மலைகள் திரண்டெழும் காலத்திற்கு முன்பிருந்து தொடர்ந்துவரும் அழியா மரபொன்றின் பேணுநர் நான் என்று எனக்கு உணர்த்தினீர்கள் என்று வைதிகர் கிருஷ்ணனிடம் சொல்லும்
இடத்தில் மனம் நெகிழ்ந்துவிட்டேன். முக்கியமான வரி அது. வெண்முரசு தொடங்கியநாள்
முதல் இதை நான் அடிக்கடி நினைத்திருக்கிறேன். சூதர்களின் இசை தாசிகளின் தாலம்
இரண்டுக்கும் சமானமாகவே வேதம் பெரும்பாலும் சொல்லப்பட்டு வருகிறது. அந்தணரும்
ஒருவகை வரவேற்புச்சடங்கு செய்பவர்கள் என்றுதான் சொல்லப்படுகிறது. இப்போதுதான் அது
எவ்வளவுபெரிய குறியீட்டுச்சடங்கு என தெரிகிறது. எல்லாம் சரியாக இருக்கும் வரை
அதற்கு அர்த்தமேதும் இல்லை. தவறுநிகழ்ந்தால் ஒருவனை அரசன் அல்ல என்று ஆக்கவே
அதனால் முடியும். பெரும்பாலான குறியீட்டுச்சடங்குகளின் அர்த்தமே அதுதான். அது
எதிராகத்திரும்பும்போதுதான் அதன் அர்த்தம் தெரியும். சிரார்த்தம் முதலிய
சடங்குகளைச் சாதாரணமாகவே செய்வார்கள். ஆனால் செய்யாமலிருந்தால் எப்போதாவது
குற்றவுணர்ச்சி வந்தால் அது அவ்வளவு பயங்கரமாக வளர்ந்து நம் முன்னால் நின்றுகொண்டிருக்கும்
ஸ்ரீனிவாசன்