Tuesday, May 15, 2018

யானை




ஜெ


ஒரே உவமையில் உதங்கரின் கேள்விக்கு கிருஷ்ணன் பதில் சொல்கிறார். யானையைப் பேசிப்பேசி யானையே கிடையாது என்று சொல்லவைப்பதுதானே அய்யா உனது வேதாந்தம் என்று உதங்கர் கேட்கிறார்.

ஆமாம் அப்படித்தான் என்றுதான் கிருஷ்ணன் பதில் சொல்கிறார். ஆனால் அதை படிநிலைகளாகச் சொல்கிறார். அந்தப்படிநிலைகள் முன்னரே இமைக்கணத்திலே வந்தவை. கீதையிலிருந்து எடுத்துக்கொண்டவை

யானையை பெரிதென்றும் கரியதென்றும் கொம்பென்றும் துதிக்கை என்றும் இறப்பென்றும் காண்பவர் அதை அச்சமென்றே அறிவர்இது சாங்கியம்

யானையை விலங்கென்று காண்பவனே அதை ஆள்கிறான் – இது கர்ம யோகம்

காடென்று காண்பவன் அதற்கு நோய்நீக்குகிறான்- ஞான யோகம்

பாறையென்றும் முகிலென்றும் அதை காண்பவன் அதை சொல்லில் நிறுத்தும் கவிஞனாகிறான்- இது மோக்‌ஷ சன்யாச யோகம்

துதிக்கை வண்டும் யானையும் ஒன்றென்று உணர்ந்தவனே முற்றிலும் அச்சம் ஒழித்து யானையை அறிபவன் – விபூதியோகம்

யானையை நாம் அறிவது தப்பு. அதை நாமறியும் யானை அல்ல என்று அறிவதுதான் வேதாந்தமே. அதை எப்படி அறிவது என்று சொல்வதுதான் கீதை

சுவாமி