அன்புள்ள ஜெ,
ஏறக்குறைய இரண்டு வருடங்களாக வெண்முரசு தொடரைப் படித்துக்கொண்டு வருகிறேன். இதுவரை வெண்முரசு சம்பந்தமாகக் கனவு எதுவும் வந்ததில்லை. ஆனால் இந்த வாரம் கலிவனத்து நரிகளைப் பற்றிய அத்தியாயத்தைப் படித்த அன்று காலையில் கனவு வந்தது. காய்ந்த புற்கள் நிறைந்த ஒரு காடு. அதில் ஒரு நரி வாயில் ஒரு புத்தகத்தைக் கவ்விக்கொண்டு தலையைச் சற்றே உயர்த்தியபடி ஓடி வருகிறது. அதன் வாயில் இருக்கும் புத்தகம் தீப்பிடித்து எரிந்துகொண்டுள்ளது. உடனே அதற்குப் பொருத்தமான ஒரு வாக்கியம் 'அனலைக் கவ்விய நரி' என்பது போல மனதில் தோன்றியது. வாக்கியம் அதுவல்ல. ஆனால் அழகான, மிகவும் பொருத்தமான ஒன்று. விழித்துக் கொண்டதும் எழுதி வைக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் விழித்த பின் அதை மீட்கவே முடியவில்லை.
பாலகிருஷ்ணன்