Sunday, February 25, 2018

ஊழெனும் பகடை




புதுவை வெண்முரசு கூடுகையில் தண்டபாணி துரைவேல் உரை



பெருவெளி நடனம்


             
அணுவிலும் அண்டத்திலும் அனைவர் அகத்திலும் நிகழ்கிறது அவன் ஓயாப்பெரு நடனம்.

அவன் என்றும் அவள் என்றும் அல்லதென்றும் உள்ளதென்றும் ஆதி அந்தமின்றி ஆடும் அரைப்பெண் அவன்.

வன் ஆட்டத்தால் விரிகின்றது அண்டம், சுடர்கின்றன விண்மீன்கள், உருள்கின்றன கோள்கள், இணைகின்றன அணுக்கள்,  உருக்கொண்டன தனிமங்கள்,  நிலமென்றும் நீரென்றும்   


பிறப்பெடுத்தன ஐம்பூதங்கள்.அவர் முயற்சியினால் திருதராஷ்டிரன் சிறுமை சற்றும் அண்டாத பெரு மனிதராக வளர்ந்திப்பதை பின் வந்த வெண்முரசு  நூல்களில் நாம் காண்கிறோம்.   அவன் எண்ணத்துளிகள் புவியெங்கும் சிதறி உயிர்த்தொகைகளாக பிறந்து வளர்கின்றன. 


தன்னை நாயக நாயகனாக பிரித்து நடுவில் அந்த உயிர்களை காய்களாக்கி பகடையாடுகிறான் பரமன்.     வெல்வதும் வெட்டுப்பட்டு வீழ்வதுமாக தோன்றுவது எல்லாம் உயிர்களுக்கு மட்டுமே.   அவன் கைவழி  பகடைகள் உருள்வதே ஊழென ஆகிறது.  விழைவு, இலக்கு, பாசம், கோபம், பரிவு, வஞ்சம், செருக்கு, அழுக்காறு, சலிப்பு, களிப்பு என்று விழும் பகடை எண்களின் வழி  நிகழ்த்தப்படுகிறது ஆட்டம்.   அந்தப் பரமனின் சிந்தையினால் நகர்த்தப்படும் சிறு காய்மட்டுமே நானென  உணர்பவனாக என்றும்  இருக்க,  ஈசன் அருள்வானாக.


                                                      *******
வெண்முரசின் அடுத்த  நூலான மழைப்பாடல்  நம் முன்னே ஆயிரம் இதழ் தாமரையாக மலர்ந்து ஒளிவீசி நிற்கிறது. அதன் பேரழகின் முன் பித்தாகி சுழலும் வண்டாக நான் இருக்கிறேன்.  அதில் பெருகி ததும்பி நிற்கும்  தேனை எடுத்து  என்னால் முடிந்தவரை  என் சிறிய சிந்தையில்  தேக்கிக்கொள்ள எனக்கு உதவும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

பரமனின் பகடையாட்டம்


          பரமன் தன் துணைவியோடு ஆடும்  பகடையாட்டம் ஏன் முதலில் இந்நூலுக்கு பாயிரமாக வந்தது என்பதை நான் சிந்தித்துப்பார்க்கிறேன்.  பகடையாட்டத்தில் யாருக்கு எந்தெந்த எண்கள் விழும் என்பது யாராலும் கணிக்க முடியாது.   ஆனால் அப்படி விழும் எண்களே ஆட்டத்தின் போக்கை நிர்ணயிக்கின்றன.  எண் விழுவது ஊழ்,  அதை பயன்படுத்தி காய்களை தேர்ந்தெடுத்து அவற்றை செலுத்தவேண்டிய திசைகளை முடிவு செய்து நகர்த்துவது மதி. இது ஊழும் மதியும் நிகழ்த்தும் முரணியக்கம்.  பகடையில் வரும் எண் பாதிப்பை உண்டாக்கும்போது மதிநுட்பத்தால் அதை சரி செய்ய பார்க்கப்படுகிறது. மதிநுட்பத்தின் ஆதிக்கத்தை ஊழ் கட்டுப்படுத்துகிறது.   


             மழைப்பாடலில் சத்தியவதி பீஷ்மர் விதுரர் சகுனி குந்தி போன்றவர்களின் கூரிய  மதி நுட்பங்களைத்தாண்டி  அவர்கள் நோக்கங்களை எல்லாம ஊழ் என்னும் பகடையால் சிதறடிக்கப்படுவதைக் காணப்போகிறோம்.   அந்தப் பகடையின் எண்களாக விழப்போவது அம்பிகை அம்பாலிகை ஆகியோர் பிள்ளைப்பாசத்தில் கொள்ளும் தன்னலம், குந்தி,  சகுனி ஆகியோரின் அரசியல் பேராவல்கள்.
                       

பரசுராமரும் ஒரு  பகடைக்காயே


          பரசுராமர் ஊழின் இந்த இடைவிடாத விளையாட்டை நிறுத்தப் பார்க்கிறார். ஆனால் அவரே ஊழ் என்ற வலைப்பின்னலில்  ஒரு  கண்ணியாக ஆகும் முரண் ஏற்படுகிறது.   அவர் ஷத்திரியர்களினால் கொல்லப்பட்டவர்களின்  அழுகுரலை கேட்கிறார்.


‘நாங்களெல்லாம் அழியாத கண்ணீர்த்துளிகள்…. மண்ணில் ஷத்ரியர்களின் அநீதியால் வதைக்கப்பட்டவர்களால் உதிர்க்கப்பட்டவர்கள். அவர்களின் அகம் அணையாமல் எங்களுக்கு மீட்பில்லை’ என்றன.  


    
அவர்களின் துயர் துடைக்க சீற்றம்கொண்டு எழுகிறார் பரசுராமர்
குருதிவெறி கொண்ட மழுவுடன் மலையிறங்கி ஊர்புகுந்த பரசுராமன் இருபத்தொரு முறை பாரதவர்ஷம் முழுக்கச் சுற்றி ஷத்ரிய குலங்களை கொன்றழித்தான். அவர்களின் கோட்டைகளை எரித்தான், அவர்களின் சிரங்களைக் குவித்தான். அவர்களின் குலங்களை கருவறுத்தான். அவர்களின் ஒவ்வொருதலைக்கும் ஒரு கண்ணீர்மணி விண்ணகம் சென்று ஒரு விண்மீனாகி மண்ணைப்பார்த்து புன்னகைசெய்தது. 


அனைத்து வஞ்சத்தையும் முடித்து வந்து பரசுரமர் நிற்கும்போது அவர் முன் இப்போது ஷத்திரியர்களின் அவலம் ஐந்துகுளங்களில் நிறைந்து நிற்கிறது.
இடியோசைபோல வானில் மெய்யிலிக் குரல் எழுந்தது. ‘நீ கொன்ற ஷத்ரியர்களின் குருதி முதல் குளம். அவர்களின் பெண்களின் கண்ணீரே இரண்டாவது குளம். அவர்தம் குழந்தைகளின் அழுகை மூன்றாவது குளம். அவர் மூதாதையரின் தீச்சொல் நான்காவது குளம். பரசுராமனே, ஐந்தாவது குளம் அவர்களின் உருவாகாத கருக்களின் ஏக்கமேயாகும்.’


  பரசுராமர் செய்தது ஒரு முடிவான தீர்வல்ல. உண்மையில் பரசுராமர் பரமனின் பகடையாட்டத்தை நிறுத்த முயல்கிறார். மாறாக அவர் செயல் இன்னொரு ஆட்டத்தை ஆரம்பித்துவைக்கிறது.    பகடைஆட்டத்தில் இருக்கும் காய்களில் ஒன்று மட்டுமே தான்  என அறியும் அவர் செயல் துறந்து செல்கிறார்.

அஸ்தினாபுரத்தை சுமக்கும் பீஷ்மர்:


          முதற்கனலில் பீஷ்மர் கைவிடப்பட்டவராக பழி சுமப்பவராகக் கண்டோம். அஸ்தினாபுரம் அவரை மறுதலித்து வெளியேற்றியிருந்தது.   இப்போது ஒரு நாடோடியாக, ஒரு  காவல் வீரனாக   தன் ஆளுமையை மறைத்து  வாழ்ந்து வருகிறார். அவர் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டு  இருந்தாலும் நம் மனம் பதைக்கும்படி இருக்கிறது.  மேலுலகில் சந்தனுவின்  கண்களில் நீர் வற்றாது வழிந்துகொண்டிருக்கும் என நினைக்கிறேன்.  ஊழ் சிதறடித்த முதற்காய் என அவர் இருக்கிறார்.   ஆனால் அவருக்கு அஸ்தினாபுரத்திற்கு சிக்கல் என அழைப்பு வந்த டுத்த கணம்   அவர் அஸ்தினாபுரம் விரைகிறார். அஸ்தினாபுரத்தின் சிக்கல்களை எப்படி தீர்ப்பது என்று யோசிக்கிறார். அதன் வளத்தை எப்படி  வாணிபத்தின் மூலம் பெருக்கலாம்  என்று பேரரசி சத்தியவதிக்கு ஆலோசனை கூறுகிறார்.  தான் காவல் வீரனாக அலைந்து திரிந்த அனுபவம் எல்லாம் தன் நாட்டு வளத்தை பெருக்குவதற்கான பயிலரங்குகளாக கொண்டிருந்திருக்கிறார் என்பது நமக்கு தெரிய வருகிறது.

 சிறுமையால் சிறப்புறும் நகரம் 


       உலகில் எண்ணிறந்த மக்கள் வாழ்ந்தாலும் அவர்கள் வாழ விழைவது நகரங்களில்தான்.  மனிதர் வாழும் புவிப் பரப்பில் மொத்த நகரங்களின் பரப்பை சேர்த்தாலும்  மிகச் சிறிதுதான்.  நகரத்தில் வாழ இயலாதவர்களே கிராமத்தில் வாழ்கிறார்கள் என்று தோன்றுகிறது. ஆனால் நகரம் ஒன்றும் அப்படி சிறந்த வாழ்விடம் என்று கூற முடியாது.   வெண்முரசு நகரத்தை அப்படி ஒன்றும் போற்றிச் சொல்லவில்லை. 


இப்புவியில் எத்தனையோ நகரங்கள். வண்ண ஒளிவிடும் காலக்குமிழிகள். வரலாறு விரல்தொட்டு மீட்டும் சிறுபறைகள். எதிர்காலப்பறவை இட்டு அடைகாக்கும் சிறுமுட்டைகள். நகரம் மானுட இழிமைகளை அள்ளிவைத்த சிறு கிண்ணம். அழுக்கு ஒழுகும் நரம்புகளோடும் உடல்கொண்ட குருட்டு மிருகம். ஏணிகளின் திறப்பில் நாகங்கள் வாய்திறந்து நிற்கும் பரமபதக்களம். தூயதென எந்நகராவது மண்ணிலுண்டா என்ன? நகரங்களை அழகுறச்செய்வதே அவற்றில் நுரைக்கும் கீழ்மைகள் தானோ? அதனால்தான் அத்தனை நகரங்களும் இரவில் உயிர்த்துடிப்பு கொள்கின்றனவா? ஒருவரை இன்னொருவர் மறைக்க எதையும் எவரும் செய்யலாகும் ஒரு சிறுவெளியன்றி நகரங்கள் வேறென்ன?


       ஆம் சிற்றூர்களில் ஒருவன் தவறு செய்தால அவன் தனித்து தெரிவான். ஆனால் நகரத்தின் நெருக்கம் ஒருவன் தவறுகளை, கீழ்மைகளை கூட்டத்தில் மறைத்துக்கொள்கிறது. ஆகவே மக்கள் நெருக்கம் குறைந்த சிற்றூர்களில் காண முடியாத விடுதலையுணர்வை நகரங்களில் மக்கள் பெறுகிறார்கள். சிற்றூரில் பெருந்தவறு என இருப்பது நகரத்தில் ஒரு வணிக அல்லது அரசியல்  நுட்பம் என்று ஆகிறது.  சிற்றூரில் உழைத்தால்  பொருள் ஈட்டலாம்  என இருக்க நகரத்தில் வாய்ப்பிருந்தால் பொருளீட்டலாம் என இருக்கிறது. பெருகி நிற்கும் மக்கள் கூட்டத்தின் காரணமாக சற்றே விழிதிறந்து வைத்திருப்பவனுக்கு வாய்ப்புகள் கிடக்கின்றன.  ஆனால் இவை பெரும்பாலும் மனித அறத்திற்கு ஒவ்வாதவை. ஆனால் நகரவாழ்க்கையில் இவையெல்லாம் தவறில்லையென நம்மை ஆற்றுப்படுத்திக்கொள்ல முடிகிறது. மேலும் நம்மைச் சுற்றி இதைப் போன்று  'சாதுர்யமான'  செயல்களை செய்பவர்கள் சூழ்ந்திருப்பதால்  நாமும் அவ்வாறு செய்யும்போது அதை அறமீறல் என  உணராதிருக்கிறோம். இத்தகைய கீழ்மைகள் நகர வாழ்வை இலகுவானவையாக மாற்றுகின்றன.  ஆகவே மக்கள் நகரங்கள் நோக்கி செல்லத் துடிக்கின்றனர்.

  வனத்தை வளர்க்கும் வனதீ


    வனத்தில் வளர்ந்த பெருமரங்கள்  முதிர்ந்து விழத் தொடங்கியபின் வனம்  தன் அடர்வை செழிப்பை இழக்கத்தொடங்குகிறது.  புதிய மரங்கள் எழவிடாமல் நிலத்தில் நிழல் பரப்பி நிற்கின்றன முதிய மரங்கள். விழுந்த மரக்கிளைகள் புவியை மூடி விதை முளைப்பதை தடுக்கின்றன.  எழும் வனத்தீயினால் இந்த முதிய மரங்களெல்லாம் சாம்பலாகி மண்ணில் எருவென ஆகின்றன. பின்னர் மண்ணில் புதைந்து உயிர்காத்து நிற்கும் விதைகள் பெரு மரங்களாக முளைத்தெழுந்து வனம் நிறைக்கின்றன.  இது வனத்தில் பற்பல ஆண்டுகளாக நடக்கும் சுழற்சி. மனித சமூகம் என்ற  வனத்தில் அரசுகள் என்ற பெருமரங்கள் இவ்வாறு வீழ்வதும் எழுவதும் நடந்துவருகின்றன.   அதற்கான ஒரு பெரும்போரை விதுரன் எதிர்நோக்குகிறான். அதை பீஷ்மரும் உணர்ந்திருக்கிறார். ஆனால் அந்தப் பெரும்போர் எனும் பெரு நெருப்பு அஸ்தினாபுர அரசியல் உராய்வுகளால் கிளம்பும் தீப்பொறியே உருவாக்கப்போகிறது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்களா    எனத் தெரியவில்லை.

 வேழாம்பல் பறவை


    மழை நீருக்காகவென காத்து நிற்கும் வேழாம்பல் பறவை என அஸ்தினாபுர நகரை வெண்முரசு நேரிடையாகக் கூறினாலும் எனக்கு சத்தியவதி அவள் கனவுகளை பீஷ்மரிடம் விரிக்கும்போது   தன் அரசியல் விழைவுகளின் நிறைவேற்றத்திற்காக தாகம்கொண்டு காத்திருக்கும் வேழாம்பல் பறவையெனஅவள்  தெரிகிறாள். அந்த மழையை எந்த வேள்வியை நிகழ்த்தியாவது கொண்டுவர அவள் பீஷ்மரை பணிக்கிறாள். அவள் அதற்காக பீஷ்மரை நடத்தச்சொல்லும் வேள்விதான் திருதராஷ்டிரனுக்கு காந்தாரியை மணமுடித்துவைப்பது.  அவளின் தீர்க்கதரிசனம் உண்மையாவதை நாம் காண்கிறோம் காந்தார நாட்டுடன் உறவு ஏற்பட்ட பிறகு அஸ்தினாபுரத்திற்கு பாரதத்தின் மற்ற அரசுகளிடமிருந்து எவ்வித அச்சுறுத்தலும் எழவில்லை என்பதை நாம் கண்டிருக்கிறோம். தன் பிள்ளைகளுக்கு அரசபதவி என்ற காத்திருக்கும் அம்பிகையுஇம் அம்பாலிகையும்கூட வேழாம்பல் பறவைகளே.

ரதிவிஹாரி


காமத்தில் விளையாடுபவன். ஆம், காமத்தை ஆடுபவன் அல்ல. காமத்தில் மூழ்கியவன் அல்ல. காமத்தின் அடிமையும் அல்ல. காமத்துடன் விளையாடுபவன். தீயுடன் விளையாடும் ரசவாதிபோல. சர்ப்பத்துடன் விளையாடும் விடகாரி போல. யானையுடன் விளையாடும் மாதங்கிகன் போல. ரஸவிஹாரி. மோஹவிஹாரி. மிருத்யுவிஹாரி…


அப்படி ஒருவனால் காமத்தில் விளையாடித் திளைக்கமுடிந்தால் அவனறியும் காமம் எத்தனை மகத்தானதாக இருக்கும்? அது எல்லையற்ற மதுரக்கடல். முடிவற்ற எழில்வெளி. அது பிரம்மமேதான். அறுசுவையில் ஐந்தையும் களைந்து இனிமை மட்டுமாகத் தோற்றமளிக்கும் பிரம்மம். பிரம்மத்தை நோக்கி ஆன்மா செல்லும் நிலை அல்ல, பிரம்மம் ஆன்மாவில் வந்து நிறையும் நிலை. அதை அறியும் மனிதப்பிறப்பு ஒன்று மண்ணில் நிகழமுடியுமா என்ன?       

             ஆனால் விதுரனின் காலத்திலேயே அப்படி ஒரு பிறப்பு நிகழ்கிறது.  அந்த பிறப்பெடுப்பவன் எழுப்பப்போகும்   குழலோசை இப்பொதே ஒலிக்கத் தொடங்கிவிட்டது.  அவன் விளையாடப்போகும்  களன்கள் இப்போதே சீரமைக்கப்படுகிறது. அவன் வஞ்சங்களோடு விளையாடப்போகிறவன், ஆனால் அவனிடம் ஒரு துளி வஞ்சமுமிருக்கப்போவதில்லை. அவன் அகங்காரங்களோடு பொருதப் போகிறவன்,   ஆனால் அவனுக்குள் ஒரு துளியும் அகங்காரமுமில்லாதிருக்கப்போகிறவன். பெரும்  விழைவுகளோடு மோதிவிளையாடப் போகிறவன், ஆனால் அவனுக்கென  விழைவுகள்  ஏதுமற்றவனாக இருப்பான்.  மனிதர்களில் ஒருவனாக வாழ்வெனும் ஆட்டத்தை ஆடப்போகிறவன்,  ஆனால் அவன் மனிதர் அடையும் இழிவுகள் எதுவும் அண்டமுடியாதவன். அவன் ஏறிவரும் காலயானையின் மணியோசை இப்போதே வெண்முரசில் ஒலிக்கிறது.

தாய்மையின் பேதமை


                 அம்பிகை அம்பாலிகை தன் பிள்ளைகள் சார்பாக விதுரனிடம் வாதிடுவது பேதமையின் உச்சம்.  அவர்கள் அறிவுக்கண்ணை தாய்மை மறைக்கிறது. தான் உரைப்பது பேதமை என்று அவர்களுக்கே தெரியும்.  ஆனாலும் தம் பிள்ளைகள் நலன்பற்றிய சிந்தனை  அவர்களின் தர்க்க அறிவை குலைத்துவிடுகிறது என நினக்கிறேன்.  மேலும் அவர்கள் தம் வாழ்வின் பொருளை,  குறைகளோடு பிறந்துவிட்ட தம் ஒரே மகன்களில்  காண்கின்றனர். ஆகவே அதற்காக மட்டுமே அவர்கள் உள்ளம் சிந்திக்கின்றது. அவர்களின் பிள்ளைகளின் நலனைத்தவிர மற்றவற்றைப்பற்றி சிறிதும் சிந்தியாது உரைக்கும் சொற்கள் பேதைமை நிறைந்தவையாக இருப்பதில் வியப்பொன்றுமில்லை.

திருதராஷ்டிரன் அடையும் தெளிவு


              திருதராஷ்டிரன் தன் விழித்திறன் இல்லாமை அவன் அறிவுக்கண்ணையும் குருடாக்கிவைத்திருக்கிறது.   அவனுக்கு உலகியலை எடுத்ததுச் சொல்லி திருத்தி வழி காட்டுவதற்கென தந்தமைகொண்ட ஒரு ஆண் அவனுக்கு இதுவரை அமையவில்லை. தாய் அவனுக்கு அளவற்ற உணவூட்டி வளர்ப்பதைப்போல் அவனுக்கு நாடாள்வதற்கான அளவற்ற விழைவையும் ஊட்டி வளர்த்திருக்கிறாள்.   சூரிய வெளிச்சம் சரியான முறையில் விழுகையில் மட்டுமே மரம் நேர் கொண்டு வளர்கிறது. ஞாயிறொளி சரியாக கிடைக்காத மரங்கள் வளைந்து திருகி  கோணல்கொண்டு வளர்வதைப்பொல வளர்ந்திருக்கிறான்.  அவனின் நற்காலம்,  சிறந்த தோட்டக்காரனைப்போல் பீஷ்மர் வருகிறார்.  அவன் சிறுமைகளை துண்டித்து அவனை நேராக நிமிர்ந்து நிற்கும்  பேரரசமரமென வளர்க்கும் பொறுப்பை அவர் எடுத்துக்கொள்கிறார். அன்னையின் நிழலில் இருந்து ஆதவனின் ஒளிக்கு அவனை திரும்பவைக்கிறார்.  

பாலூறும் பட்டமரம்.  


               
திருதராஷ்டிரன் தன்னை முற்றிலுமாக பீஷ்மரிடம் ஒப்புகொடுத்து சரணடையும் காட்சி மிக உருக்கமானது.   பார்வையற்ற  அவன் நீயே கதி என்று பீஷ்மர் காலில் விழும்போது அவருள் தந்தைமை பேருருக்கொள்கிறது. ஊழ் அவருக்கு பிள்ளைகளை பெற்றெடுக்கும் வாய்ப்பைத் தராமல் அவரின்  தந்தைமையை பட்டுப்போக வைத்திருக்கிறது. ஆனால் கண்ணற்ற திருதராஷ்டிரனின் கதறல் அந்த பட்டமரத்தினுள் பாலூற வைக்கிறது.  பீஷ்மர் தந்தைமையின் சுவையை திருதராஷ்டிரனின் மூலமாக அனுபவிக்கிறார்.   விதுரன் அவருக்கு பிடித்தவன்தான் தன் சகோதரன் வியாசனனின் உருக்கொண்டவனாக அவருக்கு தெரிபவன். ஆனால  தந்தையெனக் கொண்டு அவனை வளர்ப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஆனால் திருதராஷ்டிரன் அவர் தோளளவுக்கு  வளர்ந்துவிட்டாலும் கையில் பிடித்து தூக்கினால் திமிறி அழும் குழந்தையைப்போல் இன்னும் உள்ளம் வளராமல் இருக்கிறான்.  பீஷ்மரே  திருதராஷ்டிரனின்  ஆளுமையை அருகிருந்து உருவாக்கி அவனை பேருள்ளம் கொண்டவனாக வளர்த்தெடுக்கிறார்.  ஒரு தந்தையென பீஷ்மர்  உணர்ந்து மகிழ திருதராஷ்டிரன் அவருக்கு உதவுகிறான் என்றுதான் சொல்ல வேண்டும். அந்த தந்தைப் பாசத்தினாலேயே அவர் திருதராஷ்டிரனை என்றும் கைவிடாதவராக இருக்கிறார் என்று தோன்றுகிறது.  


          என்னுரையை பொறுமையாக  செவிகொடுத்து கேட்ட அனைவருக்கும் நன்றி.