Saturday, May 12, 2018

பன்னிரு படைக்களம்



அன்புள்ள ஆசானுக்கு, 
  
        நலம் தானே?  ஒரு வாரமாக பன்னிரு படைக்களம்  வாசித்து இப்போது தான் முடித்தேன் . ஓர் கடல் அலையில் சிக்குண்டு புரட்டி எடுத்து  பின் என்னை கரையில் கிடத்திய  உணர்வுடன் இருக்கிறேன். நாசியிலும் கண்ணிலும் கடல்நீரின் எரிச்சலை உணர்ந்து கொண்டே இருக்கிறேன். அந்த அனுபவத்தை  சொற்களாக  ஆக்காமல் என்னால்  அடங்க முடியாது. 

          பிற  வெண்முரசு  நாவல்கள்  அனைத்தும்  வந்து  மையம்  கொள்ளும்  தருணம் . முதற்கனல்  எழுந்த  அஸ்தினபுரியில்  அந்த  விதை  இங்கு விஸ்வரூபம்   எடுத்து நிற்கிறது . பெண்மையையும்  தாய்மையின்  பிரம்மாண்டத்தையும்  எதிர் கொள்ள முடியாத  ஆணின்  எல்லையை காட்டிவிட்டீர்கள். ஆண் என்று தருக்கி நிற்பவர்களுக்கு பெண்மையின் ஆற்றலை அவள் எல்லையின்மையை அவள்  கொள்ளும்  பேரன்பை  பன்னிருபடைகளத்தில்  உணர முடிந்தது. 

          பிற நாவல்களை போல்  என்னால்   சீராக செல்ல முடியவில்லை  பல பகுதிகளாக வெட்டி வெட்டியே  என்னால் அந்த  முடிவின்மையின் விளிம்பில்  நிற்க முடிந்தது.அன்னை என்று அவள் ஆகி நின்று இந்த உலகத்தை தன் பால் அமுதால் திலைக்கவைப்பதில்  இருந்து கதை தொடங்குகிறது. இறுதியில்  அந்த அன்னை எழுந்து  பேருரு  கொள்வதில்  முடிவடைகிறது. 


      ஓவ்வொரு  இறப்பும்  என்னை   ஆழ சுழல விட்டது . ஜராசந்தன் ,சிசுபாலன் , சுருதை , விப்ரர். ஜராசந்தன் இறப்பில் இருந்து சிசுபாலனும் சிசுபாலன் இறப்பில் இருந்து  துரியனும் அடையும் நிலை. 


   விப்ரரின் இறப்பில் இருந்து திருதராஷ்டிரன் கொண்ட  அறம் மறைந்து தந்தை என்ற உணர்வு மட்டும் எஞ்சி நிற்கிறது. சுருதையின்  இறப்பில் இருந்து  விதுரர் தனக்கும்  இவ்வுலக  வாழ்வுக்கும் ஆன மனநிலை  இலந்து  விடுகிறார். ( அதை அவர் அன்னை இருந்த அறையை  திறக்கச் சொல்வதில் அமைதீர்கள் , எல்லையில்லா காலத்தை நோக்கி அவள் அமர்ந்த அந்த இடத்தில் விதுரரும் சென்று சேரும் படி). 

     பின்  பேரரத்தான் என்ற  தருமன் தருக்கி தன் மனைவியை சூதில் இழக்கும் தருணம் . அவன் தன் உடன்பிறந்தார் முன்பும்  இந்த உலகத்தின் முன்பும்  அவன் தன் ஆண்மையை காட்ட எண்ணினான். தன்னை இகழ்தோரை எல்லாம் அவன்  தன் மதியால் தன் ஆணவத்தால் அடக்கி  காட்ட என்னினான். ஆம் இங்கு தூரியோதனன் , கர்ணன் மற்றும்  கௌரவர்கள்  மட்டும்  பெண்மை முன்பு தங்கள் ஆண்மை  காட்ட எண்ணியவர்கள்  இல்லை தருமனும் தான் பிற பாண்டவர்களும் தான் அவர்கள் வழி இந்த மொத்த ஆண் இனமே தான் . ஆனால் பெண் என்பவள்  அன்னை என்பதை உணர்த்தி  புது வேதம் எழுக என்று கூறி அதை காக்கவும் அவள் அடைந்த சிறுமையை  குருதியால் நனைத்து இங்கு புது யுகம் அவளால் பிறக்க விருக்கிறது. 

   அல்லற்பட்டு அற்றாத அழுத கண்ணீரின்  விழைவை இந்த உலகம் அறியும் கணம் எழுந்துவிட்டது. அது அம்பையில்  விதைக்கப்பட்டு  திரௌபதியில் பெருகி  முழு  உலகையே   எரித்தலிக்கும்  கொற்றவையாக  அமைவதாகுக. 

     ஒரு பித்துபிடித்தவன் போல் இந்த கடிதத்தை எழுதிவிட்டேன். எண்ணில்  எழுந்த உங்கள் சொற்களை நான்  உங்களிடம் சொல்லவில்லை  என்றால் அது என்னை உள் இருந்து கொப்பளித்துக்  கொண்டே இருக்கும். அதை உங்களிடன் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன். 


நன்றி.

பா. சுகதேவ்.

மேட்டூர்.