Tuesday, February 13, 2018

வெண்முரசுகள்அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

கடந்த செப்டெம்பர் மாதம் கன்னியாகுமரிக்கு ஒரு சிறு பயணம் மேற்கொண்டேன்,பயணத்தின் பகுதிகளாக திற்பரப்பு, தக்கலை,சுசீந்தரம் என அமைத்துக் கொண்டேன், பயண திட்டத்தின் நோக்கம் நாம் மிகவும்  விரும்பும் நேசிக்கும் ஒரு எழுத்து உருவாகி வரும் சூழலை நேருக்கு நேராக காண்பதற்கே.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு பின்தொடரும் நிழலின் குரல் வசித்துக் கொண்டிருக்கும் போது திற்பரப்பு கிட்டத்தட்ட ஒரு அந்நியமான இடம் ஆனால் இந்த பயணத்தில் இந்த இடங்கள் வருமாறு கவனமாக அமைத்துக் கொண்டேன்,நாகர்கோவில் வழியாக பயணம் செய்யும் போது பார்வதிபுரம் இவ்வளவு பெரிய பகுதி என்று அறிந்திருக்கவில்லை, அப்படியே கீழே இறங்கி உங்களை சந்தித்திருக்கலாம் விலாசம் கையில் இருந்தது,இது வரை பேச நேர்ந்த எல்லா வாய்ப்புகளையும் நானே தவிர்த்திருக்கிறேன், பேச முயன்ற போது  சொற்கள் சரிவர அமையாது தோற்று தவிப்போடு திரும்பி இருக்கிறேன்.

அந்த பயணத்தின் ஊடே உளம் சோர ஒன்றை நினைத்துக் கொண்டேன்,வெண்முரசு ஆரம்பித்த உடன் நீங்கள் சொன்னது, வெறும் ஆறு வாசகர்கள் என்னை வாசிப்பார்கள் என உறுதி செய்து கொண்டே எழுதுகிறேன் என, நான் நினைத்துக் கொண்டேன் ஏழாவதாக நானும் இருக்கிறேன் என,இணைய வாசிப்பு ஒரு கட்டத்தில் சாத்தியப்படவில்லை,ஆனால் வெண்முகில் நகரம் வரை புத்தக வடிவில் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன், அதற்க்கு பின்னர் அதையும் செய்ய முடியாது வெண்முரசு வாசிப்பு அறுந்து கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி விழுந்து விட்டிருந்தது,எவ்வளவோ மகிழ்ச்சியோடு துவங்கிய பயணம் ஆனால் இந்த புள்ளியில் தான் இறுதியில் நின்றது.

கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக மிகவும் கடுமையான பணிசூழல், வாசிப்பதற்கான மனநிலையை முழுமையாக செயலிழக்க வைத்து விட்டது,சென்னையில் நீங்கள் 2015 ஜூன் மாதம் கலந்து கொண்ட கூட்டத்திற்கு நானும் வந்திருந்தேன், அந்த கலந்து கொண்டதே  உங்களின் சொற்களில் ஏதேனும் ஒன்றில் பற்றிக் கொண்டு மீண்டும் வாசிப்புக்கு திரும்பி விட முடியுமா?என்பதற்க்ககாவே.       
   
 கிட்டத்தட்ட வேலை இழந்து விட்டிருந்த கால கட்டம்,அங்கு வந்திருந்த இளம் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது வெண்முரசை தவிர வேறெதுவும் செய்வதில்லை , வாழ்க்கையில் அதை தவிர வேறு எதுவும் சரிவர நடைபெறுவதில்லை என ஒரு இளம்நண்பர் சொன்ன போது  அன்றைய மனநிலையில் அடைந்தது ஒரு பேரச்சத்தை தான்.
 
கிட்டத்தட்ட ஒரு வருடம் கடந்த நிலையில் மிக தீவிரமான வாசிப்பை நிகழ்த்த முடியாத ஒரு நிலையில்  விஷ்ணுபுரமும் குமரகுருபரன் அறக்கட்டளையும் இனைந்து வழங்கிய நினைவு பரிசு விழாவில் உங்களின் உரையை கேட்ட பின்னர் மனுஷ்யபுத்திரனின் கவிதைகளை வாசிக்க துவங்கினேன். மீண்டும் மீண்டும் என அவரின் கவிதை வரிகளில் கிறங்கி பின்னர் யுவன், ஆத்மார்த்தி தேவதேவன் என  வரிசை நீண்டது. கடந்த பத்துவருடங்களாக புனை கதைகள் நாவல் வரிசைகள் என வாசித்திருந்தாலும் கவிதையை வாசிக்கும் மனநிலை கூடியதில்லை.

இனி உரைநடையை வாசிக்க முடியாது கவிதை வாசிப்பு மட்டுமே என்னும் நிலைக்கு வந்து விட்டேனோ என்று ஒரு எண்ணத்தில் ஊர்ந்து கொண்டிருந்த போது, நான் எடுத்த ஒரு நாள் விடுப்பு தசரவை ஒட்டி அலுவலகத்தில் கிடைத்த நான்கு நாட்கள் விடுமுறை என ஒரு பண்டிகை கால வாசிப்பாக தான் மீண்டும் இந்த்ரநீலத்தை வாசித்தேன்.

கவிதை வாசிப்பில் மூழ்கிக் கிடந்தது இந்திரநீல  வாசிப்புக்கு எத்தனை பேருதவியாக இருந்தது என்பதை எப்படி சொல்ல?இத்தனை கவிதை வாசிப்பும் மனம் செய்த முன்னேற்பாடோ என என்னை நானே வியந்து கொண்டேன்.

ஒரு போர்க்கள காட்சியில் வீரன் ஒருவன் நீருள் மூழ்கி இறக்கிறான்,உங்களின் விவரிப்பு இப்படி எழுகிறது பளிங்கு உதடுகள் வாய் திறந்து மூடிக் கொண்டது என, செங்கல்பட்டு ரயில் நிலையத்தின் அக்டோபர் மாத இரவின் நடைபாதை மஞ்சள் விளக்கு ஒளியில்  ரயிலுக்காக காத்திருந்த வேளையில் வாசித்து நெஞ்சில் பதித்துக் கொண்ட வரிகள் இவை.

வரதா  நதியின் தண்மை அலை நெளிவு ,விரற்கடைகளின் கீழே நீரின் வெம்மையும் குளுமையும் எங்கனம் மாறுபடும்  குகன் ஒருவர் சொல்வதும், இல்லங்களுக்கு மேலே  செடி வளர்த்து மலர்கள் நிறைந்த  ஒரு இல்லம் தொலைவிலிருந்து ஒரு பூக்குவியலாக அளிக்கும் விழிமாயத்தையும்  ,வாள்கள் பொருதி ஒலிக்கும் ஓசை முத்தத்தின் மற்றும் கூடலின் ஓசையாக மாறுவதும் உங்களின் சொற்களில் மட்டும்.

பாலை  நிலத்தின் வரிகளை பேற்றுக் காலம் முடிந்த அன்னையின் வயிற்று சுருக்கத்தோடு ஒப்பிடுவதும் அவ்வகையே.
 
தொடர்ந்து காண்டீபம் வாசிக்கும் போது இந்திய ஞானத்தின் ஒரு முக்கிய வரிசையை அணுகி அறிய முடிந்தது.
இதை நீங்கள் நம்ப மறுக்கக் கூடும் ,என்னுடைய பள்ளி நாட்களில் அருகே ஒரு சமண குடும்பம் உண்டு,அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் போது ஒரு இசை துணுக்கை கேட்டு மனம் உருகுவதுண்டு சொற்கள் நினைவில் இல்லை ஆனால் அந்த உருக்கும்  இசை மாத்திரம் என்னுள் இருந்தது,நான் இப்போது இருபது வருடங்களுக்கு பின்னர் அந்த இசையை முயன்று முயன்று நினைவுக்கு கொண்டு வர முயன்று தோற்று விட்டிருந்தேன்.
காண்டீபம் வாசித்து முடித்த இரவில் எந்த விசையாலோ உந்தப்பட்டு யூடூபில் நேமிநாதர் என தட்டச்சிட்ட பின்னர் பக்தமார் ஸ்தோத்திர என அனுராதா பாடவல் குரலில் மீண்டும் கிடைக்கப் பெற்றேன்.

உங்களின் சொற்களின் சொல்வதானால் சிற்றிளமை காலத்தில் இழந்த இசையை மீண்டும் கிடைக்க பெற்றவன் பேறு  பெற்றவன் தானே?

உங்களின் நண்பர் சமஸ் சாப்பாட்டு புராணம் என ஒரு சிறுபுத்தகம் வெளியிட்டிருக்கிறார் முழுக்க முழுக்க தஞ்சை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கிடைக்கும் சுவையான உணவு வகைகளின் தொகுப்பு.
அதில் குறிப்பிட்ட இடங்களுக்கு பயணம் செய்து உணவை ருசித்துக் கொண்டே நிகழ்த்திய வாசிப்பு தான் வெய்யோன்,வெல்லும் திறனும் ஈகையும் கொடையும் அமைந்தும் ஒரு பெருங்காதலனின் உளம் அமைத்தவன் ஒவ்வொன்றிலும் தோற்கும் ஊழின் கதையை வாசிக்க பெற்றேன்.

சூரியனை மாபெரும் ஓவியனாக நீங்கள் குறிப்பிடும் போதும் ஒவ்வொரு நில காட்சியும் சூடும் அழகின்  ஒளியை வழங்கும் முதலோவியனாக சூரியனை நீங்கள் வர்ணிக்கும் போதும்,ப்ரஹ்மம் படைப்பது ஆனால் ஒளி சூடுவது வெய்யோனால் மாத்திரமே என வாசித்த போது  மீண்டும் செப்டம்பர் பயணத்தில் கன்னியாகுமரியில்  கண்ட காலையை  மீண்டும் மனம் மீட்டிக் கொண்டிருந்தது.

பன்னிருபடைக்களம் அஸ்தினாபுரத்தின் சுவர்களில் கூட கலி ஊடுருவி நிற்கும் காட்சிகள் தான் மனதில்  எழுகிறது,அந்த காட்சியமைப்பில் ஒரு நகரமே நோயின் மரணத்தின் பிடிக்குள் மெல்ல மெல்ல, அரவுக்குள் சிக்கிய இரை போல மெல்ல மெல்ல சிக்கிக் கொள்வதை வாசித்து  நெஞ்சு நடுங்கிய தருணத்தை நினைவு கூற முடிகிறது.

துரியோதனின் ஆளுமை மாற்றங்களை நீங்கள் சொல்லும்  போதும் ,அஸ்தினாபுரம் நோய்மையில் சிக்கியிருக்கும் போதும்,நோய்மை அவனை மாத்திரம் அணுகாததை வசிக்கும் போதும்,கலியின் கோவிலுக்குள்  கர்ணனும் துரியனும் நீரில் மூழ்கி எழுந்து கழுவாய் முடிக்கும் காட்சிகள் வாசிப்பில்  ஒரு சேர வியப்பையும் நடுக்கத்தையும் உருவாக்கியவை.

முன்னுரையிலேயே குறிப்பிட்டிருந்தீர்கள் கௌரவர்களின் ஆளுமை கீழ்மை கொண்டதல்ல,ஆயினும் ஆண்  பெண் உறவில் திகழும் முள்ளை சொல்வதற்கான தருணத்தை பயன்படுத்தி கொள்வதாக.பன்னிருபடைக்களத்தின் இறுதி பத்து பக்கங்களில் ஒரு வெறியாட்டெழுந்த தெய்வம் தன்னுள் கூடுவதை வாசகன் நோக்கி இருக்கக் கூடும்.(பங்கில் பாதி பாரதிக்கும் உரியது)

மனித மனம்  என்றும்  எதிர்கொள்ளும் கேள்விகளில் ஒன்று நீதி என்பது என்ன?பாலிலிருந்து வெண்ணையை பிரிப்பது போல படையாழி ஏந்தி வந்த பேரறிஞன் பேசும் சொற்கள் பெரும் விரிவை அளிக்கிறது.
உங்களின் கிணறுகளுக்கு என்ன பயன்? நீர் ஊறி பெருகுகையில்?
மரம் அதன் உயிப்பை தளிர்களில் தான் உணர முடியும் என உணர்த்துகிறான்.
  
இங்கு உறவாகவும் வெறும் உரிமையாகவும் இருந்த மையம் அறுபட்டு ,பெரும் நீதியை  அனைவருக்குமான இடம் உறுதி செய்யப்படும்  வேறு ஒரு மையத்தை சமைக்கிறான் லீலையென.

விண்ணை நோக்கி மட்டுமே வாழ்ந்த பேரறிஞன் மண்ணில் அரைபடும் தருணமும் வந்தணைகிறது.அவனது இணை மனம் விண்ணுக்கு சென்று பெரும் பயணத்தின்  வழியே 
  திசைகளையும்  வென்று  தன்னையும்  அறிந்து திரும்புகிறது.
பேரறிஞன் தன்னை உதிர்த்து தளிர் சூடுவதை பின்னர் காண கூடும்.
 
இந்த மனநிலையில் ஒரு இனிய இளைப்பாறலாக இருந்தது  மாமலர் வாசிப்பு,ஊர்வசி அசோகசுந்தரி,தேவயானி சர்மிஷ்டை என வாசித்து  கொண்டிருந்த போது என்றோ எழுந்த ஒரு கேள்விக்கு இந்த  வாசிப்பில் விடை அறிய முடிந்தது, விஷ்ணுபுரமும் பின்தொடரும் நிழலின் குரலும் வாசிக்கும் போது உறுத்தாத ஒரு மொழி நடை அனல்காற்று வாசிக்கும் போது ,இடறலாக எது உணர செய்தது?

உயர்தத்துவமும் அரசியலையும் மணஉச்சங்களாக அங்கீகரித்த மனம் ஏன் காதலை ஒரு படி கீழாக எண்ண  தலைப்பட்டது?அந்த உச்சங்களை காதலிலும் ஒருவன் அடைய  கூடும்,அவன் திறனற்ற சொற்களை அமைத்தாலும் அந்த மனஉச்சம் சாத்தியமே!ஒரு தோற்பும் தேவைப்பட்டிருக்கிறது அறிந்து கொள்ள , மனம் சில திறப்புகளை அடைவதற்கு என சில தருணங்களுக்காக காத்திருக்கிறது போலும்.

இப்படியும் சொல்லலாம் இது ஜாக்ரத் வெறும் நனவிலி எழுத்து முறை அல்ல ஆழத்தின் பெருக்கை அப்படியே மொழியில்  அள்ளி எடுத்திருக்கிறீர்கள் ஒவ்வொரு  முறையும் பண்ணி பண்ணி சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் புரிந்து கொள்ள வாசகனாக எனக்கும் ஒரு பயணம் தேவைப்பட்டிருக்கிறது மாமலர் வாசிப்பு வரை.

திருவள்ளுறூலிருந்து சென்னை வரைக்குமான ரயிலின் ஒரு ஜனவரி மாத இரவில் வேங்கைகளின் முகம் ,மயிர் பிசிர், தாழலாட்டமிடும் நா அவற்றின் உடல் மணம் , பாதம் அமைந்த வரிசை ,சிறு நகம் என சொட்டு சொட்டாக கவிதை.

வெண்முரசை நான் வாசிக்க துவங்கும் போது என்னுடைய மனம் அதை எந்த வரிசையில் அமைக்க எண்ணியது என யோசித்து பார்க்கிறேன் ?உயர்தத்துவம்,தர்மவிசாரம்,உளவியலாராய்ச்சியென.

இப்போது புரிகிறது வெண்முரசு ஒரு பெரும் கவிதை தொகை,உயர்தத்துவமோ,உளவியலாராய்ச்சியோ,தர்மவிசாரமோ அத்தனையுமே இந்த கவிதை வாசிப்புக்கான சிறு ஒழுங்குகள் மட்டுமே.

நான் ஒரு கவிதை வாசகன்  மட்டுமே உங்களின் நிலக்காட்சி வர்ணிப்புகள் இதை எழுதுகையில் என்னுள் விரிகின்றன தன போக்கில் இரவு நேரங்களில் அசையும் ஒரு தென்னை மரம் அளித்த ஆறுதலை பல நேரங்களில் பெரும் தத்துவ விசாரங்கள் எனக்கு அளித்ததில்லை.

அன்புடன் சந்தோஷ்