பலந்தரையின் பீமன் மீதான் காதல் உணர்ந்த ஒன்று தான் என்றாலும் பெண்கள் அவர்களே அதைச் சொல்வது வரை உறுதியாக பருவடிவில் அறிந்து கொள்ள ஆண்களுக்கு வழியில்லை. உண்மையில் அக்காதலை முழுமையாக உணர்ந்தவர்கள் அங்கே இருவர் மட்டுமே, பீமனும், இளைய யாதவரும். மிகச் சரியாக அதை வெளிக் கொண்டு வந்து விடுகிறார் இளைய யாதவர். அவளது கோபம், சிறுமை, நச்சு நா, குருதி கொள் விடாய் அனைத்தின் ஊற்றுக் கண் ஒன்றே, பீமன் அவளுக்கு மட்டும் உரியவன் அல்லன் என்பது தான். அதை விட அவனையே திரௌபதி முதன்மையாக நெஞ்சில் நிறுத்தி இருக்கிறாள் என்பதும், அவளையே அவனும் விரும்புகிறான் என்ற எண்ணமும், தான் அவனுக்கு ஒரு பொருட்டில்லை என்ற எண்ணமும் அது தரும் தனக்கென்று எவருமில்லை என்ற பாதுகாப்பின்மையும். இன்று இடும்பியைப் பற்றிப் பேச்சு வந்த பிறகே அவளுக்கு ஒரு உண்மை உறைக்கிறது. பீமன் அவனது மகளிர் அனைவரின் மீதும் பெரும்காதல் கொண்டவன், தன் முழு உள்ளத்தையும் அளித்தவன். அது சில காலமே வாழ்ந்த இடும்பியாக இருந்தாலும், அவர்களுடனே கானேகிய பாஞ்சாலியாக இருந்தாலும். அதை முழுமையாக அவள் உணர்வது குந்தியிடம் பேசுகையில்.
வெண்முரசில் வரும் சம்பவங்கள், கதை மாந்தர்கள் ஒரு முழுமையை கதையின் போக்கில் அடைவதை நாம் பல முறை கண்டிருக்கிறோம். பலந்தரை எப்போதுமே பதை பதைத்துக் கொண்டே இருப்பவள். அந்த பதபதைப்பு அவளிடம் எரிச்சலாக வெளிப்படுகிறது. உள்ளத்தின் எரிச்சல் உடலில் எளிதாக வெளிப்படக் கூடியது. பலந்தரைக்கு அது அவள் ஆடையாக வெளிப்படுகிறது. இதை வெண்முரசு “எப்போதும் ஆடையில் ஒரு பகுதி அவள் உடலில் இருந்து சரிந்து எரிச்சலை தான் வாங்கிக்கொள்ளும். அன்று அவளுடைய தலையாடை சரிந்தபடியே இருந்தது.” என்கிறது. இன்று பலந்தரை தன் காதலையும், காதலனையும் முழுமையாக உணர்ந்த பிறகு அவள் இதுகாறும் கொண்டிருந்த படபடப்பு அகன்று விடுகிறது. பெண்களின் இந்த படபடப்புக்கு ஆதாரமான உணர்வு அச்சம், பாதுகாப்பின்மை. இன்று பீமனை முழுமையாக அவள் அறிந்து கொள்ளும் போது அவளுக்கு அந்த அச்சம் முழுமையாக விலகி விடுகிறது. நீர்க்கோலத்தில் திரௌபதி இதையே சாம்பவனின் மனைவிக்கு கூறுகிறாள், பீமனிடம் அடைக்கலமாகும் படி. அவ்வாறு செய்கையில் அவளது அச்சம் முழுமையாக அகன்று விடும் என்கிறாள். பலந்தரையில் உள்ளத்தில் ஏற்பட்ட மாற்றம் உடலிலும் வெளிப்பட வேண்டும் அல்லவா!! அவளது முகத்திரை இப்போது சரியாக நிற்கிறது. நழுவுவதில்லை.
அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்