Friday, February 2, 2018

சர்வாங்கரக்தாய:துரியன் தன்னை கலிக்கு முற்றளிக்கும் நிகழ்வு உக்கிரமான சடங்குகளோடு நிகழ்கிறது. வாசகனை ஒரு கனவிலென வாசிக்க வைத்தது ஜெ வின் படைப்பாற்றல். அவன் இந்த சடங்குகளின் வாயிலாக உதிர்த்து செல்வது தனது தந்தை, தாய், மூதாதையர்கள் மட்டுமல்ல, அவனது அச்சம், ஆணவம், சினம், விழைவுகள், காமம், சோர்வு (தாமச குணம்), மந்தணம், வஞ்சம் என அவன் உள்ளம் கொண்ட அனைத்தையும் தான். இறுதியாக அவன் தன் ஆன்மாவையும் உதிர்க்கிறான். இவையனைத்தையும் துறந்து அவன் அடைவது முடிவின்மை. ஆம், இருள், தனிமை, வெறுமை மட்டுமே நிறைந்த பாழ் எனலாம், இருமை அழிந்து இருப்பென்பது மட்டுமே ஆனது எனலாம். கானேகி, கடுந்தவம் செய்து படிவரும், முனிவரும், ஞானியரும் எய்த விழையும் முழுமை இது.

துரியன் துவக்கம் முதலே எதிர்மறை உச்சங்களின் வழியாக செல்ல விதிக்கப்பட்டவன். வெண்முரசில் துரியனின் வருகை மழைப்பாடலில் நிகழ்ந்தாலும், அவன் ஆளுமையாக வரத்துவங்குவது வண்ணக்கடலில் தான். வெண்முரசின் சிறப்பு ஒரு கதாபாத்திரத்தின் முழு வார்ப்பும் அந்த முதல் அறிமுகத்தில் இருப்பது தான். வண்ணக்கடலில் இளநாகன் காளஹஸ்தியில் இருளெதிர்வர்கள் (காளாமுகர்கள்) மகா குரோத ரூபாயனை கருநிலவு நாளில் சூலத்தில் எதிர்கொண்டு அணைத்துக் கொள்ளும் நிகழ்வைக் கண்ணுற்று நினைவழிகிறான். நினைவெழுந்து வருகையில் கேட்கும் கதையாக விரிகிறது பாறைகளால் ஆன உலகைக் கொண்ட துரியனின் இளமை. ஆம், துரியன் எதிர்மறை உச்சத்தின் வாயிலாக முழுமையை நோக்கிச் செல்லப் போகிறவன். எனவே தான் காளாமுகர்களின் வழிபாடோடு அவன் அறிமுகம் ஆகிறான்.

ஒருவகையில் துரியன் கலிக்கு தன்னை முற்றளிப்பது என்பது அவன் இறப்பது தான். இறக்கையில் தானே முழு வாழ்வையும் ஒரு நோக்கு காண வேண்டும்!! மிகச்சரியாக  வெண்முரசு இத்தகைய முன் நினைவுகளை சிறு குறிப்புகளாக இணைத்துச் செல்லும். அவ்வகையில் அவன் துச்சளையிடம் கூறும் 

கருவுக்குள் புகுந்து என் மூடிய விழிக்குள் நோக்கி ஆட்கொண்டதுஎன் தெய்வம்.” – என்பது முக்கியமான குறிப்பு. இது கிராதத்தில் உள்ள காலபீதி , கால மார்க்கன் கதையில் வரும் நிகழ்வு. தன்னை அழைத்துச் செல்லும் காலமார்க்கனை கருவிலேயே மூடிய விழிக்குள் கண்டு அஞ்சி, வெளிவர மறுத்து, ஒரு மதங்க கர்ப்பத்துக்குப் பிறகு பிறந்து, காலனை அஞ்சியதால் காலபீதி எனவும், அவனை அறிந்ததால் மகா காலர் எனவும் அறியப்பட்ட, நூறாண்டு வாழ்ந்து இறுதியில் மான்மழுவும், முப்புரி வேலும், நீர்மலிச்சடையும், முக்கண்ணும் கொண்ட காலமார்க்கனை தழுவி 'யாமே நீ, சிவமே யாம்' என்று அணைத்துக் கொண்ட அவர் அடைந்த ஞானமே பாசுபதம் எனப்படுகிறது. இங்கே துரியனும், அவ்வாறு தன்னை அழைத்துப் போகக் கூடிய தெய்வத்திடம் முழுமனதோடு தன்னை ஒப்படைத்து தழுவிக்கொண்டு முழுமையடைகிறான். இந்த முழுமைக்காக அவன் துறப்பது அனைத்தையுமே, அனைத்தும் என்றால் அஸ்தினபுரியின் முடி, பாரதத்தின் மீது முற்றுரிமை கொண்டு மும்முடி சூடி சத்ராஜித் என்றமர எண்ணிய விழைவு, தன்னை விட தருணங்களின் அமைப்பினாலேயே ஒரு சொல் முன்னிருந்த பீமன் மீதிருந்த வஞ்சம், தான் தன் குருவிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற உதவாத, தனக்கு ஒரு நூறு பேர் கொண்ட படையைக் கூடத் தரத் தயங்கிய, ஷாத்ரம் அற்ற தருமன் மீது கொண்ட குரோதம் என அனைத்தையுமே!!!

காலபீதியின் கதையின் இறுதியில் பாசுபதச் சொல்லாக ஒரு வேதப்பாடலை சண்டன் பாடுவான். அதில் வரும் ஒரு சொல்லைக் கேட்டு பைலன் நடுங்கி விடுவான். அச்சொல் ‘சர்வாங்கரக்தாய’ – 
 சர்வாங்க ரக்தாயகுருதியுடல்கருக்குழவியுடல்.சர்வாங்க ரக்தாயகொலைகளத்தில் குருதிசூடிக் கூத்தாடும் உடல்சர்வாங்க ரக்தாயஅனலுடல்.அனலெனும் குருதிப்பேருடல்.  சர்வாங்க ரக்தாய!  சர்வாங்க ரக்தாயகுருதியுடல் கொண்டெழுகசர்வாங்கரக்தாயசர்வாங்க ரக்தாயசர்வாங்க ரக்தாய! சிவாய!” – 

என அவன் சித்தம் கொந்தளித்துக் கொண்டிருக்கும். துரியன் அன்னையின் கருக்குழி என்றழைக்கப்படும் பலி விலங்குகளின் குருதி கொதிக்கும் சுனையில் மூழ்கி எழுகையில் எனக்கு இவ்வரிகள் தான் நினைவுக்கு வந்தன.

நேர்மறை உச்சம் போன்றதே எதிர்மறை உச்சமும். முழுமையை எவ்விதம் அடைந்தாலும் அது பூரணமே. இருமை அழியும் நிலையை, தன்னிலை என்பதை முழுமையாக உதறிய ஒரு நிலையை முழுமையாக எதிர் திசையில் சென்று அடைகிறான் துரியன். வெண்முரசில் இதுவரையிலும் வந்த எந்த எதிர்மறை அம்சம் ஓங்கிய மாந்தர்களும், புராண கால அசுரர் முதற்கொண்டு, தன் எல்லைகளைக் கடந்து கொண்டே இருந்த புஷ்கரன்,  குழவியரைக் கொல்லத் துணிந்த கம்சன் வரை இந்த பாதையில் முழுமையை எட்டியதில்லை. அதை எய்தியவன் என்ற வகையில் இவனும் ஞானியே. பிரம்மத்தை அறிந்தவனே!!

அன்புடன்,
அருணாச்சலம் மகராஜன்