அன்புள்ள ஜெ,
குருதி சாரல் நாவலில் வரும் புருஷமேத பகுதி மற்றும் அவிரதனின் கதை நாவலுக்குள் ஒரு கச்சிதமான சிறுகதை. மிகுந்த மன உளைச்சலை அளித்த கதையும் கூட. குடுமியில் சொருகி நிற்கும் குன்றின்மணி அளவு பொன் அவனை பலிக்குரியவனாக ஆக்குகிறது.
சென்ற மாதங்களில் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களை சந்தித்து நீண்ட நேர்காணல் எடுத்து வந்தேன். அப்போது தற்செயலின் இயங்குமுறை பற்றி சில கதைகளை சொல்லிக்கொண்டிருந்தார். எத்தனையோ ஆண்டுகளாக சாலையோரத்தில் உள்ள வீட்டு முற்றத்தில் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் ஒரு பெரியவரை அவர் அறிவார். ஒருநாள் சாலையில் வேகமாக சென்ற நாற்சக்கர வண்டியின் சக்கரத்திலிருந்து தெறித்து வந்த சிறிய ஜல்லிக்கல் சில்லொன்று திண்ணையில் அமர்ந்திருந்தவரின் நெற்றிப் பொட்டில் விழுந்து மரணமடைகிறார். தற்செயல்கள் தன்னிசையானவையா? அலல்து அவற்றிற்கு அடியே இயங்கும் விதிகள் நமக்கு புலப்படாததால் நாம அமைதியுடன் வாழ்ந்து வருகிறோமோ? தெரியவில்லை.
சுனில் கிருஷ்ணன்