Sunday, February 4, 2018

காலம் கலைக்கும் கோலம். (குருதிச்சாரல் 43)             

இயற்கை நம் இளம்பருவத்தில்  நம் உடலை  பலவித  அணிகள் கொண்டு அலங்கரிக்கிறது. அது அங்கங்களை வலுப்படுத்துகிறது திண்மையாக்குகிறது. தசைகளில் வலிவையும்,  திரட்சியையும், இறுக்கத்தையும், மென்மையையும் கொடுக்கிறது.  மயிற்பீலிஇழைகள்கொண்டு நம் உடலில் கோட்டோவியங்களை வரைகிறது. புன்னகையை பொலிவுபடுத்துகிறது. குரலோசையில் இதமும் இனிமையும் சேர்க்கிறது.  உடலில் புதுவிதமான பாவனைகளை பூட்டுகிறது.   பார்வைகளுக்கு புதுப்புது பொருள்களை சேர்க்கிறது. பார்ப்பதும் பார்க்கப்படுவதும் மனதில் இதுவரை இல்லாத ஆர்வங்களை பிறப்பிக்கிறது. ஆடைகள் அணிகள் தேர்வதில் அதிக கவனமும் நாட்டமும் கூடுகிறது.  ஆண்கள் தம் செயல்களில் துணிச்சலையும் பெண்களின் செயல்களில் நளினமும் பெருகுகிறது.  அவை மந்தனச் சொற்களாக யாருக்கோ உரைப்பதாக இருக்கின்றன.  ஒவ்வொரு நாளும் அந்த அணிகள் மெருகேற்றப்படுகின்றன.   மனிதர்களின்   யௌவனப் பருவம் பூக்கள் பூத்துக்குலுங்கும் இளவேனில் பருவம். மனித உடல்களின் மேல் வண்ணக் கோலமென  இளமை வரையப்படுகிறது.
            

ஆனால் இளவேனில் பருவம் என்பது சிறிது காலம் தான் நீடிக்கிறது.    போடப்பட்டிருக்கும் வண்ணக்கோலத்தை காற்று வீசிவீசி கலைப்பதைப்போல  காலம் நம் அழகுகளைக் கலைக்கிறது. சீக்கிரத்தில் அணிகள் தம்  பொலிவை இழக்கின்றன.  இளமை பூட்டியிருந்த அணிகள் தளர்கின்றன.  அவை நம்மிலிருந்து  நீங்கத் தொடங்குகின்றன.  அணிகள் இருந்த இடங்களில் அவை இருந்த  தடங்கள் தெரிந்து அணிகள் அகன்று போனதை இன்னும் பெரிதாக்கி காட்டுகின்றன.  கண்களில் எழுந்திருந்த ஒளி,  குரலில் கூடிய கார்வை குறைகின்றன. விழா முடிந்த அரங்கு போல அங்கங்கள் அனைத்தும் பொலிவிழக்கின்றன.
   

பானுமதி தன் உடலில் நேர்ந்திருக்கும் மாற்றத்தை இவ்வாறு கூறுகிறாள்.
மடிந்தும் தளர்ந்தும் என் உடலென்றான இந்தத் தசைத்திரள்கள், இத்தொய்வுகள், இந்நிறமாற்றங்கள் நானா? கன்னங்கள் மேலும் மடிந்திருந்தன. கண்கீழ்த்தசை கருமைகொண்டு இழுபட்டு வளைந்திருந்தது. உதடுகள் தொங்கியிருக்கின்றனவா? முகவாயின் தொய்வும் கழுத்தின் மடிப்பும் மிகுந்துள்ளனவா? தோளிலும் மார்பிலும் அமைந்த தோல்வரிகள், தோள்களின், விலாக்களின் எலும்புப் புடைப்புகள். கழுத்தில் இந்த நரம்புவரி முன்பு இத்தனை மேலெழுந்திருந்ததில்லை.
           

  உயிரினங்களின் உடலில் யௌவனத்தில்   அழகு கூடுதலும்  பின்னர் அது அகன்று போவதும் அவற்றின்  விருப்பு வெறுப்பின்படி அமைவதல்ல.  உயிர்த்தொகை வாழ இனப்பெருக்கம் நடைபெறவேண்டும். இனப்பெருக்கத்திற்காக விலங்குகள் தூண்டப்படவேண்டும்.  அதன்பொருட்டே இயற்கை ஆண்விலங்குக்கும் பெண் விலங்குக்கும் என உடலழகுகளை ஏற்படுத்துகிறது.     பிறக்கும் உயிர்கள் வலியவையாக இருக்க இனப்பெருக்கத்திற்காக கூடும் அந்த இரு உயிர்கள் தகுதி வாய்ந்தவையாக இருக்கவேண்டும்.  அந்தத் தகுதியை இயற்கை  கண்டறியவேண்டியுள்ளது. அது ஆண் விலங்கின் கண்ணின் வழி பெண்ணின் தகுதியை ஆராய்கிறது, பெண் விலங்கின் கண்ணின் வழி ஆணின் தகுதியை கண்டுபிடிக்கிறது. இதற்காகவும் உடல்கொள்ளும் அழகுகள் தேவைப்படுகின்றன.  உயிர்களின் இனப்பெருக்கத்திற்கான வயது  முடிந்த பின்னால் அவை சூடியிருந்த அழகுகளுக்கான காரணம் இல்லாது போய்விடுகிறது.  ஆகவே அவை பேணப்படாமல் உடல்களில் இருந்து தேய்ந்து மறைகின்றன. பெண்ணுடலில் அவள் வாழ்வின்  இடைக்காலத்தில் தோன்றும் மார்பகங்கள் அழகென திரள்வதும் பின்னர் அவற்றின் அழகு தளர்வதும் பற்றி  வெண்முரசு இவ்வாறு கூறுகிறது.
காமம் முகிழ்ப்பதென முளைவிட்டவை. முழுத்துத் துடித்தவை, கனிந்து ஊறியவை. கனல்கொண்டவை. மறைக்கப்பட்ட கூர்நோக்கு கொண்டவை. மண்நோக்கி தழைந்தன அவற்றின் கருவிழிகள். 
         

உடலில் அணிகள் சேர்வதை ஆர்வத்தோடு வரவேற்ற நாம், பின்னர் அவை நம் உடலைவிட்டு நீங்குதலை ஒப்பமுடியாமல் கவலையுறுகிறோம்.  நழுவும் அணிகளை செயற்கையாக நம்முடலிலேயே இறுக்கிக்கொள்ள முயல்கிறோம்.  ஆனால்  காலம் செல்லச் செல்ல  பொருந்தா வேடம்பூண்ட நடிகனைப்போல் பரிகசிப்புக்கு ஆளாகிறோம்.  விலங்குகள் இப்படி தம்முடலில் அணிகள்சேர்வதையும் வயது ஏறுகையில் அவை அகல்வதையும் பொருட்படுத்துவதில்லை.  ஆனால் மனிதன் தன் அணிகள் தன்னிடமிருந்து திருடுபோனதைப்போல் மனம் உளைகிறான். அவற்றை தக்க வைத்துக்கொள்ள போராடுகிறான். அதற்காக பொருளும் நேரமும் அதிகம் செலவழிப்பவர்களாக பெரும்பான்மையான மனிதர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் உள்ளம் இளமைக்காலத்திலேயே இருந்துவிடவேண்டும் என்று தவிக்கிறது ஆனால் உடலோ முதுமை நோக்கி பாய்ந்தோடிப்போவதாக இருக்கிறது.  


அவள் உள்ளம் தயங்கித் தயங்கி ஒவ்வொரு தருணத்திலும் மரக்கிளைகளை, வேர்களை, கற்களை பற்றிக்கொண்டு நின்று இழுபட்டு ஒழுகிச் செல்ல பெருகி விசைகொண்டு நெடுந்தொலைவில் முன்னால் சென்றுகொண்டிருந்தது உடல். அதன் இலக்கும் விழைவும் முதுமையே என்பதுபோல.    


       விலங்குகளில் மனிதன் மட்டும் இனப்பெருக்க வயது கடந்த பின்னும் காமத்தில் ஆழ்ந்துவிட்ட மனதை திரும்ப விடுவித்துக்கொள்ள விரும்புவதில்லை.  அவனுள் இருக்கும் காமத்தின்  காரணமாக தன் விருப்பம் குறையாமல் இருக்க தன் துணையிடம் அழகைத் தேடுகிறான்.   தான்  விரும்பப்பட  தன் அழகை தக்கவைத்துக்கொள்ள போராடுகிறான். இந்த உளச்சிக்கலே மனிதர்களை உடலழகின்பால் அதிக ஈர்ப்புகொண்டவர்களாக வைத்திருக்கிறது என்று கருதுகிறேன்.. 

தண்டபாணி துரைவேல்