Monday, May 21, 2018

உடல்பழிப்பது




ஜெ

நாங்கள் ஒரு சிறிய வழிபாட்டுக்குழுவாக கொஞ்ச வருடங்களுக்கு முன்பு அகஸ்தியர் வாரவழிபாட்டு மன்றம் என்ற ஒன்றை நடத்திவந்தோம். அதில் சித்தர் பாடல்களை வாசிப்போம். இரண்டு மூத்தவர்கள் அதற்கு விளக்கம் சொல்வார்கள். அப்போதுதான் ஒருநாள் எல்லாரும் அமர்ந்து படித்துக்கொண்டிருக்கும்போது  பட்டினத்தார் பாடல்கள் வந்தன. அதில்  முள்ளும் கல்லும் முயன்று நடக்கும் உள்ளங் காலைப் பஞ்சென உரைத்தும் வெள்ளெலும் பாலே மேவிய கணைக்கால் (
துள்ளும் வரால் எனச் சொல்லித் துதித்தும் என ஆரம்பிக்கும் பாடலை படித்தோம். சித்தர் பெண்ணின் உடலே தவத்துக்கு எதிரானதாகப் படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னார். ஒரு தோழி ஆண் உடம்பு அப்படிக் கிடையாதா என்றார். ஆண் உடம்புக்கு கடைத்தேற்றம் உண்டு என்றவகையிலே படைக்கப்பட்டிருக்கிறது. அது நீந்தும் மீன். பெண் உடம்பு சேற்றுமீன் என்று அவர் சொன்னார். பட்டினத்தாரே

தோலும் இறைச்சுயும் துதைந்து
சீப்பாயும்  காமப் பாழி கருவிளை கழனி
தூமைக் கடவழி தொளைபெறு வாயில்
எண்சாண் உடம்பும் இழியும் பெருவழி
மண்பால் காமம் கழிக்கும் மறைவிடம்
நச்சிக் காமுக நாய் தான் என்றும்
 இச்சித் திருக்கும் இடைகழி வாயில்
திங்கள் சடையோன் திருவருள் இல்லார்
தங்கித் திரியும் சவலைப் பெருவழி
புண் இது என்று புடவையை மூடி
உள்நீர் பாயும் ஓசைச் செழும்புண்  
மால் கொண்டு அறியா மாந்தர் புகும்வழி

என்றெல்லாம்தான் பாடியிருக்கிறார் என்றார். எனக்கு அது பெரிய அதிர்ச்சி. அப்போதுதான் நான் கருப்பைப்பிரச்சினைகளால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தேன். மனம் மிகவும் சோர்ந்திருந்தது. ஒவ்வொருநாளும் ரத்தம் பார்ப்பதே பெரிய அவஸ்தை. நம் உடலை நாமே வெறுப்பது அது. அந்த வரிகளை வாசித்ததனால் பதினைந்துநாள் படுத்தேவிட்டேன்.  அதன்பின்னர் பிருந்தாவனம் போயி ராதையாகவே மாறினேன். என் மனசு சரியாகியது. எங்கள் குடும்பத்து ஆசிரியர் அதற்கு வழிகாட்டினார்.


அதைத்தான் நான் அன்றைக்கு நினைத்துக்கொண்டேன். அப்போது வந்த வெறியும் இதேதான்

இவர்களின் வீடுபேறு எனக்கொரு பொருட்டே அல்ல. என்னிலெழும் பெருங்காமம் இல்லையேல் இப்புவி எனக்கென்ன பொருட்டு? அவர்கள் சென்றடையும் அவ்வீட்டின்பொருட்டு நான் ஏன் இதை கைவிடவேண்டும்?என்று திரௌபதி கேட்கிறாள். நான் நினைத்தது வேறு இவர்களையெல்லாம் பெற்று பாலூட்டி வளர்க்கவேண்டும். அதன்பின் இவர்கள் நம்மை சாக்கடைக்குழி என்று பழிப்பதையும் கேட்டு உட்கார்ந்திருக்கவேண்டுமா? இந்த கொள்கை சரியாகவே இருந்தாலும் இது நமக்கு வேண்டாம் என்றேன். அந்தச் சித்தர் சிறகு முளைத்தால் புழு பூச்சியாக ஆகிவிடும். அது அழகானது. ஆனால் அது பிறந்த இடம் மலமோ சாணியோதான் என்று சொன்னார். அன்றைக்கே தலைமுழுகினேன். பிருந்தாவனத்திலே நீ ரத்தத்தை பாலாக்கியதுபோல துக்கத்தை பக்தியாக்கு பெண்ணே என்று ஒரு பாட்டைக் கேட்டேன். அதுதான் வழி என்று தெரிந்துகொண்டேன். இமைக்கணம் வாசிக்கும்போது அதுதான் கிருஷ்ணன் ஆண்டாளுக்கும் சொல்லியிருப்பார் என்று தோன்றியது

ஆர்