பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் இருக்கும் உண்மையான ஒரே நோக்கம் உயிர் வாழ்தல் மட்டுமே. அதன் அணுக்கள் ஒவ்வொன்றிலும் எழுதப்பட்டிருப்பது எப்படியாவது வாழ் என்பதுதான். எந்த ஒரு உயிரினமும் எப்படியாவது தான் உயிர் வாழ்தலை நிகழ்த்திக்கொள்ள அரும்பாடு படுகிறது. அவை தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இறுதிவரை போராடுகின்றன. தன் மேல் முட்களை போர்த்திக்கொள்கிறது சில தாவரங்கள். தன்னுள் நச்சு நிரப்பி தற்காத்துக்கொள்கின்றன சில மெல்லுடலிகள். ஒடுவதிலும் தாவுவதிலும் தன் திறனை மேம்படுத்திக்கொள்கின்றன சாதுவான விலங்குகள். எப்படியாயினும் இறப்பைச் சந்திக்காத உயிரிங்களே இல்லை. எதன் பொருட்டும் தன் உயிரைப் போக்கிக்கொள்ள அவை முன்வருவதில்லை. ஆனாலும் எந்த ஒரு விலங்கும் தானாக இறப்பை எதிர்கொள்வதில்லை. இணை தேடுதல் மற்றும் பகை விலங்குகளுடனான சண்டைகளில் அவை உயிர்களை இழக்கலாம். ஆனால் அவற்றைப்பொறுத்தவரை அது எதிர்பாராமல் நிகழ்பவை மட்டுமே.
மனிதனும் அடிப்படையில் ஒரு விலங்கு. அவன் தன் வாழ்வின் இலக்குகள் என்று எதைச்சொல்லிக்கொண்டாலும் அவடைய உண்மையான இலக்கும் உயிர்வாழ்தல் மட்டுமே. அதே நேரத்தில் எல்லோரும் இறக்கத்தான் போகிறார்கள் என்பது அனைவருக்கும் நிச்சயமாகத் தெரிந்து இருக்கிறது. இறப்பின்றி வாழும் ஒருவரையும் நாம் உலக வரலாற்றில் கண்டதில்லை. ஆனால் எந்த வயதிலும் எந்த சூழலிலும் இறப்பைக் எதிர்கொள்ளும் துணிவு எவருக்கும் இருப்பதில்லை. வயது அதிகமாகி உடல் இயக்கமெல்லாம் மிகவும் குறைந்துபோய் தளர்ந்த வயோதிகராய் இருந்தாலும், உடல் நோய்கொண்டு புண்ணாகி அழுகி ஒவ்வொரு விணாடியும் வேதனையில் துடித்துக்கொண்டு இருக்கும் பிணியாளனாக இருந்தாலும் ஒருவர் இறப்பை எதிர்நோக்க அச்சப்படுகிறார். தன் உயிர் போவதை இயல்பானதென்று உள்ளத்தில் எவரும் உணர்வதில்லை. எந்த ஒரு மனிதனும் அவன் உயிர் வலுக்கட்டாயமாக பறிக்கப்படுவதாகவே நினைக்கிறான். உயிர் வாழ்தல் என்ற இச்சையே அத்தனை இச்சைகளுக்கும் அடிப்படையாக இருக்கிறது.
ஆனால் ஒரு சிலர் தம் உயிரைத் தியாகம் செய்துகொள்வதைப் பார்க்கிறோம். ஆனால் அது எப்போதும் ஒரு இயல்பான முடிவல்ல. ஒருவன் தன் மனதை சற்றேனும் பேதலிக்கவைத்துக்கொள்ளாமல் அம்முடிவை எடுக்க இயலாது. பெருந்துயரின் காரணமாக, உலகத்தின்கண்ணில் பெரும்பழி கொண்டதின் காரணமாக வாழ்வதற்கான இச்சை அகன்று சிலர் தன்னுயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். அவை அனைத்துக்கும் அடியில் சித்தத்தின் பேதலிப்பு இருக்கிறது. சிலர் உலக நன்மையின் பொருட்டு அல்லது தான் சார்ந்திருக்கும் சமூக நன்மையின் பொருட்டென உயிர் துறக்க முற்படுகிறார்கள். அது அவர்களின் உளத்தில் எவ்வளவு கொந்தளிப்பை ஏற்படுத்தும் அதை எப்படி அவர்கள் சமாளித்து முடிவெடுக்கிறார்கள் என்பது வியப்புக்குரியதே. தற்கொலைத் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் அதற்கு முன்னால் தன் உள்ளத்தில் வஞ்சத்தைப் பெருக்கி அல்லது வீரம் என்றும் தியாகம் என்றும் தன் சிந்தையை செதுக்கி இம்முடிவை எடுக்கிறார்கள். இறப்பைவிட இறப்பை எதிர்கொள்ளலே மிகவும் கடினமானது என்று தோன்றுகிறது. இறப்பை தண்டனையெனக் கொண்டவனுக்கு உண்மையில் அவன் இறப்பது தண்டனையில்லை. அவன் தான் இறக்கப்போகிறோம் என அறிந்து அவன் உள்ளம் கொள்ளும் கொந்தளிப்பே அவனுக்கு தண்டனையாக அமைகிறது.
போர்வீர்கள் கூட இறப்பை எதிர் நோக்கி செல்பவர்கள்தான். ஆனால் அவர்கள் உயிர் திரும்புவதற்கான வாய்ப்பு இல்லாமல் போவதில்லை. ஆகவே தாங்கள் எப்படியும் இப்போரில் உயிர் துறக்காமல் மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் தம் அச்சத்தை தயக்கத்தை வெல்கிறார்கள். ஒருவன் தான் இறப்பதற்கு கண நேரத்திற்கு முன்பாகக்கூட தான் எப்படியாவது பிழைத்துக்கொள்வோம் என ஒரு சிறு நம்பிக்கைத்துளி அவன் உள்ளத்தில் இருக்கும். புற்றுநோய் போன்ற கொடுநோய்களில் இறப்பு நிச்சயிக்கப்படிருப்பவர்கள் கூட இன்னும் சில நாளாவது வாழ்வோம் என்ற நம்பிக்கை எஞ்சியபடி தம் வாழ்வைத் தொடர்கின்றனர்.
வெண்முரசில் அவிரதன் யாகத்தின் வேள்வித் தீக்கு தன்னை அவியாக்கப்போவதை அறிகையில் அவன் உள்ளம் எப்படி எதிர்கொள்கிறது என்பதை வெண்முரசு காட்டுகிறது. அவன் உணர்வை நிகழ்காலத்தில் இருந்து அவனை வேள்விப்பலியென தேர்ந்தெடுத்த கணத்திற்கு என காலத்தின் எதிர் திசையில் சென்று நமக்கு காட்சிப்படுத்துகிறது. அவிரதன் எதிர்கொள்வது நிச்சயிக்கப்பட்ட இறப்பு. அவன் இறப்பு எந்த கணத்தில் எப்படி நிகழப்போகிறது என்பது அவனுக்கு முழுமையாகத் தெரிகிறது. இதை மீறி உயிர் வாழ்வதற்கான எவ்வித வாய்ப்பும் இல்லை என்பதை அவன் உறுதியாக உணர்ந்திருக்கிறான். அவன் ஏற்கெனவே இறப்பை வேறுவிதங்களில் எதிர்கொண்டிருக்கிறான். தன் உடன்பிறந்தவனின் இறப்பின்போது அவனுள் ஒரு துளி இறந்திருக்கிறது. தன் தந்தை தாய் உறவுகளை முற்றிலுமாகத் துறந்து அதர்வ வேதத்திற்கு தன்ன அர்ப்பணித்துக்கொண்டதும் ஒரு வகையில் இறப்புதான். ஆனால் அவையெல்லாம் உயிரிழந்துபோவதால் அடையும் இறப்பின் சிறு துளிகளே. தான் வேள்விதீயில் அவியாதலுக்கு தேர்வாகவில்லை என நினைக்கையில் அவன் கொள்ளும் மன அமைதி அவன்தான் தேர்வாகியிருக்கிறான் என்பதை அறிகையில் சட்டென்று நீங்கி , அவன் அடையும் அதிர்ச்சியை, தன் இதயத்தில் யாராவது கத்தியைப் பாய்ச்சும்போதுகூட ஒருவன் உணர்வானா என்பது ஐயமே.
பின் ஏன் அவன் வேள்வித் தீக்கு அவியாதலை ஒத்துக்கொள்கிறான்? ஏனென்றால் இப்படி இறப்பைத் தவிர்ப்பது இறப்பைவிட அதிக இழப்புகளை அவனுக்கு தருவதாக மாறிவிடும். மனிதனுக்கு இறப்பைவிட உயிர் வாழ்தலை துயர்மிகுந்ததாக ஆக்கும் காரணிகள் அதிகம் இருக்கின்றன. ஆகவே அவன் தன்னை அந்த இறப்புக்கு ஒப்புக்கொடுத்தலைத் தவிர வேறு வழியில்லாதவனாக இருக்கிறான். இந்த வகையில் பார்த்தால் விலங்குகள் சுதந்திரமானவை. தன் உயிரைக் காத்துக்கொள்ள அவை தப்பிவிடுதல் அவற்றுக்கு எப்போது நலம் பயப்பதாக இருக்கிறது.
இறப்பின் துயரத்தை சிந்தனையினால்தான் உணர்கிறோம். ஆகவே அவன் தன் சிந்தையை சிந்திக்கவிடாமல் வேதத்தால் நிரப்பிக்கொள்கிறான். வேதம் ஓதுதல், சடங்குகளைச் செய்தல், நியமங்களைக் காப்பாற்றிக்கொள்தல் ஆகியவற்றில் செலுத்தும் முழுமையான கவனத்தால் அவன் சிந்தையைவளர விடாமல் சிறையிட்டுக்கொள்கிறான். ஆனால் இவையனைத்தும் செயற்கையானது. அவன் தன்னியல்புக்கு மாறானது. அவன் சிந்தையில் பெருக இயலாத துயர், வாசகர்களின் உள்ளத்தில் பெருகுகிறது. வெண்முரசு என்ற பெருமலைத் தொடரின் ஒரு துயர உச்சமாக அவிரதன் வேள்வித்தீக்கு தான் அவியாகப் போவதை எதிர்கொள்ளும் இந்த நிகழ்வு அமைகிறது.
தண்டபாணி துரைவேல்