Thursday, May 17, 2018

அறிதல் ஆதல்




ஜெ


அறிவென அதை கொண்டவர் அதன் எல்லையின்மை கண்டு அஞ்சி எல்லைக்குள் வந்து ஒடுங்கிக்கொள்கிறார். வாழ்வென அதை கொண்டவர் ஒவ்வொரு கணத்திலும் அதன் முடிவிலா திகழ்தலை உணர்ந்து ஆமென்று அமர்ந்திருக்கிறார்

சென்ற காலங்களில் இந்த வரியை நான் பலமுறை அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். வேதாந்தத்தை நவவேதாந்தப்பள்ளிகளிலிருந்து உணர்ந்தவர்கள் பலர் ஒருகட்டத்தில் மூளை சலித்து ‘ஒண்ணுக்குமே அர்த்தமில்லீங்க. எல்லாத்தையும் விட்டுட்டு சும்மா இருக்கிறதுதான் சரி’ என்று சொல்வார்கள். அவர்கள் முன்பு எதைப்பழகினார்களோ அதுக்குள் சென்றுவிடுவார்கள். இந்தவரியை வாசித்தபோதுதான் அதை சரியாக உணரமுடிந்தது. அதை ஒவ்வொருகணமும் வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளாமல் அறிவது என்பது பயனற்றது

ரகுநாதன்

அன்புள்ள ரகுநாதன்,

இரண்டுநாட்களுக்கு முன் இதேபதிலை நான் ஒரு புதுநண்பருக்குச் சொன்னேன். கிளர்ச்சியூட்டும் புதிய கருத்தாக வேதாந்தத்தை அறிவது, அதை வெறும்நிலைபாடாகக் கொள்வது பயனற்றது. அதன் பயனின்மை உணரப்படும்போது மீண்டும் பழைய இடத்துக்கே திரும்புகிறோம். அது அன்றாட அனுபவமாக ஆகவேண்டும்

ஜெ