Monday, May 7, 2018

தோழமை யோகம்--

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு


வணக்கம் .வெண்முரசுநூல் பதினேழு-‘இமைக்கணம்’-40  கிருஷ்ணை (திரௌபதி ) - இளைய யாதவர் கிருஷ்ணன் உரையாடல்கள்  மிக அருமை .திரௌபதி சொல்வது  - "என்னுடன் இருந்து நீ வளர்ந்தாய். நீ என் உடன்பிறந்தான் அல்ல. என் காதலனும் அல்ல. என் தோழன். உடன்பிறந்தானைவிட காதலனைவிட அணுக்கமானவன். ஒவ்வொருநாளுமென உன் செய்திகள் என்னை வந்தடைந்தன. உன்னுடன் இணைந்து அவையனைத்தையும் நானும் நிகழ்த்தினேன்." .ஜெயமோகன் அவர்களே இது அதிகம் பரிச்சயம் இல்லாத  ஒரு யோக முறையாகும் .பலரும் அறிந்த பக்தி யோகம் ,கர்ம யோகம் ,ஞான யோகம் ,ராஜ யோகம் போன்றன்று இது .இதன் பெயர் தோழமை யோகம் .ஆம் பல வருடங்களுக்கு முன்பு தோழமை யோகம் என்ற பெயரில் ஒரு மொழிபெயர்ப்பு புத்தகப்பிரதி படித்திருக்கிறேன் ( மொழி பெயர்ப்பு -மூதறிஞர் ராஜாஜி என்றே ஞாபகம் )
.               

இந்த தோழமை யோகத்தில் நாம் அதீதமாக நேசிக்கும் ஒருவரை ஆத்ம நண்பனாக கொண்டு அவருடன் மனதில் உரையாடுவது . அது மட்டும் அல்ல தினமும்  காலை விழித்தெழுவது முதல் அன்றாடம் செய்யும் பணிகளில் அந்த ஆத்ம தோழனை /தோழியை உசாவி கருத்துக்கள் பரிமாறி கொண்டு காரியங்கள் /கடமைகள் செய்வது .இத்தகைய உணர்வுகள் காமம் ,காதல் கடந்தது .இதன் பிறிதொரு பரிமாணத்தை வெண்முரசு வெண் முகில் நகரம் -58 இல்  விரிவாக எடுத்துரைத்த உங்கள் சொல்லாட்சி இதோ "   நீங்கள் துரியோதனரை நேற்று கவனீத்தீர்கள் அல்லவா?” என்றான் கிருஷ்ணன். காந்தாரி " ஆம் .அவளை (திரௌபதி)அவனால் ஒருகணமும் நெஞ்சிலிருந்து நீக்கமுடியாது கண்ணா. .”“அவர் காதல்கொண்டார் என நினைக்கிறீர்களா?” என்று கிருஷ்ணன் கேட்டான். “அது காதலல்ல. ஆம், அதை அன்னையென நான் அறிவேன். காதலுக்கு அப்பால் ஒன்றுள்ளது. அது…” என்று குழம்பிய காந்தாரி தன் மேலாடையை இழுத்து தோளிலிடும் அசைவின் வழியாக உறைந்து நின்ற சொற்களை மீட்டுக்கொண்டுஅதை வழிபாடு என்பதே பொருத்தம்என்றாள். கிருஷ்ணன் அவளை நோக்கியபடி விழி அசையாமல் அமர்ந்திருந்தான். “கண்ணா, மிகமிக அரியதோர் உணர்வு இது. பெண்ணை தாய்மை வழியாகவோ காமம் வழியாகவோதான் ஆண்கள் அணுகுகிறார்கள், அறிகிறார்கள். என்றோ எவரிலோ அதற்கப்பால் ஒன்று நிகழ்கிறது. அந்த ஆண் ஒரு பெண்ணை வழிபடுகிறான். அவள் காலடிமண்ணையும் போற்றும் பெரும் பணிவை அடைகிறான்என்றாள் காந்தாரி..“அது மிக ஆபத்தானது யாதவனே. ஏனென்றால் அதன் அரியதன்மையாலேயே அது புரிந்துகொள்ளப்படாது போகும். அவ்வுணர்வை அடைபவனுக்கேகூட அதை விளங்கிக் கொள்ள முடியாமல் ஆகலாம்காந்தாரி தொடர்ந்தாள். கிருஷ்ணர் பதில் கூறும் விதமாக  “உங்கள் மேல் இதே வழிபாட்டுணர்வுகொண்ட ஒருவரை நீங்கள் அறிவீர்கள். உங்கள் இளவல் சகுனிஎன்றான் கிருஷ்ணன். அதிர்ந்து உடலில் மெல்லிய விரைப்பு எழ இல்லை என்பது போல தலையாட்டிய காந்தாரிஆம்என்றாள். “என்னால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாத ஒன்று அது. நான் எளியபெண். இளமையில் என் பாலைநகரின் ஆற்றல்மிக்கபெண்களில் முதன்மையானவளாக இருந்தேன். ஆனால் இளையோனின் விழிகளில் நான் காணும் என் வடிவம் என்னை அச்சுறுத்துகிறது.” –


ஆம் ஜெயமோகன் அவர்களே இங்கு உற்ற தோழனாக /வழிபடு தெய்வமாக ஒரு மானிடரை திரு உரு மாற்றம் செய்து செய்யும் செயல்கள் யாவும் அதன் பெயரிலே புரிதல் ஆகும் .இந்த வகை யோகத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால் மானிட இனத்திற்குரிய கீழான குணங்கள் எதுவும் இல்லாதா அப்பழுக்கற்ற குணநலன்கள் கொண்டவராய் அந்த ஆத்ம அணுக்க தோழரை /தோழியை மனதில் சித்திரம் எழுப்புவது கடினமான செயல் தான்ஹயக்ரீவர் ஸ்தோத்திரத்தில் வரும் ஒரு சொல் - நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆம் தூய்மையான ஸ்படிகம் -CRYSTAL CLEAR - இது தான் அந்த அணுக்க தோழர் /தோழியின் மெய்மை தோற்றம் .இத்தகையதொரு உறவை தான் கிருஷ்ணன் மீது திரௌபதி கொண்டிருந்தாள் .ஆம் உற்ற தோழனாக - இதற்க்கு விளக்கமாக வெண்முரசுவில் கிருஷ்ணன் - திரௌபதி சந்திப்புகளை நினைவு கூர்ந்தால் போதும் .


காட்சி ஓன்று  - நூல் ஆறு - வெண் முகில் நகரம் 48 அரசி, இவ்வினாவுக்காக என்னை பொறுத்தருள்கஎன்றான் கிருஷ்ணன். “பாரதவர்ஷத்தை ஆள தாங்கள் விழைவது எதற்காக?” திரௌபதிமுக்தியை நாடும் முனிவரிடம் இப்படியொரு வினாவை கேட்டால் அவர் என்ன சொல்வார்?” என்றாள். “அது அவரது இயல்பு என்று. அவர் எய்யப்பட்டுவிட்ட அம்பு என்று. அதுதான் என் மறுமொழியும். யாதவரே, கருவறைக்குள் பார்த்திவப்பரமாணுவாக எழுவதென்பது அம்பு ஒன்று நாணேற்றப்படுவதே. அம்பின் இலக்கை தொடுக்கும் கைகள் முடிவுசெய்துவிட்டன.”மேலும்  தொடர்கையில்  திரௌபதி. “அங்கு நீங்கள் பங்குபேசுகையில் சொல்லாடல் எத்திசையில் சென்றாலும் இறுதியில் அது பாதி நாட்டை அடைவதை நோக்கித்தான் வரும் என அறிவேன். எனக்கு அஸ்தினபுரி வேண்டியதில்லை. மறுபக்கம் யமுனைக்கரையில் யாதவர் சூழ்ந்த நிலத்தை கேட்டுப்பெறுக! அங்கே நானே எனக்கென ஒரு நகரத்தை அமைக்கவிழைகிறேன்.” கிருஷ்ணன்அஸ்தினபுரியின் மணிமுடி என்பது ஓர் அடையாளம். ஒரு பெருமரபு…” என்றான்.“ தேவயானி அசுரகுல குருவின் மகள். நெருப்பில் எழுந்து வந்த தபதியுடன் என்பெயர் இணைக்கப்படுவதையும் விரும்பவில்லை. நான் முதலாமவள். நிகரற்றவள். குடிகளிடையே நான் அவ்வாறுதான் அறியப்படவேண்டும்என்றாள் திரௌபதி.ஆம் கிருஷ்ணரிடம் பாண்டவர்களுக்குரிய பங்கு நிலத்தை முடிவு செய்து இந்திரப்பிரஸ்தத்தை கட்டி எழுப்பும் கனவை முதன் முதலில் தோழன் கிருஷ்ணரிடம் தான் கூறுகிறாள் .


காட்சி இரண்டு -   வெண் முரசு நூல் பத்துபன்னிரு படைக்களம் – 25 திரௌபதி இளைய யாதவரிடம்ராஜசூயம் ஷத்ரியர்களுக்கு மட்டுமே உரியது என்கிறது ஆபஸ்தம்பசூத்திரம்என்றாள். “ஆம்என்று தருமன் இடைபுகுந்தார். “அதைத்தான் நான் சொல்லிக்கொண்டு வந்தேன். அதை நாம் இயற்ற இங்குள்ள ஷத்ரியர் ஒத்துழைத்தார்கள் என்றால் நாம் ஷத்ரியர்கள் நடுவே சக்ரவர்த்திகளாவோம். இல்லையென்றால்  ஆசுரகுடிகளைத் திரட்டி அதை செய்வோம். அவர்கள் அனைவருக்கும் வேள்வியில் பீடம் அளிப்போம். ஷத்ரியர் முடிந்தால் நம்மை எதிர்த்து வெல்லட்டும்.” அனைத்தையும் புரிந்துகொண்டு திரௌபதி புன்னகையுடன் கைகளைக் கோத்து சாய்ந்துகொண்டாள்.அர்ஜுனன் சினத்துடன்நாம் பேசிக்கொண்டிருப்பது போரைப்பற்றிஎன்றான். “ஆம், போரை நிகழ்த்துவது அன்னை. நாம் அவர் கையின் படைக்கலங்கள். நாம் செய்வதற்கொன்றுமில்லைஎன்றான் அபிமன்யு. அர்ஜுனன் திரும்பி திரௌபதியை பார்த்தான். தேவலர்ஆம், அவை அரசியின் எண்ணத்தை எதிர்நோக்குகிறது. இவ்வேள்வி அவருக்கும் உவப்புடையதா?” என்றார். திரௌபதியின் முகத்தில் புன்னகை சிற்பங்களில் இருப்பதுபோல நிலைத்திருந்தது. “என் எண்ணத்தையே இங்கே அரசர் சொன்னார்என்றாள். ஆம் உற்ற தோழனான கிருஷ்ணர் மூலமாக ஜரா சந்தன் வதம் ,சிசு பாலன் வதம் நிகழ்த்தி ராஜ சூய யாகம் நடத்தி சக்கரவர்தினியானவள் திரௌபதி .ஆனால் அதற்க்கு விலையையும் கொடுக்க நேரிட்ட்து .அது தான் கணிகர் மற்றும் சகுனியின் சூழ்ச்சியால் அனைத்தும் இழந்து காடேகியது .அங்கும் கிருஷ்ணரே திரௌபதியிடம் அவளின் தவறுகளை - பாண்டவர்கள் பீமன் ,அர்ஜுனன் ,தருமன் முதலியோர் கூட  திரௌபதியிடம்சொல்வதற்கு அச்சப்பட்ட நிகழ்வு கோர்வைகளை விளக்குகிறார் .


காட்சி மூன்று  நூல் பதினொன்றுசொல்வளர்காடு – 43 திரௌபதி சீற்றத்துடன்அவைநடுவே நான் சிறுமைகொண்டு நின்றேன். காத்து நிற்கும் வீரராகிய நீங்கள் எங்கிருந்தீர்கள்?” என்றாள்.இளைய யாதவர்ஆம், நான் அங்கிருக்கவில்லை. அத்தனை விரைவாக அனைத்தும் முடிவாகுமென நான் எண்ணியிருக்கவில்லை. குடிப்பூசலில் எரிந்துகொண்டிருந்த யாதவர்களின் ஊர்கள்தோறும் சென்றுகொண்டிருந்தேன் அப்போது. என் எல்லைகள் மேல் சால்வனின் படை எழுந்த அன்றே அஸ்தினபுரியில் சூது நிகழ்ந்ததுஎன்றார். “அரசி, நான் வெல்லற்கரியவனே. ஆனால் ஊழாலும் அல்ல. நான் மானுடன், தெய்வம் அல்ல.”பொறுப்பேற்றுக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆடல். நீங்கள் தொடங்கியது இது. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தியென்றாக விழைந்தவர் இவர் அல்ல, நீங்கள். ஐவரும் உங்கள் கனவுக்கான பகடைகள் மட்டுமே. நம்மை நம்மைவிட அறிந்தவர் நம் எதிரிகள். உங்களை வெல்லாமல் தன் வெற்றி முழுமையடையாதென்று கௌரவமுதல்வன் அறிந்திருக்கிறான். அரசியலில் வெற்றி என்பது முற்றழிப்பதே. எதிரியைக் கொன்று அவன் பற்களை மாலையெனச் சூடுபவன் வீணன் அல்ல. அவன் அவ்வெதிரியின் குலத்திற்கு அழியாத அச்சுறுத்தலை அளிக்கவிரும்புகிறான். சிறுமையின் சுமைகொண்டு அக்குலம் சுருங்கிச் சிறுக்கவைக்க முயல்கிறான். உங்கள் நிமிர்வை அழிக்காமல் வெற்றியில்லை என்று மூத்தகௌரவன் எண்ணியிருந்தால் அது மானுடநெறிமீறல். ஆனால் அரசுசூழ்தலில் உகந்த வழியே.”“அவைநின்று சொல்லுரைத்துவிட்டீர்கள். உங்கள் கொழுநர் ஐவரையும் அதற்குக் கட்டுப்பட்டவர்களாக ஆக்கிவிட்டீர்கள். அரசி, உங்கள் சொல்லுக்கு நானும் முழுதும் கட்டுப்பட்டவனே. கௌரவர் ஒவ்வொருவரும் தலையுடைந்து களத்தில் மறைவர். குருதியாடி நீங்கள் கூந்தல் முடிவீர்கள். விழிநீரும் கண்ணீரும் விழுந்த களம்வழியாக நடந்து நீங்கள் முடிசூடுவீர்கள். ஐயமே தேவையில்லை, இது நிகழும்.”தருமன்கூரிய சொற்கள், யாதவரேஎன்றார். “ஆம், ஆனால் பிறிதெவரும் அவர்களிடம் இதை சொல்லப் போவதில்லைஎன்றார் இளைய யாதவர்.


ஆம் இத்தகைய உணர்ச்சிகள் மிகுந்த உரையாடல்கள் கிருஷ்ணையிடமும் கிருஷ்ணரிடமும் நிகழ்ந்ததே தோழமையோகத்தின் ஒரு பாகமாகத்தான் நான் கருதுகிறேன் .ஆம் திரௌபதி தனது  வாழ்விலும் தாழ்விலும் கிருஷ்ணரையே அணுக்க தோழராக கண்டாள் .ஆம் அவளின் வழிபடு தெய்வம் வழித்துணைவன் யாவும் இளைய யாதவரே. இந்த தோழமை யோகம் உணர்தல்களுக்கு அரியது .ஆயினும் தங்களின் சொல்லாட்சியால் தெளிவாக வெண் முரசு வாசகர்கள் அறிந்து கொள்ளும் வகையில் விளக்கங்கள் எழுதியதற்கு நன்றி .இந்த யோகத்தை சில வருடங்கள் வாழ்வியல் நடைமுறையாக பழகியதால் தான் என் மனதில் எழுந்த உணர்ச்சி சித்திரங்களை எழுதியுள்ளேன் .
நன்றி ஜெய மோகன் அவர்களே !
தி.செந்தில்
ஸ்ரீவில்லிபுத்தூர் .