வேள்விகளை பயனற்றவை எனச் சொல்லும் அறிஞர் இன்று நிறைந்துள்ளனர். மறுப்பாளர், ஐயத்தார், இருமையாளர், உலகியலார். அவர்கள் அனைவரிடமும் எளிய வேதியனாகிய எனக்கு சொல்வதற்கொன்றே உள்ளது. அறிந்து தெளிந்து இதை ஆற்றவில்லை நாங்கள். அவைநின்று இதை நிறுவவும் எங்களால் இயலாது. இது அறிவெழும் முன்னரே எங்கள் மூதாதையர் இயற்றிய சடங்கு. இதை ஆற்றுகையில் அறிவிலாதிருப்பதன் மாபெரும் விடுதலையை நான் அடைகிறேன்
.—என்று ஜீமுதர் சொல்லும் இடம் முக்கியமானது. வேள்விகளை மட்டுமல்ல பூசைகளையும் அவ்வாறு சொல்கிறார்கள். அப்பாவுக்கு மகன் ஊட்டும் துண்டு உணவு மாதிரித்தான் அது. வேறு எவ்வகையில்தான் நாம் திருப்பி அளிக்கமுடியும் என்று ஜீமுதர் கேட்கிறார். அது ஒருவகை இன்னொசென்ஸ்தான். ஆனால் அந்த அறியாமை ஒரு பெரிய நிறைவை அளிக்கிறது. மூளையில்லாமல் இருந்தால் சில விஷயங்களை அறியமுடிகிறது. அவை மூளையால் முட்டி அறிபவற்றைவிட மேலானவை என நினைக்கிறேன். இமைக்கணத்தில் இந்த இடம் எனக்கு முக்கியமானது. வேதாந்தநூலாக இதை வாசித்துவந்தமையால் வேதவேள்விகளையும் பூஜாதிகர்மங்களையும் நிராகரிப்பீர்கள் என நினைத்தேன். கீதை அதையெல்லாம் நிராகரிக்கவில்லை என்றாலும் பல வேதாந்திகள் கீதையையே அதையெல்லாம் நிராகரிப்பது என்று சொல்லி விளக்கமளிப்பதை நான் கேட்டிருக்கிறேன். அத இடம் எனக்கு மிகவும் முக்கியமானதாகத் தோன்றியது
சாரதி