ஜெ அவர்களுக்கு,
நான் முக்கியமான ஒரு சித்தரை
சிலநாட்கள் அருகே இருந்து பார்த்த பாக்கியம் கொண்டவன். அவரை என் நண்பர்கள் எல்லாரும்
கிறுக்கன் என்பார்கள். அவரை வந்து வணங்கும் பக்தர்களை கிண்டல்செய்வார்கள். ஒரு ஞானிக்கும்
கிறுக்கனுக்கும் என்ன வேறுபாடு என்று கேட்டால் எளிமையாகச் சொல்லமுடியாது. ஆனால் அதை
உதங்கர் கேட்கிறார். உதங்கர் அதைக்கேட்பதில் அர்த்தம் உண்டு. ஏனென்றால் உதங்கர் அறிவின்
வழியை கடைப்பிடிப்பவர். அவர்கலுக்கு ஞானிகளின் களங்கமில்லா நிலையைப்புரிந்துகொள்ளமுடியாது.
பித்தனுக்கும் மெய்யனுக்கும் பேசுநிலை ஒன்று. விழிகள் வேறுவேறு.
என்ற வரி மிகத்தெளிவாக வேறுபாட்டைச்
சொல்லிவிடுகிறது. ஏன் அந்த வேறுபாடு அமைகிறது?
மெய்யிலமைந்தோன் துயரற்றவன். காண்கையிலும் காணாதமைந்தவன். அறிந்திருந்தாலும் கனிந்தவன்.
அறிந்திருந்தாலும் கனிந்தவன்
என்ற வரி. நீங்கள் யோகி ராம்சுரத்குமாரிடம் கேட்டது இதுதான் இல்லையா? அவர் ஏன் எல்லாரையும்
மன்னிக்கிறார் என்று. அவர் அதற்கு இதே பதிலைத்தானே சொன்னார்?
அனைத்தையும் பொறுத்தருள்வாள் அன்னை. மானுடக் குலமனைத்தையும் பொறுத்தருள மானுடர் சிலர் என்றுமிருந்தாகவேண்டும்.
என்றவரியை வாசித்ததும் கண்களில்
நீர் வந்துவிட்டது
எஸ்.தனுஷ்கோடி