Friday, May 18, 2018

கேட்கும் காதுகள்




ஜெ,

நான் பக்திமார்க்கத்தில் செல்பவன். நீண்டநாட்களுக்கு முன்பு ஓஷோ ஜேகே எல்லாம் வாசித்துக்கொண்டும் சர்ச்சைசெய்துகொண்டும் இருந்தேன். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக என் ஆர்வம் குறைந்தது. தொழில்நெருக்கடி, குடும்பப்பிரச்சினைகள். பக்திக்கு வந்தபின்னர்தான் என் வாழ்க்கையே ஒரு ஒழுங்குக்கு வந்தது. ஆனால் அடிக்கடி சந்தேகமும் வரும். சந்தேகமில்லாமல் பக்திசெலுத்துவது இன்றைக்கெல்லாம் எவருக்குமே முடியாதவிஷயம் என நினைக்கிறேன். ஏனென்றால்நம்மைச்சுற்றி அது இருக்கிறது. அதோடு நாமெல்லாமே சின்னவயதில் சந்தேகவாதிகள்தான். அந்த நாம் நம் உடலுக்குள் இருக்கத்தானே செய்கிறது? அதேமாதிரிதான். என் குரு சொல்வார்.

சின்னவயசில்வீஸிங் வந்தால் நடுவயதில் குணமாகும். முதியவயதில் திரும்பவரும். அதேபோலத்தான் நாஸ்திகவாதமும்.அதுவும் கொஞ்சம் வரும். கர்க்கர் அடையும் சந்தேகங்களெல்லாம் அப்படித்தான் எனக்குஅர்த்தம் அளித்தன. குறிப்பாக இந்தவரி.இப்புவியில் ஒருகணத்தில் எத்தனை கோடி வேண்டுதல்கள் செய்யப்படுகின்றன! எத்துணை விழிநீர் சிந்தப்படுகிறது! என்னென்ன வகையான வழிபாட்டுச் சடங்குகளால் ஆனது மானுட வாழ்க்கை! அவையனைத்தையும் பெற்றுக்கொள்ள அப்பால் கைகளும் செவிகளும் இல்லையாயின் மானுடரைப்போல இரக்கத்திற்குரிய உயிர் எது?

அந்தவரியை வாசித்ததும் நடுங்கிவிட்டேன்.நானே சிலமுறை நினைத்ததுதான் அது. அதற்கான பதில் அந்த அத்தியாயத்தில் கிருஷ்ணன் சொல்கிறார். அதை நான் இப்படிப்புரிந்துகொண்டேன். அங்கே ஏதோ கையும் செவியும் இருக்கிறது. இல்லாவிட்டால் இப்படி நம்பமாட்டார்கள். உண்மையில் இல்லாவிட்டால்கூட நாம் ஒன்றும் செய்யமுடியாது. இதுதான் வழி

ராஜ்