துரியோதனன் முதலில் வைக்கும் தர்க்கம்.
ஒரு விவாதத்தின் வெற்றியை அதில் வைக்கப்ப்டும் தர்க்கங்கள் அல்லது அது விவாதிக்கும் உண்மையின் தன்மை மட்டும் தீர்மாணிப்பதில்லை, விவாதம் நடக்கும் சூழல், விவாதத்தை செவிகொண்டு தன் முடிவு சொல்லும் அவையில் இருக்கும் அங்கத்தினர்கள் போன்றவற்றுக்கும் முக்கியப் பங்கிருக்கிறது. உண்மையை பின்னுக்குதள்ளும் ஆற்றலும் அதற்கு இருக்கிறது. ஆகவே அவையில் விவாதிப்பவர்கள் இவற்றையும் கவனத்தில் கொள்வது மிகவும் அவசியமாகிறது.
இபோது நடக்கும் விவாதத்தில் துரியோதனன் கிருஷ்ணன் என்ற இரு நபர்கள் மட்டுமே இருக்கிறார்கள்.
விவாதம் நடக்கும் அவையில் இருப்பவர்கள் பாரத நாட்டின் ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து ஷத்திரிய மன்னர்கள் மற்றும் அஸ்தினாபுர மக்கள் பிரதிநிதிகள், அந்தனர்கள் . இவர்கள் தான் விவாதத்தின் முடிவை தீர்மாணிக்க இருப்பவர்கள். இதில் அரசர்கள் முன் முடிவோடு முதலிலேயே துரியோதனனின் தரப்புக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை இந்த விவாதம் தேவையற்ற ஒன்றென இருப்பவர்கள். ஆனால் துரியோதனனை எதிர் நின்று விவாதிக்க இருப்பவன் கிருஷ்ணன். அவன் சொலல்வல்லன். அவை கூடியிருக்கும் அரசர்களுக்கு ஐயங்களை எழுப்பிவிடுவான். ஆகவே அவன் தன் தர்க்கத்தை ஆரம்பிப்பதற்கு முன்னரே இவ்விவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்துவிடவேண்டும் என துரியோதனன் நினைக்கிறான். ஷத்திரியர்களின் மனதில் குலப் பெருமையை தூண்டிவிடுகிறான். மிக மதிநுணுக்கம் வாய்ந்த உரை அது. துரியோதனன் தன் வாதத்தை யாரும் மறுக்கவொன்னாவண்னம் திறம்பட உரைக்கிறான். வந்திருக்கும் ஷத்திரியர்களில் யாருக்காவது துளியளவு ஐயம் இருந்தாலும் அதைக் கலைவதாக அவன் பேச்சு இருக்கிறது. ஒருவேளை இந்த உரைக்கான வடிவத்தை கணிகர் உருவாக்கித்த் தந்திருக்கலாம் எனத் தோன்றினாலும், இது துரியோதனனின் ஆன்மாவிற்கு உகந்ததைப் பேசுகிறான் என்பதாலேயே அவனுரையாக மட்டுமே இருக்க வாய்ப்பிருக்கிறது. முதலில் அறை முறைமைகளை மீறி அவன் எழுந்து பேசுகிறான். இது அவையினரை முற்றிலுமாக அவன் பக்கம் கவனம் போகும்படி செய்கிறது.
அவனுடைய தர்க்கத்தின் வழி அவன் வைக்கும் கூற்றுகள்:
1 அரசாளும் உரிமை ஷத்திரியர்களுக்கு மட்டுமே உரியது.
2 நான்கு வருணத்தினரும் அவரவர்களுக்கான கடமைகளை மீறும் உரிமையில்லை
3. ஷத்திரியர்களே அனைவருக்கும் காவலரும் தந்தையர்களும் ஆவார்கள்
4. அரசு பிரிக்கப்பட முடியாதது
5. இந்நாடு அவன் தந்தையால் அவனுக்கு முழுதாக அளிக்கப்பட்டது.
6. மண்விழைவு ஷத்திரியர்கள் கைவிடக்கூடாது.
7. பாண்டவர்களுக்கு நாடு கொடுப்பது என்பது அவர்களுடன் இருக்கும் ஷத்திரியர் அல்லாதவர்களுக்கு நாடாளும் உரிமை இருப்பதாக நாம் ஏற்றுக்கொண்டதாக ஆகும்.
8. உலகம் முழுதும் வென்று தன் குடைக்கு கீழே கொண்டு வரவேண்டியது ஒரு ஷத்திரியரின் கடமை.
9. நிஷாதரும் அசுரரும் குடியிலிகள், அவர்கள் வெல்லவேண்டியது தேவையாகிறது.
10. இப்படி ஷத்திரியர் தர்மத்தைக் காப்பாற்றுதல் வேதத்தைக் காப்பதாகும்.
துரியோதனன் தன் அனைத்து வாதத்திற்கும் அடிப்படையாகக்கொள்வது வேதங்கள்தான். வேதங்களின் வார்த்தைகளுக்கு மறுவார்த்தை இல்லை எனவே வேதங்களின் சொல்படி நடக்கும் தன் தரப்பே சரியானது என்று என்று அவன் அவையில் நிறுவ முற்படுகிறான். அவன் வேதச்சொல்லை காப்பேன் என்று சொல்வது முழு வேதத்தையுமா அல்லது அதில் சிறு பகுதியென இருக்கும் ஷத்திரிய தருமத்தை மட்டுமா? அவன் வேதத்திலிருந்து தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துப் பேசுகிறான். பகுதி உண்மை என்பது பொய்யைவிட அதிக தீங்கிழைப்பது. அந்த பகுதி உண்மையையும் அவன் சில பேரிடம் மட்டுமே பொருத்துகிறான். அசுரரும் நிஷாதரரும் நாடாளக் கூடாது என்றால், பிராம்மணரும் சூதரும் நாடாளலாமா? அவன் வேதத்தைக் காக்க வேண்டுமென்றால் முதலில் அஸ்வத்தாமனையும் கர்ணனையும் அரசனல்ல என்று சொல்லி அவர்கள் நாட்டை முதலில் வென்று கவர வேண்டும்.
அடுத்து ஒருவர் ஷத்திரியர் என்பதை எதைவைத்து முடிவெடுக்கவேண்டும்? தகுதியை வைத்து என்றால் தமக்கென ஓர் அரசையும் குடிமக்களையும் கொண்டவர் எவரென்றாலும் ஷத்திரியர்கள் என ஆகிவிடுகிறார்கள் அல்லவா? அதன்படி பார்த்தால் அசுர நிஷாத அரசர்கள் ஷத்திரியர்கள்தானே?
பிறப்பினால் வருவது எனக் கொண்டால் இது வேதம் சொல்வதா எனப் பார்க்கவேண்டும்? பிறப்பு என்பது குருதித் தொடர்பினால் வருவதா? ஒருவனின் தந்தையும் தாயும் ஷத்திர்யர்களாக இருக்க வேண்டுமா அல்லது தந்தை மட்டும் இருந்தால் போதுமா? அப்படி இருந்தால் கூட துரியோதனின் ஷத்திரியத்தன்மை கேள்விக்குரியதாகிறது. அல்லது ஷத்திரியனென சொல்லி வளர்க்கப்படுதல் மட்டுமே போதுமானதா? அல்லது ஷத்திரியக் குடியில் வளர்வதொன்றே போதுமானதா?
ஷத்திரியர்களின் அரசு பிரிக்கப்படக்கூடாது என்றால் ஒரு காலத்தில் பதினாறு ஜனபதங்கள் தான் இருந்தது. பின்னர் அது ஐம்பத்தாறு என பெருகியது. அதற்கு வேத ஒப்புதல் இருந்ததா? அப்படி பெருகியது மேலும் பெருகக்கூடது என ஏதாவது வேதச்சொல் இருக்கிறதா?
அவன் நாடு அவன் தந்தையுடையுதா என்பதே கேள்விக்குட்பட்டது. அப்படியே வைத்துக்கொண்டால் கூட திருதராஷ்டிரர் முதலில் தன் நாட்டை தருமனிடமே முழுமையாக ஒப்படைக்கிறார். வாரணாவத எரிப்புக்கு பின்னால் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்ற கருத்தின்படியே துரியோதனனுக்கு அரசுரிமை கொடுக்கப்படுகிறது. பின்னர் தருமர் தியாகத்தால் மீண்டும் பாதி நாட்டை துரியோதனன் பெறுகிறான். பின்னர் சூதின் வழியாக தருமரிடமிருந்து அந்தப் பாதி நாடும் எடுத்துக்கொள்ளபடுகிறது. அப்போது வனவாசம் மீண்டு வந்த பின்னர் தருமனுக்கு நாடு திரும்ப அளிக்கப்படும் என்று சொல்லுறுதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி தருமர் தன் நாட்டை திரும்ப அளிக்கும்படி கோருகிறார். இதில் ஷத்திரிய தருமம் யார் பக்கம் இருக்கிறது?
மண் விழைவு ஷத்திர்யர் அனைவருக்கும் இருக்க வேண்டுமென்றால் தருமருக்கும் அது உரித்தானது எனும்போது அவர் தன் நாட்டைப் மீட்டுக்கொள்ள நினைப்பது எப்படி தவறென்று ஆகும்?
நிஷாதரும் அசுரரும் இப்போது பாண்டவர் தர்ப்பில் இருக்கிறார்கள் ஆனால் அப்படி அவர்கள் திரள்வது துரியோதனனின் அதீத மண் விழைவால் ஏற்பட்டிருக்கும் போரின் காரணமாகத்தானே. இப்போரே இல்லையென்றால் இவ்வாறான படை திரள்கள் எப்படி நிகழ்ந்திருக்கும். துரியோதனன் தலைகீழாக கூறுகிறான்.
அடுத்து வேதம் என்பது மறுக்கவொன்னா சொல்லெனக் கொண்டால் கூட அதற்கு எவ்வாறு பொருள்கொள்வது என்பது காலத்திற்கு காலம் சூழலுக்கு மாறும். இப்படி வேதத்திற்கான அப்போதைய சூழலுக்கான பொருளை அளிப்பதே சான்றோர் கடமை. இப்படி வேதம் சொல்வதைப்பற்றி பேசுவதற்கான அருகதை துரியோதனனுக்கு இருக்கிறதா?
ஆனால் இத்தகைய வினாக்கள் அவன் வாதத்தை அந்த அவையில் முற்றிலுமாக தகர்த்துவிட முடியாது. இதற்கான பதில்கள் அவற்றுக்கான கேள்விகள் என சுழன்றுகொண்டே இருப்பதாக அது மாறிவிடும். மேலும் மொத்த அவையும் ஏற்கெனவே துரியோதனன் சொற்களை ஒன்று விடாமல் ஏற்றுக்கொண்டவை. இப்போது அவர்கள் உள்ளங்களை மாற்றும்வண்ணம் தர்க்கத்தை அமைப்பது மிகவும் கடினமாகிறது . கிருஷ்ணர் அடுத்து அவர் விவாதமாக எதை வைக்கப்போகிறார் என்பதை அறிவதற்கான பெரும் ஆவலை வெண்முரசின் இந்த அத்தியாயம் ஏற்படுத்தியிருக்கிறது