உண்மையில் மகிழ்ச்சி என்பதுதான் என்ன? அதை அறிய நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது எதை உணர்கிறோம் என்பதை காண வேண்டும். நாம் எதையாவது ஒரு பொருளை அல்லது சிறப்பை பெறுவதில் மகிழ்ச்சி கிடைக்கிறது என்று சொல்ல முடியாது. சாலையில் ஒரு தங்க நாணயத்தை கண்டெடுத்தால் உடன் மகிழ்கிறோம். அடுத்து வருபவனுக்கு இரண்டு தங்க நாணயங்கள் கிடைத்தால் நம் மகிழ்வு காணாமல் போய்விடுகிறது. ஆக மகிழ்வு என்பது நம்மை வந்து சேரும் பொருள்களில் இல்லை. நாம் மகிழ்ச்சியாய் இருக்கும் தருணமெல்லாம நம் மனம் மற்ற குறைகளை மறந்து நிறைவாக இருப்பதைக் கணலாம். அதாவது நம் மனம் நிறைவடைகையில் மட்டும்தான் நாம் மகிழ்வாய் இருக்கிறோம். எவ்வளவுதான் இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தினால் மனம் நிறைவின்றி இருக்குமென்றால அது நம் மகிழ்வைக் கெடுத்துவிடுகிறது. மனதில் தோன்றும் ஒவ்வொரு விழைவும் நம் மன நிறைவை குலைக்கிறது. அதனால் நாம் விழைவதை தேடிப் பெற்றுக்கொள்ள முயல்கிறோம். நாம் விழைந்தது கிடைக்கையில் மீண்டும் நம் மனம் நிறைவுகொள்கிறது. அதை நாம் மகிழ்வென உணர்கிறோம்.
உண்மையில் ஒருவன் மன நிறைவுடனும் மகிழ்வாகவும் இருப்பதுதான் அவனின் இயல்பாக இருக்கவேண்டும். ஆனால் ஏதாவது நிறைவேறாத விழைவு இந்த இயல்பைக் கெடுத்து நம்முடைய மனதில் நிறைவிலாமையை ஏற்படுத்துகிறது. அதன் காரணமாக நம் மகிழ்வு கெடுகிறது. ஆனால் சிறிதும் பெரிதுமாக விழைவுகள் நம் மனதில் பெருகிக்கொண்டே இருக்கின்றன. நாம் விழைவதை அடைய இயலாமல் போவதில், அல்லது கிடைப்பது சற்று மாற்று குறைவாக இருப்பதில் நமக்கு நிறைவின்மையை உண்டாக்குகிறது. ஆகவே மன மகிழ்வுக்கு ஒன்று நம் மனதில் பெருகும் விழைவுகளைக் கட்டுபடுத்திக்கொள்ளவேண்டும் அல்லது நமக்கு கிடைப்பதைக்கொண்டு நிறைவடைய வேண்டும். எது தனக்கு இயல்பாக கிடக்கிறதோ அதில் நிறைவடைபவர் மகிழ்ச்சியின் சூட்சுமத்தை அறிந்தவராக இருக்கிறார். இதைப்போன்று நமக்கு ஏற்படும் இழப்புகளும் நம் மனதிற்கு நிறைவின்மையைத் தருகின்றன. நிறைவின்மை என்பது நம் வாழ்வில் மகிழ்வை குறைத்தாலும் நாம் விழைந்தவைகளை, இழந்தவைகளை அடைய நம்மை மேலும் ஊக்கத்துடன் செயல் புரிய வைக்கின்றன. ஆகவே இத்தகைய நிறைவின்மைகள் ஒரு ஆக்கச்சக்தியாக அமைவதும் உண்டு.
மனதின் நிறைவின்மை, சிலசமயம் மற்றவர்கள் கொண்டிருக்கும் நிறைவைக் காண்கையினால் எற்படுவதும் உண்டு. அதை நாம் அழுக்காறு என்று கூறுகிறோம். அழுக்காறு என்பது அகங்காரம், சினம், துயரம் போன்றவற்றைப்போல் அல்லாமல் எவ்வித பொருள்வாய்ந்த காரணமுமின்றி வருவது. அழுக்காறு கொண்டவர்கள் வாழ்வில் மகிழ்வற்று இருக்கிறார்கள். அது அவர்கள் மனதில் கசப்பை சேர்க்கிறது. அந்தக் கசப்பு அவர்கள் சொற்களில் செயல்களில் பாவனைகளில் கசிந்துகொண்டே இருக்கிறது. பலந்தரை, பானுமதி மற்றும் அசலைக்கு உடன் பிறந்தவள். ஆனால் சிறு வயதிலில் இருந்தே அவள் மனதில் நிறைவிலாமையை எப்போதும் உணர்ந்துகொண்டே இருப்பவளாக இருக்கிறாள். பானுமதியைப்போல் அசலையை அழகி என்று சொல்ல முடியாது அசலையைப்போல் பானுமதி காவியங்களில் தேர்ந்தவள் இல்லை என்று தெரிகிறது. ஆயினும் பானுமதி தன் உள்ளத்தை காதலால் நிறைத்துக்கொண்டு இருக்கிறாள் அசலை தன் உள்ளத்தை காவிய இன்பத்தில் மூழ்கடித்துக்கொள்கிறாள். ஆனால் பலந்தரை அவர்கள் அடைந்திருக்கும் சிறப்புக்களைக் கண்டு தன் மன நிறைவை இழக்கிறாள். மணமுடித்து இந்திரப்பிரஸ்தம் வந்து பெரிய அரண்மனையில் வாழ்ந்தபோதும் பீமன் போன்ற பெரிய வீரனை மணந்திருந்தபோதிலும் அவள் மனம் நிறைவடையாமல் இருக்கிறது. அதன் காரணமான கசப்பு அவளிடம் பெருகி இருப்பதை வெண்முரசு காட்டுகிறது. அவளைச் சுற்றி இருப்பவர்களிடம் அவளால் இயல்பாக பழக முடிவதில்லை. அவள் சொற்களும் பாவனையும் மற்றவர்களை சீண்டுபவையாக ஆகின்றன. அனைவரிடத்திலும் அவளால் குற்றங்களையே காணமுடிகிறது. அவள் மனம் நிறைந்திருக்காத குறைகுடமென தளும்புகிறது நிலை நிற்காமல் தடுமாறுகிறது. அவள் மனதிலிருந்து சிதறும் சொற்கள் அமிலத்துளிகளென அனைவருக்கும் எரிச்சல் தருபவையாக இருக்கின்றன. இளைய யாதவரின் இன்சொற்கள் கூட அவளை அமைதிப்படுத்த முடியவில்லை.
உண்மையில் அவள் பேசுவது பீமனின் சொற்களைத்தான். வெண்முரசு காட்டும் காட்சியில் பீமனின் சொற்கள் நமக்கு கேட்கவில்லை. ஆனால் அவன் என்ன பேசியிருப்பானோ அதையே பலந்தரை மேலும் கசப்புசேர்த்து உரைக்கிறாள். அவள் சொற்கள் அவமதிப்பதாக அமைகின்றன என்ற போதிலும் அவை அர்த்தமற்ற கேள்விகள் இல்லை. அதனால் கிருஷ்ணர் அவளுக்கு பொறுமையாக விளக்கமளிக்கிறார். அப்படியும் அவள் கசப்பு சினமாக பெருகுகிறது அவளின் சினம் அவளிடமிருந்து நஞ்சுதோய்ந்த வார்த்தைகளாக சிதறுகிறது. அவளைக் கட்டுப்படுத்த கிருஷ்ணர் அவளை பீமனுடனான மணவுறவில் இருந்து விலகச்சொல்கிறார். ஆனால் பீமன் தானாகவும் மணவுறவிலிருந்து விலக மாட்டேன் அவளையும் விலகிச்செல்ல அனுமதிக்கமாட்டேன் என்று சூளுரைக்கிறான். இதுவரை தான் காணாதுவிட்ட பீமனின் காதல் உள்ளத்தை அப்போது அவள் காண்கிறாள்.அந்தக் காதலை உணர்ந்த பின்னால் அவள் உள்ளம் முழுமையாக நிறைகிறது. அடுத்த கணம் அவள் நெஞ்சம் தம் கசப்பையெல்லாம் இழந்துவிடுகிறது. அவள் கண்களின் மேல் போடப்பட்டிருந்த திரைகள் விலகி அவளால் சூழலை நன்கு காணமுடிகிறது. போரில் நிகழப்போவதை அவளால் ஐயமின்றி கணிக்க முடிகிறது கிருஷ்ணரின் போர்த் தடுப்பு செயல்களின் நோக்கத்திற்கு பொருள் காணமுடிகிறது. அவள் மனம் இப்படி நிறைந்துவிடுகையில் தன்னுள் பெருகியிருந்த வெறுப்பெலாம் அகன்று நமக்கு இனியவளாக பலந்தரை மாறிவிடுகிறாள்.
தண்டபாணி துரைவேல்