முன் சென்று தன் ஊழின் இறுதிநுனியை அறியும் பொறுப்பு மானுடருக்கு தெய்வங்களால் அளிக்கப்பட்டுள்ளது. பின் திரும்பி தன் ஊழின் முதல்நுனியை எண்ணி எண்ணி ஏங்குபவர் ஒருபோதும் அந்த மீட்பை அடையவியலாது. செல்லாது தேங்கிய எதுவும் அழுகி நாறும். அச்சுழலில் பிறப்பாலேயே வீசப்படும் மானுடர்போல் அளியர் எவருமில்லை. அவர்களுக்கு மீட்பருளும் தெய்வங்கள் இல்லை, வஞ்சமே அந்த பீடத்தில் அமர்ந்திருக்கிறது. முன்னோர் சொல் என ஏதுமில்லை, பிறிதொரு மொழிகொள்ள செவி ஒப்புவதில்லை. அங்கரே, அவர்களுக்கு உலகின்பமும் இல்லை. ஆறா நோய் என வாழ்வெலாம் தொடர்வது அந்த அறியமுடியாமை –
என்று துரியோதனன் சொல்லும் இடம்
கர்ணனை மிகச்சரியாக வகுத்துச் சொல்கிறது. ஆகவேதான் அவன் மனம்தளர்ந்துவிடுகிறான். கர்ணனை
அப்படி அணுக்கமாக அறிந்து சொல்ல துரியோதனனால்தான் முடியும். கர்ணன் அதற்குமேல் ஒன்றுமே
சொல்வதற்கில்லை. அவனுடைய அத்தனை துன்பங்களுக்கும் காரணம் குந்திதான் என்பதை அந்தச்சபையில்
துரியோதனன் குறிப்புணர்த்திக்காட்டிவிட்டான். அதற்குமேல் அதைப்பற்றி ஒரு வார்த்தைகூட
கர்ணனால் சொல்லமுடியாது. கர்ணனின் வஞ்சம் கசப்பு வீழ்ச்சி தர்மச்சரிவு எல்லாமே இதனால்தான். கர்ணனுக்கு மட்டும் தத்துவத்தேடலோ ஆன்மிகமோ ஒன்றுமே இல்லை. அவன் மண்ணோடு கட்டப்பட்டவன். அது இதனால்தான்
அதோடு இன்னொன்று உண்டு. நம்மைப்பற்றி
ஒருவர் தெளிவாக அறிந்து நம்மிடமே சொன்னால் நாம் திகைத்து உடைந்துவிடுவோம். பேசவே முடியாது.
கர்ணன் அழ ஆரம்பிப்பதைக்கூட இப்படித்தான் என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது
சாரங்கன்