அன்புள்ள ஜெ
வெண்முரசு எல்லா மெய்மை வழிகளையும் அங்கீகரிப்பதாக கீதையைக் காட்டுகிறது. உண்மையில் கீதை அதுதானா? வேதாந்த ஞானம் அதை ஒப்புக்கொள்கிறதா?
இல்லை என்பதே வேதாந்த வகுப்புகளிலிருந்து நான் அறிந்துகொண்டது. உபேக்ஷை இல்லாமல் ஞானபூர்த்தி சாத்தியமே இல்லை. அதைத்தான் இமைக்கணமும் சொல்கிறது
எழுவதெல்லாம் மீள்வதற்கே என்னும் இச்சுழலில் எந்தப் பறவையும் மெய்யாகவே பறப்பதில்லை. மீண்டும் உடலணையும் எச்சிறகும் வானத்தை முழுதறிவதில்லை. மண்மீளா பறவை ஒன்று உண்டு. வானாகி வானை அறிவது. அப்பறவை அறியும் வானமே பறவையென வந்தது.
அதாவது எவர் மீண்டும் லௌகீகத்துக்கு வருவதற்குவாய்ப்புள்ளதோ அவர்களுக்கு மீட்பு மெய்யாக இல்லை. நிறைவு உண்டு. ஆனால் பரகதி இல்லை. இதெல்லாம் விரிவாக கீதையிலே சொல்லப்பட்டுள்ளது. சொர்க்கம் மோக்ஷம் பரகதி பிரம்மநிர்வாணம் ஆகியவை தனித்தனியாகவே சொல்லப்படுகின்றன
நீலகண்டன்