்றே சொல்ல வேண்டும்.
      .   
 இந்நிரையை விட எதிர்நிரையிலே  கண்ணனின் மீதான ப்ரேமம் விஞ்சி நின்று துலா முள்ளினை நிலைக்கொள்ள செய்கிறது என்றே நினைக்கிறேன். கண்ணனின் "மயிற்பீலி"அடுக்கில் அம்பை முதல் துச்சளை, அசலை,தாரை, பானுமதியும் அவளின் அத்தை சியாமளை வரை இடம்பெற்றுள்ளனர் என்பதை நினைப்பதே வியப்பளிக்கிறது!

        
 எனினும் இப்பிறவியில் இச்சுழலிலுருந்து விடுபடும் நிலை தனக்கில்லை  என்று தன் கணவன் மீதான காதலுடனும் ,கிருஷ்ண பக்தியூடனும், இருநிலைப்பாட்டினை யால் வருந்தும் பானுமதியையும் அதனைத் தேற்றுமுகமாக அசலையின் பதிலும் வெகு சிறப்பாக தங்களின் சொல்லாட்சியால் நிறுவியுள்ளீர்கள் என்றே சொல்ல வேண்டும்.

          
துரியன் அனைவராலும்  புறக்கணிக்கப்பட்டாலும் துணைவியென இடம்வீற்றிருக்க பானுமதி முனைவதில் வியப்பேதுமில்லை.ஆனால் தன் துணைவனின் நெஞ்சூரூம் கலிநஞ்சில் பாதி தனக்கு அமுதானதையும் ஏற்று கண்ணணை துறக்க முனிகிறாள் ,அச்சான்றே அவளின் கண்ணீர் அவனை வரவேற்க்க சென்றவிடத்தில்.

          
ஆனால் கொடிய இந்நிலை எம்மானிடவர்க்கும் ஏற்புடையதன்று.அவள் இதனையே அவ்வெண்மலர் தன்னை ஆழியாக நெருங்க போவதையும் அதனை அசலை  அலட்சியமாக, இரண்டும் கண்ணனுக்கு ஓன்றே என்று புலப்படுத்துவதும் சுவாரசியமிக்க இடமாகும்.

        
கண்ணனால் அணியாக சூடப்பட்ட பீலியாக விளங்கியவர்கள் இனி அஸ்திரத்தின் மறுமுனையின் சிறகாக ,அவன் தாள் பணிவதை ஆசானின் எழுத்தோவியத்தில் காண காத்திருக்கிறோம்.

              அன்புடன்,
                       செல்வி அழகானந்தன்,
                                            கடலூர்.