Friday, May 25, 2018

வாசித்துத்தீராத புத்தகம்




அன்புள்ள ஜெ

இமைக்கணத்தை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். எத்தனை வாசித்தாலும் தீராமல் ஏராளமாக எஞ்சியிருக்கிறது. இதற்குமுன்னால் நாவலின் கட்டமைப்பில் சோதனைகள் செய்த நாவல்கள் சிலவற்றை வாசித்திருக்கிறேன். அவை எல்லாமே உள்ளடக்க விஷயத்தில் சாதாரணமானவை. அந்த உள்ளடக்கத்துக்கு நாம் பழகிவிட்டால் அதைப்புரிந்துகொண்டுவிடமுடியும். உடனே நாவல் நம் முன் துண்டுதுண்டாக கிடக்கும் அதன்பின்னர் யோசித்தால் நாவலை நாம் ஒரு சாதாரணமான நேர்கோட்டு நாவலாகவே வாசிப்போம். இமைக்கணம் உள்ளடக்கமும் பல அடுக்குகள் கொண்டதாக உள்ளது. கீதை என்ற நூலின் தத்துவத்தை பத்து வெவ்வேறு கோணங்களில் சென்று அணுகுவது. பத்தும் பத்து பார்வை. பத்துக்கும் ஒரே போன்ற கட்டமைப்பு. அதுதான் காவியத்தன்மை. கர்ணன் முதல் சுகன் வரை. ஒவ்வொருவருக்கும் ஒரு முக்தி. ஒருவகை விஸ்வரூபதரிசனம். இந்த பத்துக்கோணங்களும் ஒரு கதைக்குள் அடக்கம். அந்தக்கதையின் நாயகன் யமன். அவன் கண்டடைவது முற்றிலும் வேறான ஒரு முக்தி. இப்படி இந்நாவலைப்புரிந்துகொண்டு அடுக்கிவிட்டால் உடனே இதன் உள்ளடுக்குகள் விரிய ஆரம்பிக்கின்றன. ஒவ்வொரு வரியும் வெவ்வேறு அர்த்தங்களை அளித்துக்கொண்டே இருக்கிறது. வாசித்துத்தீராத புத்தகம் என்றால் இன்றைக்கு இமைக்கணம்தான்

ஜெகதீஷ்