Thursday, May 10, 2018

கிருஷ்ணையாக திரௌபதி
கிருஷ்ணனிடம் , நீ யாராகவேணாமாலும் இருந்து விட்டு போ , கண் நிறைந்த அழகும் மனம் நிறைந்த இனிமையாகவும் நானுன்னை அனுபவிப்பவதே போதும் என்று கிருஷ்ணையான திரொளபதி புலங்கிதமடைந்து சொல்லும் வார்த்தைகள் அழகே!.
            
அவள் 'யாராகயிருந்தாலும்' என்று விளித்ததையே தான் கர்க்கரும் , தௌம்யர் முதலிய ரிஷி கணங்கள் விஸ்வரூப தர்சனமாகக் கண்டு , அவளைப்போல கண்ணனின் பேரன்னையான தர்சனத்திற்குப் பிறகு , தொடுமிடத்தில் அருகிலேயேயுலேன் என்னுமாப்போல சுலபனாய் கிடைத்தது போலன்றிக்கே , ஆற்றிலும் மணலிலுமாய் அஞ்சி புதைந்து அழல் அடங்கிய பிறகே அவனையடைந்து  அச்சம் தவிர்கின்றனர் என்பதை பேரன்னையாக  தங்களுக்குள்  கருக்கொண்டு  பாலமுதமாக சுரந்ததையே நாங்கள் அனுபவித்தோம் என்று நினைக்கிறேன்.

திரொளபதியிடமிருந்து விடுபட்ட கணையாழியே , கிருஷ்ணனின் அடையாளமாக முனிக்கணங்களிடமைந்து ஆகுதியாயிற்று என்றே நினைக்கிறேன். இந்நிகழ்வுகள் , திருக்கோளூர் பெண்பிள்ளை இரகசியம் என்னும் வைணவ இலக்கியத்தில் இராமாநுஜர் ,வைத்தமாநிதி எம்பெருமான் சயனிக்கும் திருக்கோளூரிலிருந்து புறப்படும் ,ஞானம் விஞ்சிய ஒரு  பெண்பிள்ளையானவாளிடம் அவ்வூரை விட்டு புறப்பட்ட தற்க்கான காரணம் கேட்க , அவள் மேற்கோள் காட்டி க் கூறிய பல வார்த்தைகளுக்குள் , 'தேகத்தை விட்டேனோ ரிஷி பத்னியைப் போல ' என்பது தாங்கள் காடடிய காட்சியோடு தொடர்புடையதாக எனக்கு பட்டதை இங்கு பகிர முயன்றுள்ளேன்.


அதாவது கண்ணன் தன் தோழருடன் பிருந்தாவனத்தில் கன்றோட்டச் சென்ற போது ,பசிதாகத்தால் களைப்புற , அப்போது அவ்விடத்தில் சற்று தொலைவில் ரிஷிகள் வேள்வி மேற்கொள்வதறிந்து , தன் தோழர்களை உணவு பெற்று வர அனுப்ப , அவர்களும் சென்று உணவு வேண்ட , வேள்வி முற்றுப்பெறாததால் தர மறுத்ததைக் கூறினர்.

 அதற்கு கண்ணன் பின் வாசல் வழியே சென்று ரிஷிபத்னிகளிடம் கோருமாறுக் கூறினான்.கேட்ட மாத்திரத்திலே அவர்களும் அவனைக் காண ஆவல் கொண்டவர்களாய் உணவுடன் புறப்பட்டு விட்டனர்.அதில் ஒருவர் தன் பர்த்தாவால் தடுக்கப்பட , கண்ணனிடம் மோகித்து தனதுடலை விடுத்து அவனையடைந்தார் என்பதும் பிரசித்தம்.          இதனையே ஆண்டாளும்      வேர்த்துப் பசித்து வயிறசைந்து    வேண்டடிசில் உண்ணும் பொழுதீதென்றுபார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்பத்த விலோசனத் துய்த்திடுமின்.      என்கிறாள்.

 அவிக்கொள்ளும் பரமாத்மாவே இங்கிருக்க , வேள்விச்சடங்கில் இதனை உணராதிருக்கும் முனிக்கணங்கள் மத்தியில் , பெருந்தாயராய் அவனுக்கு உணவிட முயன்ற ரிஷிபத்னிகள் தன் தேகத்தையையும் விட்டது உயர்வே!     
இத்தளத்தில் ஒரு அன்பர் குறிப்பிட்டுள்ளதுப் போல ஆன்மீக உணர்வுகள் இருபாலரிடம் வேறுபட்டே இருப்பதைக் காணலாம். அர்ச்சுனனுக்கு வெகு அணுக்கமாகத் தோன்றினாலும் , திரொளபதியைப் போன்று ,குப்புறக்கவிழும் பிராயத்திலேயே களிப்பாவையாகவும் ,பின் தோழனாகவும் கண்ணன் விளங்கியதை வெகு அழகாகவே சித்தரித்துள்ளீர்கள்.

துகிலுரிக் கட்டத்திலும் நேரிடையாக அவள் துயர் தீர்க்காததை , விருத்தியடைந்த கடன் போல் என் நெஞ்சை விட்டகலாதென்றோ பகர்கிறான் கண்ணனானவன்.

அன்புடன்,
செல்வி அழகானந்தன்
கடலூர்.