Tuesday, May 29, 2018

இறைப்பாடல்




அன்புநிறை ஜெ,
 இமைக்கணம் 47 தலைப்பு இறைப்பாடல் என்றதுமே சிகரத்தின் உச்சியில் பொன் சுடர் ஏற்றும் தருணம் எனப் புரிந்தது.
 இமைக்கணம் காலத்தை சுழியென வளைத்து முன்பின்னற்ற வடிவில் ஒவ்வொருவராய் வந்து தத்தமது அறக்குழப்பங்களை கடக்க வாய்ப்பளித்துக் கொண்டிருந்தது. அவ்வரிசையில் பார்த்தன் கனவின் வழி விஷாத யோகத்தில் நுழைந்து, கிருஷ்ணார்ஜுன இணை கனவொன்றின் வழி ரதத்தை குருஷேத்திரத்தில் நிறுத்தி கீதை துவக்கிய கணம் -
ஒவ்வொரு சடங்காய் முடிந்து, திரை விலகி, இறைமுன் லட்ச தீபம் காட்டும் நிமிடம் போல பெரு அரங்கில் ஒவ்வொரு  திரையாய் விலகி, துணை பாத்திரங்கள் களம் அமைக்க, உரிய தருணத்தில் இசை முழங்கி நிற்க, திரை மாறி எழும் உச்சதருணத்துக் கதைத் தலைவன் போல ஒரு நுழைவு பகவத் கீதையெனும் இறைப்பாடலுக்கு. கீதைக்குரிய சொல்லாட்சி, வேறெந்த சொற்களாலும் சொல்லிவிட இயலாதெனும் வண்ணம் வந்து அமைந்து கொள்ளும் வாசகங்கள், உங்கள் வாயிலாக எங்களை வந்தடைகிறது. இன்றைய இமைக்கணத்தில் வரும் ஞான-விஞ்ஞான யோகம்,  "ஸாதிபூதாதிதைவம் மாம் ஸாதியஜ்ஞம் " -"Existential, Hypostatic and sacrificial aspects "என்று குரு நித்யாவின் உரையில் நேற்று வாசித்தேன்.
புடவிமெய்மை, தெய்வமெய்மை, வேள்விமெய்மை என்றெழுதி விட்டீர்கள். வார்த்தைகள் இறைப்பாடலுக்கென வந்தமர்கின்றன.சத்வ, ரஜோ, தமோ நிலைகளுக்கு நன்னிலை, வெல்நிலை, உறைநிலை; நிறையியல்பு, வெல்லுமியல்பு, நில்லுமியல்புக்கு இன்னுமொரு செறிவான மாற்று.
 மிக்க அன்புடன்,
சுபா இதே தருணத்தில் குரு வியாச பிரசாத் அவர்கள் பகிர்ந்து கொண்ட ஒலிப்பதிவுகள் மற்றும் குறிப்புகளின் துணையோடு குரு நித்ய சைதன்ய யதியின் கீதையை வாசிக்கக் கிடைத்திருப்பது பெரும் பேறு.