Sunday, May 13, 2018

விஸ்வரூபம்



அன்புள்ள ஜெயமோகன்



திரௌபதியின் விஸ்வரூப தரிசனத்தைப் பற்றி, சுசித்ரா அவர்கள் எழுதிய கடிதம் என்னை ஆழ்ந்த உணர்வுகளுக்குள்ளாக்கியது. குறிப்பாக இந்த வரிகள்:

//மலைச்சிகரத்தில் என் தந்தையை நான் பெற்றெடுக்கிறேன்

என் பிறப்பிடமோ கடலாழத்தில்.//

வாக் ஸூக்தம் / தேவி சூக்தத்தைத் தேடி வாசித்தேன்.
இவைதான் அவ்வரிகள்:

நான் இதன் தந்தையை  சிகரங்களில் பிறப்பித்தேன்..  என் தோற்றமோ அகக் கடல்களின் நீர்களில்..இங்கனமே உயிர்களிடத்தே நான் பரவுகிறேன்..அதோடு ஆகாயங்களின் உச்சிகளைத் தொடுகிறேன்...

’இதன் தந்தையைப் பிறப்பிக்கிறேன்- ஸுவே அச்ய பிதரம்’-என்ன swag, style! ‘அகமெனும் கடல் நீரில்-அந்த: ஸமுத்ரே அப்ஸ்வ’ எத்தனை ஆழமான சொல்லாட்சி..முதல் அஷ்டபதியின் முதல் வரி ’ப்ரளய பயோதி ஜலே-ப்ரளய நீர்களில் உதித்தவன்..’

இவை உங்கள் வரிகள்:

//எல்லையற்றது. எங்கும் தன் முகமே எனப் பெருகிய தெய்வப்பேருரு.
பலநூறு பகுதிகளாக பலகோடி உறுப்புகளாக பலகோடிகோடி தோற்றப்பெருக்காக உலகென அறிந்தவை அனைத்தும் அன்னை உடலென ஒருங்குற்று நிற்பதை அவள் கண்டாள்.
ருத்ரர்ஆதித்யர்வசுக்கள்சாத்யர்விசுவதேவர்அசுவினி தேவர்மருத்துக்கள்ஊஷ்மபர்கந்தர்வர்யக்ஷர்அசுரர்சித்தர் எனும் பன்னிரு தூயர்களும் அவளுடலே என்று அறிந்தாள். விண்சுடர்கள் விழிகள். விண்மீன் பெருக்கே அவள் அணிகள். ஒளியும் இருளும் அவள் புனைந்த ஆடைகள்.
நோக்க நோக்க பெருகி ஒன்றுபலவாகி அனைத்துக்கும் அப்பாலென மீண்டும் எழுந்துகொண்டிருந்தாள்.//
நினைத்து நினைத்து மலைத்துக் கொண்டிருக்கிறேன்.