அன்புள்ள
ஜெ,
இமைக்கணம்
நாவல் ஒரு தனி தத்துவநூலாக வாசிக்கத்தக்கது. அது முடிந்தபின்னர்தான் அதை முழுமையாக
வாசிக்கமுடிந்தது. அதில் ஏன் வெவ்வேறுபேர் வந்து கீதையைப்பற்றிக் கேட்கிறார்கள் என்று
நானே யோசித்தேன். அப்போதுதான் அது ஒருவரின் ஒரு கேள்விக்கான பதில் அல்ல, பலருடைய பல
கேள்விக்கான பதில்களின் தொகுப்பு என நீங்கள் இந்நாவலில் சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்தது.
அசுரர் முதலிய ஒடுக்கப்பட்டோரிடம் போராடுங்கள், உங்கள் உரிமைகளை வெல்லுங்கள், எது தேவையோ
அதை அடையுங்கள், செத்தால் சொர்க்கம் வாழ்ந்தால் நல்ல வாழ்க்கையும் புகழும் என அது சொல்கிறது.
அதே நூல்தான் பரமஹம்சரைப்போல எதிலும் ஒட்டாமல் வாழ்வதைப்பற்றியும் சொல்கிறது. ஒரு பகுதி
கர்ணன் என்றால் நேர் மறு எல்லையில் சுகர் இருக்கிறார். எல்லாருக்குமான நூலாக அது இருப்பதனால்தான்
அது அற்புதமான ஒரு ஒற்றுமையை இந்து மதங்கள் நடுவே உருவாக்கியது.
பெருமாள்