Saturday, February 10, 2018

குந்தி என்னும் பெண்:



குந்தி பலந்தரை உறவு எப்போதுமே இவ்வளவு சுமூகமாக இருந்ததில்லை. வெண்முகில் நரத்தில் சாத்யகி முன் குந்தி கிட்டத்தட்ட அவளை ஒரு அடிமைக்கு நிகராக அச்சுறுத்துவாள், குந்தி. பலந்தரையும் குந்தியை மதித்ததில்லை என்பது வேறு விஷயம். ஆனால் இன்று அவர்கள் இருவரும் வெறும் பெண்களாக உரையாடிக் கொள்கிறார்கள். “அறிவின்மைஆனால் நாம் அதிலிருந்து தப்பவியலாது” – எனக் குந்தி கூறுவது முக்கியமான கூற்று. தான் விரும்பும் ஆண் தன்னை முழுமையாக விரும்ப வேண்டும், தன் மீது எந்த உளக்குறையும் அவனுக்கு இருக்கலாகாது என்ற இந்த 'அறிவின்மை' தானே குந்தியை பாண்டுவின் முன் கர்ணனை முற்றிலுமாக இழக்கச் செய்தது.

பாண்டவர் பக்கம் அமைந்த பெண்களில் அனைவரும் ஏதேனும் ஒரு வஞ்சத்தை சுமந்தே இருக்கின்றனர். குருதிச்சாரலில் அவர்கள் தங்களையும், தன்னவர்களையும் அறிவதன் ஊடாக, தங்களை அன்னையர் என்றும், பெண் என்றும் உணர்வதன் ஊடாக அந்த வஞ்சங்களை உதறுகின்றனர். பாஞ்சாலி தன் வஞ்சத்தை விடுவதாகச் சொல்வது துவக்கம். பாஞ்சாலியின் மறு எல்லை, குந்தி. அவளது வஞ்சம் சற்றே வேறுபட்டது. அது இன்னார் என்று தெரியாத ஒருவரிடம் தோன்றுவது. ஆம், அவள் வஞ்சம் அவளை கர்ணனை இழக்க வைத்த தருணங்களை அமைத்த தெய்வங்களுடன் தான். கூடவே அவள் பாண்டுவின் மீது கொண்ட காதல். அக்காதல் மலர்வதற்கும் கர்ணன் தானே காரணம். ஆம், அவர்களின் முதல் இரவிற்காக அவள் அறையினுள் நுழைகையில் பாண்டு உடலெங்கும் பரவிய துடிப்புகளோடு படுத்திருக்கிறான். அந்த மெலிந்த வெள்ளுடலைக் கண்ட எவரும் முதலில் அடைவது ஒரு விலக்கத்தையே. குந்தியும் இயல்பாக அதையே அடைந்திருக்க வேண்டும். மாறாக அவளிடம் முதலில் வந்து சேர்வது அவனது உதடுகள். அது முலைப்பாலின் நுரை ஒட்டிய குழந்தையின் உதடுகளாக அவளுக்குத் தெரிகின்றன. அக்கணம் அவளுக்குள் பொங்கும் தாய்மை, அவளுக்குள் காதலாக உருமாறுகிறது. அவளை ஒரு வெறும் பெண்ணாக பாண்டுவின் முன் நிறுத்துகிறது. இந்த எண்ணம் அவளை இறுதியாக கர்ணனை துறக்க வைக்கிறது.

கர்ணனைத் துறந்த குந்தியின் நிமிர்வுக்கும், செயல்களுக்கும், சூழ்ச்சிகளுக்கும், பேச்சுகளுக்கும், தன் மைந்தருக்கான மண்ணை அடையத் துடிப்பதற்கும், அதிகார வேட்கைக்கும் இந்த வஞ்சமே அடிப்படை. அவள் இந்த வஞ்சத்தை விட்டொழிந்து பெண்ணாக மகிழ்ந்து இருந்த இடம் பிரயாகையில் வருகிறது. ‘பைமி’ என அவளால் அன்போடு அழைக்கப்பட்ட பானை மண்டையனிடம் தான் அவள் அவ்வாறு இருந்தாள். எனவே தான் இன்று பலந்தரையிடம் இப்போது பார்க்க விரும்புவது கடோத்கஜனைத் தான் என்கிறாள். இப்போது நாம் காண்பது வெறும் பெண், அன்னை. தன் மைந்தன் கர்ணனை எண்ணி ஏங்கும் ஒருத்தி. போர் என ஒன்று உருத் திரளும் வரை அவள் இந்த இக்கட்டை உளம் கொண்டிருக்க வில்லை. அவளது மைந்தர்கள் இறக்கப் போகிறார்கள் என்றே அவள் அஞ்சுகிறாள். ஏனென்றால் அவளுக்கு கர்ணனின் வீரம் தெரியும். ஒன்றா, ஐந்தா என்பதே அவளது இக்கட்டு. போர் என்று வந்தால் எத்தரப்பு வென்றாலும் இழப்பு ஒன்றே எஞ்சப் போவது குந்திக்கு மட்டுமே. இங்கிருக்கும் எவராலும் அதைத் தீர்க்க இயலாது என்பதாலேயே அவள் யாரையும் காண விரும்பவில்லை. இருப்பினும் இதற்கு ஏதேனும் ஒரு தீர்வு உண்டென்றால் அது இளைய யாதவர் ஒருவராலேயே. வெண்முரசின் அதி உச்சமான ஒரு கட்டம் வரப் போகிறது. கார்க்கோடகன் முன் நிணத்தோடு தெறித்த குருதிச் சாரல் மீண்டும் தெறிக்கவிருக்கிறது.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்