Friday, February 9, 2018

துரியோதனன் தர்க்கம் கொள்ளும் கீழ்மையின் உச்சம். (குருதிச்சாரல் - 50)


       
     

ஒரு விவாதத்தில் தன் தரப்பு தர்க்கம் நிறுவ இயலாமல் போகும்போது ஒருவருக்கு மிகுந்த சினம் உருவாவதைக் காண்கிறோம். அது வசைபாடலில்,  சிலசமயம் கைகலப்பில்  கொண்டு சென்று விடுவதுண்டு.   தன் தர்க்கம் தோற்பதை தனது தனிப்பட்ட தோல்வியெனக் கொள்கிறது மனிதனின் அகங்காரம்.   
      

ஆனால் துரியோதனன் இப்போது நடத்தும்  கீழ்மை நிறைந்த விவாதம் இவ்வாறு சினம்கொண்டு அமைந்ததல்ல. எப்படியும் தான் விழைந்ததை அடைந்தாக வேண்டும் அதற்காக  நான் எந்த கீழ்மையயும் செய்யத் தயங்கமாட்டேன் என்று அவன் கொண்டிருக்கும் நிலைப்பாட்டின் விளைவு அது.  அவன்  பாண்டவர் பிறப்பு பற்றி  இப்போது  பழி கூறுவது ஏன்?   சத்தியவதி, பீஷ்மர், திருதராஷ்டிரன்  ஆகியோர் இத்தகைய சொல்லை   மனதிலும் நினைக்காதவர்கள். திருதராஷ்டிரன்  மனைவியர் பத்துபேர், குந்தியின் மேல் ஒருவிதத்தில் கோபமும் சினமும் கொண்டிருந்தார்கள் எனினும் இதுவரை இப்படி   இழிவுபடுத்தும்   வார்த்தைகள் பேசாதவர்கள். துரியோதனனுக்கு அரசு வேண்டுமென்பதை தான் வாழ்நாளின் ஒரே இலக்காகக்கொண்டு அதற்கான தன் முதல் எதிரியென குந்தி இருந்தபோதும்,  சகுனி,  குந்தியை இவ்வாறு பழிவருமாறு சொன்னதில்லை.   பாண்டு தன் புதல்வர்கள் என பாண்டவர்களைச் சொன்ன பின்னால்  இதற்கான மறு பேச்சு எப்போதும் எழுந்ததில்லை. தருமனுக்கு இளவரசு பட்டம் கொடுத்தபோது விளைந்த விவாதத்தில் இது எழுப்பப்படவில்லை.  இப்படி நியோக முறையில் குழந்தைப் பேறடைவதை முற்றிலும் ஏற்றுக்கொண்ட பண்பாடு அப்போது இருந்துவருகிறது.   ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவை நடுவே இப்படி ஒரு கூற்றை அவன் சொல்வது குந்தியை மட்டுமல்ல, பாண்டுவை, பாண்டு சொன்ன சொல்லை ஏற்றுக்கொண்ட பீஷ்மர், அவன் தந்தை திருதராஷ்டிரர், அஸ்தினாபுர மக்கள்  என அனைவரையும் அவமதிப்புக்குள்ளாக்குவதாகும்.  


  மேலும் அவன் அவை நடுவில் கூசாது பொய் சொல்கிறான். 


“பதின்மூன்று ஆண்டுகாலம் அவர்களுக்கு நிலத்தையும் கருவூலத்தையும் திருப்பியளிக்கவேண்டும் என்றே எண்ணியிருந்தேன். ஆகவேதான் அந்நிலத்திற்கும் செல்வத்திற்கும் அவர்களின் குடிக்கும் மைந்தருக்கும் காவலன் என்று மட்டுமே என்னை நிறுத்தியிருந்தேன்."


இதைக்கேட்டு சகுனிகூட அதிர்ந்து போயிருப்பான். அவன்உடலில் ஓடும் தந்தையின் குருதிவழி வந்த பேருள்ளத்தின் காரணமாக அனைத்து பாண்டவர் மைந்தர்களையும் தன் பிள்ளைகள் என ஏற்றுக்கொண்டிருகிறான்  என்பதில் ஐயமில்ல. ஆனால் அவன் மண்மீது கொண்ட பெருவிழைவு காரணமாக ஒருபோதும் நாட்டை திருப்பியளிக்க நினைத்தவனில்லை. ஆகவே அத்தகைய எண்ணம் அவனுக்கிருந்தது என்று கூறுவது சிறிதுகூட உண்மையில்லாதது. 


அவன் முதல் உரையில் அவன் சொன்னஒவ்வொரு கூற்றுக்கும் ஆர்ப்பரித்த அரசர்கள் இன்று ஒன்றும் சொல்லாது மௌனம் காக்கின்றனர். அது அவர்களின் மனம் அவன் கூற்றில் உள்ள கீழ்மையைக் கண்டு உணர்ந்ததால் வந்தது. அதை ஆமோதிக்க அல்லது  விவாதிக்கக்கூட யாருக்கும் மனம் வரவில்லை. கிருஷ்ணன் அந்த கீழ்மையுடன் விவாதிக்க ஒப்புதலின்றி விட்டுவிடுகிறான்.   அவையில் ஒரே கேள்வி அவன் முன் வைக்கப்படுகிறது கர்ணனை மட்டும் ஷத்திர்யன் என்று எப்படி ஒப்புக்கொள்கிறான் என்று? அதற்கு அவன்


“அவர் ஷத்ரியர், சுயார்ஜித நெறியின்படி” என்றான். “தன் நிலத்தை வென்று வில்வல்லமையால் நிலைநிறுத்தியவர் அவர். பாரதவர்ஷத்தின் பாதி நாடுகளை என்பொருட்டு படைகொண்டு சென்று வென்றிருக்கிறார். இதோ, என் அவையிலிருக்கும் அரசர்களில் பெரும்பாலானவர்கள் அவர் நடத்திய படைக்கு முன் பணிந்து எனக்கு கப்பம் கட்டியவர்களே. பதினெட்டு நாடுகளில் வேள்விப்புரவி செலுத்திச் சென்றும் ஈட்டிய செல்வத்தை அள்ளி அள்ளி ஈந்தும் வேள்விக்காவலனாக அமர்ந்தும் தன்னை ஷத்ரியர் என நிறுவியவர். அதை வேதம் ஏற்று ஓதியது. அவரை மறுப்பவர்கள் எழலாம் , அவர் ஷத்ரியவீரம் என்றால் என்னவென்று அவர்களுக்கு காட்டுவார்.” 


அதன்படி பார்த்தால்  பாண்டவர்கள் படை நடத்தி வென்றவர்கள்,  அஸ்வமேத யாகம் செய்து சத்ராஜித் என அமர்ந்தவர்கள். கர்ணன் துரியோதனனின் தளபதி என்று சென்றவன். ஆனால் பாண்டவர்கள் தமக்கென படை நடத்தி வெற்றிபெற்றவர்கள். இதே கர்ணனையும் அஸ்வத்தாமனையும், துரியோதனனையும் கூட போரில் வென்றவர்கள். அப்படியென்றால் அதே அளவுகோலின்படி  அவர்கள் ஷத்திரியர்கள் என்று ஆகமாட்டார்களா? 
         

அவன் மேலும் மேலும் கீழ்மையில் இறங்குகிறான், பொய்களைக் கூறுகிறான், வயது முதிர்ந்த பெண்மணியை இழிவுபடுத்துகிறான், வாதத்தை  மாற்றி மாற்றிப் பேசுகிறான். இதைப்போன்றோரிடம் தர்க்கம் செய்து பயனில்லை என்று கிருஷ்ணன் கைவிடுகிறான்.  இறுதியாக எந்தத் தர்க்கத்தின்படி அல்லாமல் கருணையின் பேரில் பாண்டவர்களுக்கு ஐந்து ஊர்களைக் கொடு என்கிறான். அதையும் மறுக்கிறான். தன் தனி ஒருவனின் பேராசையின்பொருட்டு பேரழிவு ஏற்பட்டாலும் பரவாயில்லை என நினைக்கிறான். இப்போது கலித்தேவன் அவனை ஆட்கொண்டு விட்டதால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்று சொல்ல முடியாது.    மேலும் தன்னுள் சற்றேனும் அறவுணர்வு மேலெழுந்து  தன் மண்விழைவுக்கு கேடு நிகழ்ந்துவிடக்கூடாது என்பதற்கு தன்மனதை இறுக்கிக்கொள்வதற்காக அச்சடங்கு அவனுக்கு தேவைப்படுகிறது. முழுமையான தூய்மையைக் காண்பது கடினம்.  ஆனால் முழுமையான இருளை நாம் காணாலாம். துரியோதனனின் முழுமை அவன் அடைந்த இருளினால் பெற்றது.      அவன் ஏற்கெனவே பீமனுக்கு நஞ்சூட்டியதை ஆமோதித்தவன்.  வாரணாவதத்தில் பாண்டவர்களை அவர்கள் அன்னையோடு தீயில் எரிக்க முயன்றவன். திரௌபதி திருமணத்திற்கு பிறகு எவ்வித காரணமுமின்றி நாடற்று இருக்கும் அவர்களை அஸ்வத்தாமன், கர்ணன் போன்றோரின் துணைகொண்டு வென்று சிறைபிடிக்க நினைத்தவன்.  தன் வீரத்துக்கே இழுக்கிழைத்து   சூதில் தருமனிடம் நாட்டை எடுத்துக்கொண்டவன். திரௌபதியின்பால் வஞ்சம் கொண்டு அவளை இழிவுக்குள்ளாக நினைத்தவன். தன் மண்விழைவுக்காக தந்தை தாயை உதறியவன். தன் உள்ளத்திலிருந்த அறவிளக்கின் ஒளியை குறைத்துக்கொண்டே சென்று இருளின் முழுமையை அடைகிறான். ஆகவே இன்று அவன் குந்தியை இழிவு படுத்துவதும் இப்படி தர்க்கிப்பதும்  இப்போது தன்னை கலித்தெய்வத்திடம் தன்னை ஆட்படுத்திக்கொண்டதால்தான்  எனக் கூறுவது சரியாகாது என்று நினைக்கிறேன்.

தண்டபாணி துரைவேல்