Thursday, February 8, 2018

64 என்னும் எண்



அன்புள்ள ஜெ,

 நலமா?

       மனத்தினால் அல்லாது எண்ணித் துணியும்  அர்ஜுனன் இந்திரகீல மலையை அறுபத்தி நான்கு காலடிகளில் கடந்தான் என்று  கிராதம் நாவலில் வருகிறது.  இங்கு அறுபத்தி நான்கு என்பது கற்பனையா அல்லது ஏதேனும் யோக தாந்தீரிக மரபு சார்ந்து தனித்தன்மை உள்ளதா? 

இ ஆர் சங்கரன்


அன்புள்ள சங்கரன்

64 என்பது தாந்த்ரீக முறைப்படி முக்கியமான எண். 64 ஜோதிட ரீதியில் முக்கியமானது., ஆனால் அதை அவர்கள் சொல்வது சரிவர பிடிகிடைப்பதில்லை. 64 யோகினிகள் குறித்த தொன்மம் தாந்த்ரிக மரபுகள் அனைத்திலும் உண்டு. ஞானத்தை நோக்கி அழைத்துச்செல்பவர்களும் 64 யோகினியர். ஞானத்துக்குத் தடையாக இருந்து மயக்குபவர்களும் 64 பேர். இது பௌத்த தாந்த்ரிக மரபுக்கும் உண்டு. 64 தாகினிகள் எனப்படுகின்றனர்

ஞானத்துக்கான படிகள் 64. உண்மையில் இந்த 64 யோகினியர்தான் 64 கலைகள் எனப்பட்டனர். ஞானத்துக்கான 64 படிகளை தெய்வங்களாக உருவகித்தனர். ஆனால் அது பின்னாளில் ஆயகலைகள் அறுபத்துநான்கு என ஆகியது. வேறுபட்டியல் உருவானது. 64 யோகினியர் பட்டியலை யோக நூல்களில் காணலாம். வாமமார்க்கங்களில் 64 பைரவர்களின் ஒரு பட்டியல் உண்டு. அதுவும் இதனுடன் சம்பந்தமுள்ளதே

சௌசாத் யோகினி கோயில் என சொல்லப்படுகின்றன. இவற்றுக்கு நாங்கள் பலமுறை சென்றுள்ளோம். சமீபத்திய மத்தியப்பிரதேசப்பயணத்தில்கூட எழுதியிருந்தேன்



ஜெ