Thursday, February 15, 2018

கதிரின் வீழ்ச்சிதுரோணர் கர்ணன் பிதாமகரை விடவும் ஒரு படி மேல் என்பதற்காகக் கூறும் பின்வரும் காரணம் முக்கியமானது – “இவ்வுலகில் இலக்கு என ஏதுமில்லாதவர்கள் அடையும் வில்லறிதலே தனுர்வேதம் எனப்படும். பிற அனைத்தும் தனுர்சாஸ்திரமே என்று சொன்னார்.” வெண்முரசின் குருக்களில் தனக்கென ஒரு இலக்கு இல்லாது, இம்மானுடத் திரளில் இருந்து பிரிந்து வாழும் குருக்கள் இருவரே, ஒருவர் பரசுராமர். பிறிதொருவர் சரத்வான். இருவருமே தனுர்வேதிகள். பரசுராமரின் சீடனான கர்ணன் இதுகாறும் தனக்கென ஒரு இலக்கு இல்லாதவனே. அவனது வில் அவனது நண்பனுக்காக மட்டுமே. அவன் எப்போதுமே கொடுத்துக் கொண்டே இருந்தவன். அவன் வஞ்சம் கொள்வதும் கூட அவனுக்காக அல்ல. அந்த முழு வளர்ச்சியடையாத இள நாகக் குழவியைக் கண்டே. ஆயினும் அவனுள் கரந்த ஒரு வஞ்சம் உண்டு. அது திரௌபதி மீது. பிரயாகையில் கொற்றவை கோவிலில் அவனைக் கண்ட அவள் கண்களில் இருந்தது முதிராக் காதல். அக்காதலை உணர்ந்த அக்கணம் தான் அவன் தன்னை முழு ஆணாக உணர்ந்திருப்பான். அக்காதல் விழிகளை நம்பியே அவன் கிந்தூரத்தை அணுக முடிவும் செய்திருப்பான். ஆனால் அந்த தன்னேற்பு அவையில் அவள் அவனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. நான்கு கிளிகளை அடித்து வீழ்த்திய பிறகும் கூட அவளில் கூடுவது பிடிக்காத தொடுககையை உதறும் குழந்தையின் அசைவே. அக்கணம் அவனுள் ஊறிப் பெருகும் சினத்தால் அவன் அதுகாறும் எதிர்கொண்ட அத்தனை சிறுமைகளும் அவன் அகத்தை அசைக்கின்றன. அவ்வசைவு கிந்தூரத்திலும் நிகழ்ந்து ஐந்தாவது கிளியான கேசினியின் பிம்பத்தை அசைத்து குறி பிழைக்க வைக்கிறது. அன்று அவனுள் நுழைந்தது அவள் மீதான வஞ்சம். பெருஞ்சினம். அது உண்மையில் திரௌபதி என்னும் பெண்ணின் மீதான வஞ்சம் அல்ல. அவனை அன்று அவளுக்கு ஏற்கத் தகாதவனாக்கி, அத்தனை பேரை விடவும் அனைத்து வகையிலும் சிறந்திருந்தும், பிறப்பென்ற ஒன்றால் அவனடைந்த, அடையும் அத்துணைச் சிறுமைகளுக்கும் ஊற்றுக்கண்ணான அன்னையின் மீதான வஞ்சம். இன்னும் சொல்லப்போனால் மகளென்று பிறந்து, கன்னி என்றாகி, அன்னையும் ஆகும் பெண் இனத்தின் மீதான வஞ்சம்.

உண்மையில் பன்னிருபடைக்களத்தில், ‘ஒருவனைப்பற்றி ஓரகத்திருப்பவளே கற்புள்ள பெண் என்கின்றன எங்கள் நெறிகள். எங்கு எதன்பொருட்டு ஒரு காலடி எடுத்து வெளியே வைத்தவளாயினும் அவள் பரத்தையே.’ என அவன் அவமானப்படுத்தியது அவன் அன்னை குந்தியையே. எனவே தான் சுஜாதன் ‘அவரால் அன்னை குந்தியின் முன் நிற்க இயலாது’, என்கிறான். இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் அஸ்தினபுரியில் அவன் இழைத்த சிறுமை பெண்களுக்கே எதிரானது. அத்தகைய சிறுமையை, தான் கொண்ட விரதத்திற்காக அம்பையை மறுத்த பீஷ்மரின் செயலில் இருந்த அநியாயத்தை உணர்ந்து அதற்கெதிராக வில்லெடுத்த பரசுராமரின் சீடன் செய்திருக்கலாகாது. எனவே தான் அவன் வீழ்ந்ததாகக் கருதுகிறான். அவனுள் இருந்த குண்டாசி வெளிவருகிறான். என்ன செய்ய, மகள் அமரும் தொடையில் குடைந்த தம்சனின் குடைச்சல் தந்த வலி பரசுராமருக்கில்லையே!!! அவனது வாழ்வில் அவன் தனக்காக, தன் வலிக்காக செய்த ஒரே ஒன்று இது தான். அவன் கொடுப்பதல்லாமல், கொண்ட ஒரே தருணம்.

அவனது இந்த வீழ்ச்சி, அவனுடைய இயல்பல்ல. அது அவனுள் நுழைந்த கலியின் இயல்பு. இப்போது துரியனை ஆட்டுவிக்கும் அதே தெய்வம். பன்னிருபடைக்களத்தில் அஸ்தினபுரி எங்கும் நச்சு பரவி, நகரே நோய் வாய்ப்பட்டிருந்த காலத்தில் அதை அகற்ற இமய மலையின் காக தீர்த்தத்தில் இருந்து நீர் கொண்டு வந்து, கலியின் ஆலையத்தின் முன் இருந்த சுனையில் அதை ஊற்றி அதில் துரியனை முழுக்காட்டி நோய் விடுவிப்பார் தீப்தர். அதில் துரியனை மும்முறை நீரில் மூழ்கி எழச் சொல்வார். அவன் நீரில் மூழ்கும் முன்பு வரை அவன் மட்டுமே நல்ல உடல் நலத்தோடு, பொலிவோடு இருப்பான். கர்ணன் உடல் நலன்குன்றி நடக்கக்கூட பலமின்றி இருப்பான். முதல் முறை மூழ்கி எழுகையிலே துரியன் நோய் கொள்ளத் துவங்குவான். அவன் நோய் கொள்ள நோய் கொள்ள நகரம் நோயில் இருந்து விடுபடும். எனவே துரியனை மூன்று முறை மூழ்கி எழுமாறு தீப்தர் கூறுவார். இரண்டாம் முறை மூழ்கி எழும் அவனை எழவிடாமால் நகரத்தில் இருந்த காகக் கூட்டம் அழுத்தும். அப்படியும் எழுந்து மூன்றாம் முறையாக மூழ்கும் அவனால் மீண்டும் எழமுடியாதவாறு அவன் உடலும் நோய் கொண்டு, நீருள் அழுத்தும். அவனே அதைக் கடந்து எழுந்து வந்தால் மட்டுமே நகரைப் பீடித்த கலி முற்றிலும் நீங்கும் என்பது விதி. ஆனால் அவனால் எழ இயலாது மூழ்கிக் கொண்டிருப்பான். அவனைக் காக்க, மீண்டும் அவனை கை கொடுத்து எழுப்ப, அனைவரும் தடுத்தும் கர்ணன் நீரில் பாய்வான். பாய்ந்த அக்கணத்தில் கர்ணன் உடல் முழு நலத்தையும் பெறும். அவன் கை கொடுத்து துரியனை தூக்கி வெளியே விடுவான். உண்மையில் கர்ணன் உடல் நலம் பெறவில்லை. அவன் உடலில் அதுகாறும் துரியன் உடலில் குடி கொண்டிருந்த தெய்வம் குடியேறுகிறது. அத்தெய்வமே அவனை சூதாடுவதை ஏற்கச் செய்கிறது. அத்தெய்வமே அவனுள் இந்த அந்த கரந்துறைந்த வஞ்சத்திற்கு கீழ்மையால், சிறுமையால் வடிகால் தேடச் செய்கிறது. அத்தெய்வத்தை, அதால் சரியானதாகத் தோற்றமளித்துக் கொண்டிருக்கும் உடலை உதிர்க்கவே கர்ணன் மதுவில் விழுகிறான். அத்தெய்வம் இப்போது துரியனிடம் மீண்டும் முழுமையாகக் குடியேறி விட்டதாலும், அவன் அறிவித்த வஞ்சத்தின் ஊற்றுக் கண் அவனை நெருங்கும் போது அவன் மீள்வான்.

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்