Saturday, February 3, 2018

வெண்முரசு வாசிப்பு முறை - ராஜகோபாலன்நண்பர்களுக்கு வணக்கம். முதலில் வெண்முரசு உரையாடல் கூடுகையை ஓராண்டுகாலம் தொடர்ந்து நடத்தி வரும் புதுச்சேரி நண்பர்களுக்கு என் வாழ்த்துகளும், பாராட்டும்.  பதினாலாயிரம் பக்கங்களையும் தாண்டி இன்னும் வளரும் ஒரு படைப்பை தொடர்ந்து எழுத ஜெயமோகனுக்கு எவ்வளவு படைப்பூக்கம் தேவைப்படுமோ அதற்கிணையான வாசிப்பூக்கம் நமக்கும் தேவைப்படுகிறது.  சொல்வதானால் எழுத்தாளரின் படைப்பூக்கத்திற்கு வாசகர் செய்யும் நன்றியே வாசிப்பூக்கம் குறையாமல் இருப்பதுதான். அதற்கான சாத்தியங்களை உருவாக்கியபடியே இருக்கும் புதுச்சேரி நண்பர்களுக்கு நன்றி.
வெண்முரசின் வாசிப்பு முறை என்பது என் வாசிப்பு அனுபவங்களை ஒட்டி நான் உருவாக்கிக் கொண்ட ஒரு புரிதல் முறையே. இதை ஒட்டிய, இதை விட சிறந்த , வேறு கோணங்களில் அணுகக் கூடிய வாசிப்பு முறைகளும் சாத்தியமே. இங்கு எனது வாசிப்பனுபவத்தின் அடிப்படையிலான வாசிப்பு முறையினையே பகிர்ந்து கொள்கிறேன்.

நண்பர்களே, மூன்று கேள்விகளுடன் இந்த உரையைத் துவக்கலாம். மூன்று கேள்விகளுக்கும் நீங்களே விடை சொல்ல வேண்டும். முதன்மையாக தோன்றும் ஒரு பதிலை பதினைந்து வினாடிகளுக்குள் சொல்ல முடிந்த அளவிற்கு சுருக்கி சொல்லுங்கள்.
முதல் கேள்வி – நீங்கள் வெண்முரசு தவிர பிற நாவல்களையும் வாசிக்கும் வாசகர். அவ்வாறெனில், பிற படைப்புகளுக்கும் வெண்முரசுக்கும் நீங்கள் காணும் முக்கிய, முதன்மை வேறுபாடு என்று எதைச் சொல்வீர்கள் ?
இதற்கான விடையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டாம் கேள்வி – வெண்முரசு நாவலின் தனித்தன்மை என்று முதன்மையாக எதைக் குறிப்பிடுவீர்கள்? ( முந்தைய கேள்வியின் விடையையே இதற்கு சொல்லக் கூடாது ).
இதற்கான விடையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

மூன்றாவது கேள்வி – வெண்முரசு வாசிப்பில் நீங்கள் சந்தித்த / சந்திக்கும் முதன்மையான சவால் என்று எதை சொல்வீர்கள் ? (நேரடியான , நேர்மையான பதில் எதிர்பார்க்கப்படுகிறது)
இதற்கான விடையைக் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த மூன்று கேள்விகளுக்குமான விடைகளின் கலவையே வெண்முரசின் வாசிப்பு முறை. வாசிப்பு முறையின் புரிதல் முறை இம்மூன்று கேள்விகளின் விடைகளை நாம் யோசிக்கும் சாத்தியத்தில் அடங்கியுள்ளது. இங்கிருந்து நாம் அடுத்த கட்டத்திற்கு செல்வோம்.
நாமனைவரும் அறிந்த ஒன்று மகாபாரதம் ஒரு தொன்மம் என. தொன்மங்கள் தம் வேர்களை எங்கு கொண்டுள்ளன எனும் கேள்வி முக்கியமானது. அதன்  வழியே நாம் அறியக் கிடைக்கும் வாசிப்புகள் புரிதலை மேம்படுத்தும்.  தொன்மங்கள் அவற்றின் வேர்களை ஆழப் பரப்பியிருக்கும் இடங்களை முதற்கட்டமாக நான்கு அடுக்குகளாகக் கொள்ளலாம். (படம் 1) இவை இறுதி செய்யப்பட அடுக்குகளல்ல. இவற்றில் இன்னும் சிலவற்றை சேர்க்க இயலும். எனினும் முக்கிய அடுக்கு நிலைகளை மட்டுமே இங்கு பேசுகிறேன்.


(படம் 1)
நாட்டார் வழக்கு அல்லது ஐதீகங்கள் எனும் அடிப்படை அடுக்கு முழுக்க எளிய நம்பிக்கைகளாலும், குல ஐதீகங்களாலும் நிரம்பியது.

புராணங்கள் அல்லது பௌராணிக உரைகள் முழுவதும் மத நம்பிக்கைகள் சார்ந்தவை.
காவியங்களும், இலக்கியங்களும் தொன்மங்களை தளங்களாகக் கொண்டு விழுமியங்கள் வழியே ஆழங்களையும், உயரங்களையும் தொடத் துணிபவை.

வரலாறு / ஆய்வுகள் முழுவதுமாய் அறிவியல் கோட்பாடுகளின்படி இயங்கக் கூடியவை.

ஒரு தொன்மத்தை நாம் வாசிப்புக்கு உட்படுத்தினாலோ அல்லது தொன்மத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு படைப்பை வாசித்தாலோ அத்தொன்மம் மேற்கண்ட நான்கிலுமோ அல்லது அவற்றில் சிலவற்றிலோ வேரூன்றி நிற்பதை உணர முடியும். சுவாரசியம் என்னவெனில் ஒவ்வொரு அடுக்கும் வெவ்வேறு வகை வாசிப்பு இயல்புகளைக்  கோருபவை. மட்டுமன்றி  வெவ்வேறு எல்லைகளையும் உடையவை.

நாட்டார் மொழிபுகளுக்குள் புக வேண்டுமாயின் அது கோரும் ஒரு வாசிப்பு மனோநிலையைக் கொண்டிருக்க வேண்டும். உதாரணமாய், நாட்டார் மரபில் வரும் ஒரு தெய்வம் ஒரு பூசகர் மீதேறி வந்து தனக்கு வேண்டுவனவற்றை பட்டியலிட்டு கேட்கும். கருங்கிடாய், சேவல், சாராயம், சுருட்டு எல்லாம் கேட்கும் தெய்வம். பதிலுக்கு மக்கள் தெய்வம் செய்து தர வேண்டிய பட்டியலை முன்வைப்பார்கள். வைசூரி, அம்மை, காலரா  இல்லாமல் பார்த்துக் கொள்ளல், மழை பொழிய வைத்தல், வெள்ளாமையில் சிக்கல் இல்லாமல் செய்தல், இரவுக் காவல் , கால்நடைகளின் ஆரோக்கியம் என நாட்டார்  தெய்வங்கள் செய்ய வேண்டிய வேலைகளின் பட்டியலும் நீளம்தான். அதெப்படி மனிதர் மீது தெய்வம் இறங்க முடியும் என்ற கேள்வியோடு வந்தால் நாட்டார் படைப்புகளுக்குள்  கேட்பவரால் புக இயலாது. அதில் ஆழ்ந்து வாசிக்க முடிந்தால் நாம் அந்த வாசிப்பு முறைக்கு ஒப்புக் கொடுத்துதான் வாசிக்கிறோம் என்பது பொருள்.

புராணங்கள் குறித்த வாசிப்புகளுக்குள் புக மத ஆச்சாரங்கள், மரபுகள், நம்பிக்கைகள் ஆகியவை குறித்த புரிதல் இருப்பது அவசியம். ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்வது, பதினைந்து பிறவிகள் கொண்ட பிறப்பு சான்றிதழ், கற்பனைக்கும், தர்க்கத்திற்கும் அறைகூவல் விடுக்கும் பிரும்மாண்ட வர்ணனைகள், ஒரே கதைக்குள் நூறு கதைகள் பின்னி வருதல், விழுதால் வேராக்கி விரியும் ஆல் போல கதைகளுக்குள் கதைகள் பிறந்து வளர்ந்து தனிப் புராணங்கள் ஆகுதல் ஆகியவற்றை வாசிப்பின் சாத்தியங்களாக ஏற்றால்தான் புராணங்கள் குறித்த வாசிப்பிற்குள் புக இயலும்.
காவியங்கள் குறித்த வாசிப்பில் புக அவை உருவாக்கி வந்த, அவை பேசும் காலத்தில் இருந்த சமூக, அரசியல், அற விழுமியங்களைப் பற்றிய புரிதல் இருப்பது அவசியம். நீண்ட வர்ணனைகள், கதை மாந்தரின் இயல்புகளையும் , தோற்றத்தையும், செயல்களையும் மிக விரிவாக பதிவு செய்வது, அற விழுமியங்களை உயர்த்திப் பேசுவது, உச்ச நிலை உணர்வுத் தளத்தில் மட்டுமே இயங்கும் பாத்திரங்களைப் படைப்பது / விரிவாக்குவது, மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது, தனித்தன்மையை கோருவது என விரியும் காவியங்களின், இலக்கியங்களின் இயல்புகளை ஏற்றால்தான் காவிய வாசிப்பிற்குள் நாம் புக முடியும்.    

 வரலாறு/ ஆய்வு குறித்த வாசிப்புகள் நமது தர்க்க ரீதியிலான விழிப்புநிலை வாசிப்பைக் கோருபவை. சான்றுகளின் மீதான ஆதாரங்களை நிரூபித்தல், ஆதாரங்களின் மீது சான்றுகளை நிரூபித்தல், உணர்ச்சி நிலைகளை ஏற்காமை, தெளிவாக வரையறுக்கப்பட்ட சமரசமற்ற சட்டகங்கள் ஆகியவற்றின் வழிமுறைகளே வரலாற்று மற்றும் ஆய்வு முறை வாசிப்புகள்.

இதே போலவே இந்த நான்கு அடுக்குகளின் வாசிப்புகளும் சில வரையறைகளுக்கு அல்லது எல்லைக்கு உட்பட்டவை.
நாட்டார் மரபில் உள்ள வரையறைகளுக்கு உதாரணம் என அவற்றின் எல்லைக்குட்பட்ட நிலப்பரப்பு மற்றும் வளர்ந்தபடியே செல்லும் கதை ஆகியவற்றை சொல்லலாம். நாட்டார் மரபின் கதை நிகழுமிடங்கள் அனைத்துமே 2௦ சதுர கி மீ க்குள் அடங்கி விடும். நெல்லையில் இராமாயண சம்பவங்களில்நான்கு நடந்த இடங்கள் 15 கி மீ க்குள் அடங்கி விடும். அவ்வாறே கதை நெல்லையிலிருந்து செங்கோட்டை போகையில் இரு மடங்கு வளர்ந்திருக்கும். முற்றுரிமை கொண்டோர் என யாரும் இல்லாததால் கதைகள் கிளைப்பதை தவிர்க்க இயலாது. இந்த இயல்பு தொன்மங்களில் வெளிப்படை.

புராணங்களை வாசிப்பதில் உள்ள வரையறை அவை அனைத்தையும் மத நம்பிக்கைக்குள், அந்த மதத்தின் ஆதார தத்துவத்திற்குள் அடக்க முயல்வது மற்றும் தெய்வத்தன்மை ஏற்றுவது. தொன்மக் கதைகளில் வரும் இடைவெளிகளை புராண மரபு ஏதோ ஒரு முற்பிறப்பு – மறுபிறப்பு கதை வழியே நிரப்பி விடும். கதை மாந்தர்க்கு தெய்வத்தன்மை அல்லது அரக்கத்தன்மை என்ற பிரிவுக்குள் பௌராணிகர்கள் கொண்டுவந்து விடுவார்கள். தொன்மங்களின் இடைவெளிகள் அனைத்தையும் மைய தத்துவம் குறியீடு செய்யும் கடவுளில்  கொண்டு இணைத்து விடும்.

காவியங்களின் வரையறைக்கு உதாரணம் சொல்லவேண்டுமெனில் அவற்றின் விழுமியங்கள் சார்ந்த கதையாடல்களும், அவற்றின் மொழிச்சுவையும். காவிய லக்ஷ்ணங்களில் முதன்மையான ஒன்று அது முன்னிறுத்த வேண்டிய விழுமியம். அந்த விழுமியத்தின் மீதான நீண்ட சொல்லாடல்கள் காவியங்களில் வெவ்வேறு வகைகளில் , வெவ்வேறு கதைமாந்தரின் வாழ்வில், வெவ்வேறு சூழல்களில் வந்து கொண்டே இருக்கும். இது கூறியது கூறல் போன்ற உணர்வை காவிய வாசிப்பில் உருவாக்கும். அதன் மொழிச்சுவை- எது காவியங்களின் இயல்போ அதுவே அதன் வரையறைகளில் ஒன்று. மொழியின் உச்சபட்ச இலக்கண் சாத்தியங்களை காவியமே உடைத்து உருவாக்குகிறது. ஆகவே அதன் சொல்லாடல் அம்மொழியின் அனைத்து சாத்தியமுள்ள  சுவைகளையும் தரும் ஒன்றாக மாறுகிறது. மொழியின் சுவையில் மயங்கியோர் அந்த ஒன்றுக்காகவே காவியத்தின் மேல் காதல் கொண்டு, அணங்கு பற்றி வேறேதும் வாசிக்க இயலாமலேயே போவது.

வரலாற்று ஆய்வு வாசிப்பின் எல்லைகள் அவற்றின் நேரடி இயல்புகளே. சான்றுகளும், ஆதாரங்களும் இல்லா ஒரு கருத்தை இவ்வகை வாசிப்பு முறை கருதுகோளாக மட்டுமே கொள்ளும். இட்டு நிரப்புவதற்கான இடம் சான்றுகள் இன்றி இருந்தால் அது இடைவெளியாகவே விடப்படுமேயன்றி சாத்தியக்கூறுகளால் / நம்பிக்கைகளால் இட்டு நிரப்பப்படாது. சுற்றியுள்ள நான்கு கோவில்கள் ராஜராஜனால் கட்டப்பட்டவை என்பதால் இந்தக் கோவிலும் அவன் கட்டியதே என்பது ஒருக்காலும் வரலாற்று ஆய்வு முறை முடிவு அல்ல. அவன் கட்டியதாகக் கருதலாம் என்ற கருதுகோள் தான் வரலாற்று ஆய்வுகளின் முறை. இவ்வகை வாசிப்பில்  தொன்மக் கதையாடல்கள் முழுமை பெறாத, இடைவெளிகள் அதிகமுள்ள , தொடர்ந்து உழைப்பை கோரிக்  கொண்டே இருப்பவை.

இந்த வாசிப்புகள் ஒன்றையொன்று மறுதலிக்கும் இடங்கள் உண்டு.. ஆனால் அந்த மறுதலிப்புகள்   ஒன்றையொன்று அழிக்க வேண்டிய அவசியத்தில் உருவாக்கப்படவில்லை. அவை ஒன்றையொன்று இட்டு நிரப்பும் சாத்தியங்களுடன் உருவாகிவந்த ஒன்று என புரிந்து கொண்டால் மேலே செல்ல இயலும்.

இந்த இடத்திலிருந்து நாம் முதலில் பேசிய கேள்விகளின் விடைகளுக்கான சாத்தியங்களுக்குள் நுழைவோம். நாம் இதுவரை வாசித்த புனைவுகளை எடுத்துக் கொள்வோம். அவை அனைத்தையும் இந்த முக்கோண அடுக்கில் இருக்கும் ஏதோ ஒன்றின் கீழோ அல்லது இரண்டின் கலவையாகவோ நம்மால் வகைப்படுத்தி விட இயலும். யதார்த்த வாத புனைவுகள் வரலாற்று ஆய்வு மற்றும் காவிய சாயல் கொண்டவையாக இருக்கும். வரலாற்று புதினங்கள் காவிய முறையில் வரலாற்று சாயல் கொண்டதாக இருக்கும். நாட்டார் மரபில் காவிய சாயலோ, புராண சாயலோ கொண்ட படைப்புகள் உண்டு. நேரடியான அடுக்குகளுக்குள் செல்லும் படைப்புகளும் உண்டு. நாம் வாசிக்க நேர்ந்த சில பக்கங்களுக்குள் நாமறியாமலேயே அப்படைப்பின் வகைமை கோரும் வாசிப்புக்கு உட்பட்டு தொடர்கிறோம்.

இந்த அடுக்குமுறையில் உள்ள படைப்புகள் ஒவ்வொன்றும் அதற்கான சட்டகங்களை தனியாக உருவாக்கிக் கொள்வதில்லை. ஒரு அடுக்கின் சட்டகம் போலும் அதே சட்டகத்தை இன்னொரு அடுக்கு எடுத்தாள வேண்டியதில்லை.  மாறாக அவற்றுக்குரிய தனிப்பட்ட முறையில் வேறு விதங்களில் வெளிப்படுத்துகின்றன. அதுவே படைப்புகளின் வேறுபாட்டை வகைமைகளைக் காட்டுகிறது. சமூக சூழல், அதன் அடுக்குகள், அரசியல், பொருளாதாரம், நிலக்காட்சி , வாழ்வு முறை, கலாசாரம், பண்பாடு போன்றவை சட்டகங்கள். ஆனால் படைப்புகள் தம் அடுக்குக்கு உகந்தவாறு இவற்றை தம்போக்கில் விவரிக்க இயலும்.


(படம் 2)
இதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அடுக்கின் வாசிப்பு முறை தன்னியல்பாக  பொருந்தி வரலாம். அவ்வகைப் படைப்புகளில் நாம் திளைப்போம். அதிக பொருத்தமில்லாத அல்லது அதிகம் முயலாத வாசிப்பு முறையும் நமக்குண்டு. உதாரணமாக நாட்டார் மரபில் எளிதாக பொருந்தி வாசிக்க முடிந்த எனக்கு வரலாற்று ஆய்வு முறை வாசிப்பு உகக்கவேயில்லை. என் பிடரியை நானே பிடித்து உள்ளே தள்ளிதான் வரலாற்று வாசிப்பை எனக்கு சாத்தியமாக்கிக் கொண்டேன்.
புனைவுகளில் நாம் இதுவரை வாசித்தவை பெருமளவும் வகை நூல்களே. ஒரு படைப்பு இந்த வகைப்பாடுகள் அனைத்தையும் பேசக்கூடிய வகையில் வரும்போது அதை தொகை நூல் என்றுதான் சொல்ல முடியும். நமது வாசிப்பு முறை சாத்தியத்தின் எல்லைகளைத் தாண்டி செல்லும் ஒரு தொகை நூல்  படைப்பு நம்மை முதலில் திகைக்க வைக்கிறது. இதுவரை நாம் முயலா வாசிப்பு முறையினை அது கோருகிறது. வெண்முரசு ஒரு தொகை நூல். 
 தான் ஒரு தொகை நூல் எனும் தனித்தன்மையினைக் கொண்ட வெண்முரசை எத்தருணத்திலும் வியாசர் எழுதிய ஜெய எனும் மகாபாரதத்தின் மறுஆக்கம் என்று சொல்லவியலாது.  மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொகை நூல் படைப்பு என்றுதான் சொல்லவேண்டும். ஒரு தொன்மத்தை அடிப்படையாகக் கொண்டு வாசிப்பு அடுக்கு நிலைகளின் அனைத்து சாத்தியங்களையும் தன்னுள் கொண்டு தத்துவ தரிசனங்கள் வழியே விரியும் படைப்பாக வெண்முரசு இருக்கிறது. அதன் வாசிப்பு முறையின் முழுமையை இவ்வாறு விளக்கலாம் .(படம் 3)


மிகச் சரியாக இந்த அமைப்புமுறையே இதை வாசிப்பவரின் சவாலாகவும் வெளிப்படுகிறது. இரண்டு அத்தியாயங்கள் நாட்டார் மரபிற்குள் இருப்பதை வாசிக்கும் நாம் அடித்த அத்தியாயங்களில் வரலாற்றுப் பார்வைக்கு தாவ வேண்டியிருக்கிறது. அதில் இயைந்து பொருந்துமுன் அடுத்த 3 அத்தியாயங்கள் புராண மரபிற்குள் புகுந்து விடுகின்றன. சற்று மூச்சு விட இடம் கிடைத்தால் காவிய வர்ணனைகளும், நீண்ட விழுமிய விவாதங்களும் , உச்சக் காட்சிகளும் விரிகின்றன.
சட்டகங்களோ இன்னும் ஒரு படி மேலே. நகரம் என்று கொண்டால் அரசன் பார்வையில், அரசி பார்வையில், அமைச்சன் பார்வையில், அரசூழ்கை இயற்றும் ஒருவன் பார்வையில், சூதன் பார்வையில், அடுமனையாளன் பார்வையில், ஏவலன் பார்வையில், காவலன் பார்வையில் என்று விரிந்து கொண்டே போகிறது. ஒவ்வொரு வாசிப்பு அடுக்கின் பார்வையிலும் ஒவ்வொரு சட்டகமும் விரிவாக்கப்படுகிறது. ஒரு நாடு இன்னொரு நாட்டுடன் கொள்ளும் கூட்டு என்பதற்கு புவியியல் வேறு தெரிய வேண்டியிருக்கிறது.
இவ்வாறாக வெண்முரசு கோரும் வாசிப்பு முறை என்பது வெவ்வேறு வாசிப்பு முறை அடுக்குகளுக்கு வேகமாக மாறும் அதன் போக்கிற்கு ஏற்ப நாமும் நம் வாசிப்பு முறையை பல்மாற்றி பயணிப்பதுதான். இதில் எனக்கு பழகாத அடுக்குமுறை வரும் இடத்தில் நான் வேகமிழக்கிறேன். இரு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று  கூடுதல் உழைப்பும், சற்று பிடிவாதமும் கொண்டு இந்த இடத்தை வாசித்துக் கடத்தல் (இதற்கு மிகச் சிறந்த வழி கூட்டு வாசிப்பும், கலந்துரையாடலும் . வெவ்வேறு அடுக்குகளில் வாசிப்பு உள்ளவர்கள் பேசுகையில் நமக்கு சவாலான இடங்களை நாம் எப்படிக் கடப்பது என்பது தெளிவாகி விடும்). இரண்டாவது எனக்கு உகக்காத ஒரு வாசிப்பு முறை இடம் வரும்போது அதை படைப்பின் மீதான குறைபாடாக மாற்றிக் கொள்வது. ஒப்பு நோக்க இது எளிமையான வேலை.
புராண வாசிப்பு எனக்கு ஒவ்வாத வாசிப்பு முறை எனில் “ஒரே இந்துத்துவமா எழுதறாருங்க” எனலாம். நாட்டார் மரபு வாசிப்பு முறை எனக்கு ஒவ்வாதது எனில் “ கேள்விப்பட்ட கதைகளை பூராம் போட்டு நிரப்பராருங்க” எனலாம். வரலாற்று ஆய்வு உகக்கவில்லை எனில் “ ரொம்ப முற்போக்கா எழுதறேன்னு கேரக்டர்களை, சம்பவங்களை  ரொம்ப டீமீன் பண்றாருங்க “ எனலாம். காவிய வாசிப்பு உகக்கவில்லை எனில் “ சும்மா சொன்னதையே சொல்றாருங்க .. புருஷன் பெண்டாட்டி சண்டையவே எத்தனை முறை சொல்றது” எனலாம்.

வெண்முரசின் வாசிப்பு எனக்கு ஒரு சவாலை உருவாக்குமானால் அது என் வாசிப்பின் மீதான போதாமையா என்பதை முதலில் உறுதி செய்யாமல் நான் படைப்பின் மீது மோத ஆயத்தப்படக் கூடாது. ஆனால் அதை செய்ய ஆத்ம சுத்தியுடன் கூடிய சுயவிமர்சன மனப்பான்மை தேவை. விமர்சனம் செய்ய ஒரு கருவியின் துணை தேவை. வெண்முரசின் மீதான எனது வாசிப்பு உருவாக்கிய அறைகூவல்களின் வழியேதான் என் வாசிப்பின் மீதான செயல்படுமுறையினை நான் கண்டுகொண்டேன். இதையே நான் வாசிக்கும் ஒவ்வொரு படைப்பின் மீதான விமர்சனத்தின்போதும் எனக்கு நானே போட்டுப்பார்த்துக் கொள்வதையும் செய்கிறேன்.


தமிழ் புனைவின் இதுவரையிலான உச்சபட்ச சாத்தியத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் வெண்முரசு படைப்பிற்கும், அதன் ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கும் , இங்கு பேச வாய்ப்பளித்த பாண்டிச்சேரி நண்பர்கள் ஹரிக்ரிஷ்ணன், மணிமாறன், சிவராமன் , சீனு ஆகியோர்க்கும் நன்றி . நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.