அன்புள்ள ஜெ,
இமைக்கணம் நாவலை வாசிக்கும்போது வண்ணக்கடல் நினைவுக்கு வந்தது. வண்ணக்கடலை ஆங்காங்கே வாசித்தேன். அதோடு சொல்வளர்காடு நாவலையும் இணைத்துக்கொள்ளலாம் என்று தோன்றியது. இந்த மூன்று நாவல்களும் ஒரு அம்சத்தில் ஒரு நேர்கோட்டில் வருகின்றன. ஒன்றுக்கொன்று சம்பந்தம் கொண்டிருக்கின்றன. வண்ணக்கடலில் இளநாகன் கிளம்பிச்செல்லும் வழியில் ஆறுதர்சனங்களையும் சைவம் உட்பட மரபினரையும் சமணர்களையும் சந்திக்கிறான். அந்த அத்தியாயங்கள் வழியாக அன்று நாடெங்கும் எப்படி தர்சனங்கள் பலவேறு ஞானிகளால் பரப்பப் பட்டன என்ற சித்திரம் வருகிறது
அதன்பிறகு சொல்வளர்காடு நேரடியாகவே வேதாந்த சிந்தனைகள் எப்படி உருவாயின என்று சொல்கிறது. அதாவது தர்சனங்களுக்கு அடுத்தகாலகட்டம். வேதாந்தம் உபநிஷத்கள் வழியாக வளர்ந்துவந்த காலகட்டம். அதில் எல்லா தரப்புகளும் பேசப்படுகின்றன. யுதிஷ்டிரர் அதன் எல்லா தரப்புகள் வழியாகவும் செல்கிறார். அந்த நாவல் இந்தியாவின் உபநிஷதகாலகட்டத்தின் காட்சி
அதன்பின் இமைக்கணம். இது உபநிஷத காலகட்டத்துக்குப்பின்னால் வந்த சிந்தனைகளின் தொகுப்பு. அதாவது வேதாந்தத்தின் வளர்ச்சிக்குப்பின்னால் அது மற்ற ஞானமார்க்கங்களை எல்லாம் தன்னுடன் இணைத்துக்கொண்டபோது உருவானது.
இந்த மூன்றுகாலகட்டங்களிலும் என்னென்னவகையான சிந்தனைகள் பேசப்பட்டன அவை எவ்வாறெல்லாம் மோதின பின்னர் ஒன்றாகிவிட்டன என்பதை இந்த மூன்றுநாவல்களும் காட்டுகின்றன. வேதாந்தமாக இல்லாமல் கதைகள் வழியாகவே எல்லாவற்றையும் ஒரு பெரிய சித்திரமாக விரித்துச் சொல்லிவிட்டன என நினைக்கிறேன். இந்தியாவின் தத்துவஞான வளர்ச்சியை வாசிப்பவர்களுக்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பு இந்த மூன்றுநாவல்களும்
முருகவேல் ராமசாமி