Tuesday, May 8, 2018

வெண்முரசு- கீதை





      
அன்புள்ள ஜெயமோகன்

வெண்முரசு நீங்கள் எழுதும் வேகத்திற்கு படிக்க இயலவில்லை. புருஷமேத யாகத்தில் யாதவ கிருஷ்ணரின் வேதமுடிபு விவாத களத்தில் இருக்கிறேன். கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் புரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்.

மந்திர உச்சாடனங்கள் ஓசையின் பாற்பட்டதாக இருக்கும் போது அவற்றை பொருள் அறிந்து சொல்ல வேண்டும் எனக் கூற இயலுமா?.  

ஞானத்தின் மூலம் செல்லும் தூரத்தை விட பக்தியின் மூலமே அதிகம் செல்ல முடியும் என்றல்லவா கீதை சொல்கிறது. திருஞானசம்பந்தர் "வேதவேள்வியை நிந்தனை செய்துழல் ஆதமில்லி அமணொடு தேரரை வாதில் வென்று அழிக்கத் திருவுளமே..." என்கிறார்.இங்கு வேத மறுப்பு நடை பெறவில்லை என்று உணர முடிகிறது.ஆனால் போகிற பாதை மிகுந்த பின்னல் வலை யாகத் தெரிகிறது.கீதை வேதத்தின் சாரம் என்றால் அது எளிமையாக அல்லவா இருக்க வேண்டும்!!

அன்புடன்
இராம்.இராஜேஷ்கண்ணன்

அன்புள்ள இராஜேஷ்,

நீங்கள் கேட்டதற்கான விடையே அந்த அத்தியாயங்களில் பேசப்பட்டுள்ளது. பொருளறியாமல் ஓசையின்பாற்பட்டு ஓதினால் போதும் என்பது ஒரு தரப்பு. அறிதலே மெய்மையை நோக்கிக் கொண்டுசெல்லும் என்பது இன்னொரு தரப்பு. முதல்தரப்பு கர்மகாண்டத்தையும் இரண்டாம்தரப்பு ஞானகாண்டத்தையும் முன்வைக்கிறது. இவற்றுக்கிடையேயான விவாதம் மூவாயிரமாண்டுகளாக நிகழ்கிறது. நீங்கள் எதை ஏற்கிறீர்கள் என்பது நீங்கள் எவர் என்பதைப்பொறுத்தது

கீதை ஞானத்தை நிராகரித்து பக்தியை வலியுறுத்தவில்லை. அப்படியென்றால் அதிலுள்ள தத்துவத்திற்கு அர்த்தமே இல்லை. அது ஒரு ஒருங்கிணைவுநூல். ஞானம் கர்மம் ,தத்துவம் பக்தி என அனைத்தையும் ஒருங்கிணைத்து அவற்றுக்கான இடங்களில் அமைப்பது

வேதத்தின் சாரம் கீதை. ஆனால் அது எளிமையானது என எவர் சொன்னது? அவ்வாறு இருந்திருந்தால் சங்கரர், ராமானுஜர், மத்வர் உள்ளிட்ட பேரறிஞர்களின் உரைகள் எதற்காக?

பெரும்பாலும் விடைகள் எளிதானவைதான். சென்றடையும் வழிகள் சிக்கலானவை. விவாதம் அவற்றைப்பற்றித்தான்

ஜெ