ஜெ
தாரை ஒரு கற்பனைக் கதாபாத்திரம். விகர்ணனின் அரசி பற்றி செய்தி
ஏதும் மகாபாரதத்தில் இல்லை. விகர்ணன் நீதியின்பால் நின்றவன். அவன் மனசாட்சியாக ஒரு
பெண்ணைப் படைத்திருக்கிறீர்கள். அவள் ஏன் மச்சர்குலத்தவளாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன்.
அவள் இன்று பேசும்போது பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது பாரதவர்ஷத்து ஷத்ரியர்கள் பலர் செய்திகேட்டு சீறி எழுந்து வாளுருவினார்கள் என்றும் . அஸ்தினபுரியின் படை சென்றபோது வந்து தலைவணங்கி கப்பம் கட்டினர் என்றும் அடுத்த இந்திரவிழவுக்கும் வேள்விக்கும் முடியும் கொடியுமாக வந்து அவையிலமர்ந்து முகமனுரைத்து அரசரை வாழ்த்தினர் என்றும் சொல்கிறாள். இன்று அவைநிறைத்துப் பெருகி அமைந்து அரசர் பெயர் சொல்லி கூச்சலிட்டு கொந்தளித்தனர் என்கிறாள்.
அந்தவரி முக்கியமானது. இந்த போரும் சரி இதையொட்டிய சிறுமைகளும் சரி ஒட்டுமொத்த ஷத்ரியர்களின்
குணத்திலுள்ள சரிவு. அதை அந்த குலத்திற்கு வெளியே உள்ள, அடிப்படையான வாழ்க்கையில் இருந்து
வருகிற , ஒருவர்தான் சுட்டிக்காட்டமுடியும்.அந்த மனசாட்சியின் குரல். திமிங்கிலங்களுக்கு
நடுவே சிறுபரலின் அச்சமில்லாத வெளிச்சம் அது
சரவணன்