Wednesday, May 9, 2018

முதற்கனலும் நீலமும்
அன்புள்ள ஜெ,

மீண்டும் நான் முதற்கனல் படித்தேன் கிட்டத்தட்ட ஓரே நாளில் படித்து முடித்துவிட்டேன். ஆஸ்திகன் தட்சனையும் தட்சகியையும் தானமாக பெற்ற கணத்தில் என்னை நானே பார்க்க ஆரம்பித்தேன். களையிழந்த பெண்கள் துள்ளிக்குதிக்காத குழந்தைகள் இருளற்ற நிழல்களற்ற நகரம் ஓவியங்கள் போன்ற மனிதர்கள் அது இருபரிமாண உலகமல்லவா என்று தோன்றியது. நானும் என்னுள் இருந்த காமமெனும் நாகத்தை இழந்துவிட்டேனோ என்று எண்ணினேன். ஆனால் அவ்விடத்தை குரோதம் வந்து எளிதில் கவ்விக்கொள்ளும் என்று தோன்றியது. விருப்புகளும் ஆசைகளுமற்ற காலியான உள்ளத்தில் செயல்கள் அனைத்தும் வீணே என்ற எண்ணம் எழுந்தது. என் இருப்பு பொருளற்றதென்றும் இத்தனை நாள் இங்கிருந்தது வீண் என்றும் தோன்றியது.


பின் பாதியில் விட்டிருந்த நீலம் படித்தேன். முற்றிலும் வேறான ஒன்று. தன்னுடையது என்று ராதை எண்ணிக்கொள்வது தனது மாண்பை மட்டுமே பிறிதெல்லாம் கண்ணனே. ஒருகட்டத்தில் அதுவும் அவனுடையதே. அப்படி முழுவதும் தானல்லாது தனக்கு சற்றும் உரிமையில்லாத ஒன்றுக்காக ஏங்கி அதை அடைந்து மீண்டு தவித்து அவள் அடையும் அத்தனை உணர்வுகளையும் நானும் அடைந்தேன். ஆனால் அங்கென சுட்ட ஒரு உருவமோ அல்லது நபரோ இருக்கவில்லை. அவை அனைத்தையும் வேறொரு உருவெளித்தோற்றமென்றே கண்டேன். நீலம் முழுக்க முடியும்போது பித்து நிறைந்த பெண்ணின் இனிமையை அடைந்தேன்.


அப்படி ஒரு பிரேமை எனக்கு சாத்தியமல்ல. நீங்கள் ராதை மனம் என்றொரு கட்டுரையில் அப்படி பெண்களென இருவரைத்தவிர எவரையும் சுட்ட முடியாதென்று சொல்லியிருந்தீர்கள். ஆம் இன்று இங்கு எனும்போது நான் ஒரு சிறுமையும் தவறுகளும் பொறாமையும் அன்பும் ஒருங்கே நிறைந்தவள். வேறொரு தளத்தில் இவ்வுலகம் முழுவதையும் நான் குனிந்து பார்க்கிறேன். அப்போது என் மனத்திலூறும் கனிவையும் இனிமையையும் வேறு யாருக்கும் திறந்து காட்டிவிட முடியாது. அக்கணத்தில் ஒரு பெண்ணென எவர் முன் நின்றாலும் தடுமாற்றம் நிறைந்த பெண்னெண்றே வெளிப்படுவேன். என் மனத்திலூறுவது முற்றிலும் அயலான ஒன்று. எப்போதும் இரண்டான ஒரு வாழ்க்கையை மட்டுமே நான் வாழ முடியும். என்னிடமுள்ளது அனைத்தையும் துறந்து விடும் ப்ரேமை அல்ல. அப்படி ஆவதற்கான ஒரு முயற்சி மட்டுமே. மெல்ல மெல்ல அனைத்தையும் விலக்கி அவ்விடத்தை அடையும்போது எனதென்று எதுவுமிருக்கக் கூடாதென்று உணர்கிறேன். அவ்விடத்தை அடைவேனா என்று தெரியவில்லை.


முதற்கனலுக்கு முற்றிலும் வேறாக நீலம் படிக்கையில் தரையில் மண் துகள் ஒன்றுடனொன்று ஒட்டுக்கொண்டிருப்பதற்கு கூட காமம் காரணம் என்று தோன்றியது. அனைத்தையும் இயக்கும் மேலான விசையென்று காமமே தெரிந்தது. இன்று விலகி நின்று பார்க்கையில் பசி இதில் எந்த இடத்தை எடுத்துக்கொள்ளும் என்று யோசிக்கிறேன். நான் பசித்திருந்த நாட்களில் காமமற்று இருந்தேனாவென. காமம் இருந்தது அதை ஒதுக்கிச் செல்ல பசி உதவி செய்தது. இன்று அனைத்து செயல்களும் காமத்திற்கான பின்னணிச்செயல்களே என்று தோன்றுகிறது. ஒன்றை அடைந்து விழுங்கி வேறல்லாதாகி அது அடையவிரும்பும் இடமென்ன?
ஒரு அன்னையென எண்ணுகையில் இவ்வுலகம் முழுக்க பொருளுடன் இருந்து என் பிள்ளைகளுக்காக மட்டுமே வாழ்ந்து மீளவிரும்பிய வாழ்வு ஒன்று. இன்று அனைத்தும் மிக அகலே நின்று நான் என்னை மட்டுமே அவதானிக்கும் காலத்தில் பெற்றதும் வளர்த்ததும் அர்த்தமற்றதென, நான் அடைந்த எதுவும் பொருளற்றதென எண்ணும் ஒரு இடம் ஏன் வருகிறது? ஊஞ்சல் போல அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்கும் ஆடும் ஊசல் நானா?


சத்தியவதியோ குந்தியோ பாஞ்சாலியோ அடைய விரும்பிய அந்த அதிகாரபீடம். அப்பீடத்திற்கு சற்று முன்பே அவர்கள் அதைக் கைவிடும் அல்லது கைவிட வேண்டிய நிலையில் சமரசம் செய்து கொள்ள வைப்பது எது? ஆண்கள் இத்தனை எளிதில் சமரசம் செய்து கொள்கிறார்களா? எனில் பெண்ணை சமரசம் செய்து கொள்ள வைப்பதும் ஆணை போரிட வைப்பதும் எது? பேரன்னையர் என்று பெண்களைச் சொல்லுகிறோம்.  ஆனால் கண்ணனே இறைஞ்சுகிறான். ஒரு அடி எடுத்து வைக்கும்படி. இத்தனை பேரன்பு பெண்ணுக்கு சாத்தியமா? அல்லது பெண்ணுக்கு இது எதுவும் பொருட்டல்ல. எனில் இந்த ஆட்டத்தில் அவள் பங்கு என்ன? வெறுமே உடலென எஞ்சி இறப்பதா?


இப்பிரபஞ்சம் முழுமையும் இரவென பகலென எழுந்து மறைந்து பூத்து கனிந்து பிறந்து இறக்கும் அனைத்துக்கும் முன்பே ஒரு நியதி இருக்குமெனில் இங்கு நாம் செய்வதற்கு என்ன உள்ளது? அதை அறமென்றும் அல்லதென்றும் தேர்ந்து செய்யச் சொல்லும் நெறிகள் எத்தனை அபத்தமானவை! செயலும் செயலின்மையுமே முற்றிலும் வேறொரு நெறியால கட்டுப்படுத்தப்பட்டதெனில் இதை நான் செய்கிறேன் என்பதும் துயரமும் அன்பும் என்ன பொருளுடையது?
இவையனைத்தும் அபத்தமெனில் உடல் உணரும் அனைத்தையும் உண்மையில்லையா என்ன?  எனில் நான் படிக்கும் வேதாந்தத்த்திலிருந்து நான் அடைவது என்ன?

எஸ்